அரசியல்

அப்போலோவில் 27 சி.சி.டி.வி கேமராக்கள் செயலிழக்க வைக்கபட்டதன் மர்மம் என்ன?



ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் இது தொடர்பில் சி.பி.ஐ விசாரணை வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் கோரியுள்ளனர்.  
இவ்வணியினர் டெல்லியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியைச் சந்தித்து, ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியிருந்தனர். தற்போது இந்த கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

ஜெயலலிதா மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது அப்போலோ மருத்துவமனையின் வெளியே, உள்ளே, இரண்டாம் தளம் ஆகியவற்றில் இருந்த 27 சி.சி.டி.வி கேமராக்கள் செயல் இழக்க வைக்கப்பட்டுள்ளன. இதற்கு என்ன காரணம்?  
போயஸ் தோட்டத்திற்கு அம்புலன்ஸ் வந்து ஜெயலலிதாவை ஏற்றி சென்றது, அப்போலோ மருத்துவமனைக்கு அம்புலன்ஸ் வந்து ஜெயலலிதா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டது என எந்த ஒரு விடயமும் சி.சி.டி.வியில் பதிவாகவில்லையா? எங்கே அந்த பதிவுகள்? 


ஜெயலலிதா நன்றாக இருக்கிறார், சாப்பிடுகிறார், பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக்கொள்கிறார் என்று கூறிவிட்டு திடீர் என இதயத் துடிப்பு முடக்கத்தால் ஜெயலலிதா மரணமுற்றார் என்று கூறுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதாவை பார்க்க சசிகலா தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படாதது ஏன்? ஒரு சிலரையாவது உரிய பாதுகாப்பு வசதிகளுடன்ஜெயலலிதாவை பார்க்க அவரது அறைக்குள் அனுப்பாதது ஏன்? இவ்வாறு ஜனாதிபதியைச் சந்தித்த ஓபிஎஸ் அணியினர் கேள்விகளை எழுப்பியுள்ளனர். 

அப்போலோ மருத்துவமனை தந்த ஜெயலலிதாவின் டிஸ்சார்ஜ் அறிக்கையில், ‘அவர் கீழே விழுந்துதான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால், ‘அவர் எங்கே, எப்படி கீழே விழுந்தார்? யாராவது தள்ளி விட்டார்களா? எதற்காகத் தள்ளிவிட்டார்கள்? என்ற கேள்விகள் உள்ளன.


சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்போலோ மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்த மனுவில், ‘இனிமேல் காப்பாற்ற முடியாது என்ற சூழ்நிலையில்  அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளை ஒப்புதலோடு நிறுத்தினோம்’ என்று சொல்லியுள்ளார்கள். யார் முடிவெடுத்தது? யாருடைய சம்மதத்தின் பேரில் சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன? யாரிடம் கையெழுத்து வாங்கினார்கள்? போன்ற கேள்விகள் சந்தேகங்கள் பொதுமக்களிடம் உள்ளன.

சி.பி.ஐ விசாரணை நடத்தி இந்த கேள்விகள் சந்தேகங்களுக்கான விடையை உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று ஜனாதிபதியிடம் கேட்டுள்ளோம். மிகவும் கவனமாக எங்கள் கோரிக்கையை அவர் செவிமடுத்தார். விரைவில் சி.பி.ஐ விசாரணை குறித்த அறிவிப்பு வெளியாகும்.உண்மை தெரியும் வரை எங்கள் நடவடிக்கைகள் தொடரும் என ஜனாதிபதியை சந்தித்த ஓபிஎஸ் அணியினர் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.