இலங்கை

யாழ்ப்பாணத்தில் பாலியல் குற்றவாளிகளுக்கு 10 வருட சிறை விதிப்பு



காதலனுடன் இருந்த 18 வயது பெண்ணை மூவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய வழக்கில் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இந்த தீர்ப்பை இன்று (07.03.2017) வழங்கியுள்ளார்.
யாழ்ப்பாணம் முள்ளிவெளியில் 2014ஆம் ஆண்டு பங்குனி மாதம் 7 ஆம் திகதி இந்த பெண் ஒருவர் தனது காதலனுடன் இருந்துள்ளார். அப்போது அங்கே வந்த மூவர் காதலனை தாக்கிவிட்டு பெண்ணை கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருந்தனர். இதனை அறிந்த மூன்று இராணுவத்தினர் பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர். காவல் துறையினர் முதல் இரண்டு குற்றவாளிகளை விரைவாக கைதுசெய்துள்ளனர். இதற்காக இராணுவத்தினரையும் காவல் துறையினரையும் நீதிபதி இளஞ்செழியன் பாராட்டினார். 
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு குற்றவாளிகள் இருவரும் நட்டஈடாக தலா பத்து இலட்சம் செலுத்த வேண்டும். செலுத்தத் தவறினால் மேலும் பத்து வருடம் கடூழியச் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும். அத்துடன் எதிரிகள் இருவரும் தலா பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்த வேண்டும். தவறினால் 6 மாதம் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
தலைமறைவாகியுள்ள மூன்றாவது எதிரி குறித்த விசாரணை எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதி நடைபெறும் என நீதிபதி தெரிவித்தார்.

இதேவேளை பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலன் தனது காதலியை கைவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்துள்ளார். 

0 comments:

Post a Comment

Powered by Blogger.