இப்படி பண்றீங்களே

இளையராஜா பாலசுப்ரமணியம் மோதல்



இசைஞானி இளையராஜாவுக்கும் பாடகர் பாலசுப்ரமணியத்திற்கும் மீண்டுமொருமுறை மோதல் ஏற்பட்டுள்ளது.
பாலசுப்ரமணியம் உலகம் முழுவதும் எஸ்.பி.பி. 50 எனும் தொடர் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தற்போது அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார். மேலும் பல நாடுகளிலும் இசை நிகழ்ச்சி நடத்த இருக்கிறார்.

இந்த நிலையில் இளையராஜா இசையமைத்த பாடல்களை இந்த இசைநிகழ்ச்சிகளில் பாடக் கூடாது என்றும், மீறி பாடினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இளையராஜாவின் வக்கீல் தனக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளதாக பாலசுப்ரமணியம் முகநூலில் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பும் சில தடவைகள் இருவருக்குமிடையே மோதல்கள் நடந்திருக்கின்றன. ஒரு கட்டத்தில் பாலசுப்ரமணியத்தை முற்றாக நிராகரித்த இளையராஜா அவரை தனது இசையில் பாட அனுமதிக்கவில்லை.
பாலசுப்ரமணியத்திற்கு பதிலாக அவரைப்போலவே குரல் ஒற்றுமையுள்ள பாடகர் மனோவை இளையராஜா அறிமுகப்படுத்தியிருந்தார்.

இளையராஜா நேரடியாகவே தனது கருத்தை சொல்பவர். மேடையில் ஆளை வைத்துக்கொண்டே விமர்சித்து விடுவார். பொதுவாகவே  இளையராஜா தலைக்கனம் உள்ளவர், ஏனையவர்களை மதிப்பதில்லை என்ற கருத்து உண்டு.

இயக்குனர் மிஷ்கினை மேடையில் வைத்துக் கொண்டே, மிஷ்கின் போலியாக நடிக்கிறார், போலியாக புகழ்கிறார் என்று விமர்சித்திருந்தார்.
பின்னர் மிஷ்கினும் இளையராஜாவை பலரிடமும் விமர்சித்திருந்தார். இளையராஜாவின் வீட்டுக்கு போனபோது தண்ணீர்கூட தரவில்லை. இளையராஜா அருகில் வைத்திருந்த தண்ணீர் போத்தலை கேட்டேன். ஆனால் அது நான் குடிக்க வைத்திருக்கிறேன் உனக்கு தர முடியாது என்று சிறு பிள்ளை போல சொன்னார். இளையராஜா அப்படிப்பட்ட குறுகிய மனம் படைத்தவர் என்று மிஷ்கின் கூறியதாக செய்திகள் வந்தன.

ஒரு கட்டத்தில் தனது தம்பியான கங்கை அமரனுடனும் இளையராஜா மோதினார். கங்கை அமரன் தனியாக இசையமைப்பதை இளையராஜா விரும்பவில்லை. இன்றுவரை அவர் கங்கை அமரனை விரோதியாகவே பார்க்கிறார்.

இயக்குனர் பாக்கியராஜின் ஆரம்பகால திரைப்படங்களில் கங்கை அமரன் இசையமைத்திருந்தார். இதனால் பாக்கியராஜுடனும் கோபப்பட்டிருக்கிறார் இளையராஜா. இந்த நிகழ்வு பற்றி இப்படி கூறியிருந்தார் பாக்கியராஜ்:

'நான் முதன்முதலாக இயக்கிய சுவரில்லா சித்திரங்கள் படத்துக்கு இசையமைத்தவர் கங்கை அமரன். அந்த படம் வெற்றி பெற்றது. அதையடுத்து, மவுனகீதங்கள் படத்துக்கும் அவர்தான் இசையமைத்தார். அந்த படம் வெள்ளிவிழா கண்டது.
ஏவி.எம்.நிறுவனத்துக்காக, முந்தானை முடிச்சு படம் செய்தபோது, இசையமைப்பாளராக கங்கை அமரனைத்தான் போடவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஏவி.எம். நிறுவனத்தினர், இளையராஜாதான் இசையமைக்கவேண்டும் என்றார்கள். கங்கை அமரன் நான் அடுத்த படத்துக்கு பண்ணுகிறேன். இந்த படத்திற்கு அண்ணண் இளையராஜா இசையமைக்கட்டும் என்று சொன்னார்.

நான், இளையராஜாவிடம் சென்றபோது,  நீ கங்கை அமரன் பெயரைத்தானே சிபாரிசு செய்தாய். அதனால் நான் உன் படத்திற்கு  இசையமைக்க மாட்டேன் என்றார்.
அதற்கு நான், அமரன் யார், ஆப்பிரிக்காக்காரரா, உங்க தம்பிதானே என்று அவரை கஷ்டப்பட்டு சமாதானம் செய்தேன்''

இப்படி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக்கொள்ளும் இளையராஜா இப்போது பாலசுப்ரமணியத்திற்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இது குறித்து பாலசுப்ரமணியம் தனது முகநூலில் இப்படி எழுதியுள்ளார்:

ரசிகர்களுக்கு வணக்கம். சியாட்டிலிலும், லாஸ் ஏஞ்சல்ஸிலும் நடைபெற்ற இசைக்கச்சேரியில் கலந்துகொண்டவர்களுக்கும், அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களுக்கும் நன்றி.

சில நாட்களுக்கு முன்பு, இளையராஜாவின் சார்பில் அவரது வழக்கறிஞர், எனக்கும், சரணுக்கும், பாடகி சித்ராவிற்கும், உலகளவில் கச்சேரியை நடத்தும் ஒருங்கிணைப்பாளர்களுக்கும் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த நோட்டீஸில் 'இளையராஜா கம்போஸ் செய்த பாடல்களை அவரின் அனுமதி இல்லாமல் மேடையில் பாடவோ, இசைக்கச்சேரி நடத்தவோ கூடாது. அதையும் மீறி செய்தால் காப்புரிமை சட்டத்திற்கு எதிராகிவிடும். எனவே மிகப்பெரிய அபராதத்தொகையை சட்டப்படி தரவேண்டியிருக்கும்' என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் இந்த மாதிரியான சட்ட திட்டங்கள் பற்றிய புரிதல் எனக்கு இல்லை.

என் மகன் சரண்தான், இந்த உலக கச்சேரியை ஏற்பாடு செய்தார். 'எஸ்.பி.பி.50' என்ற பெயரில் கடந்தவருடம் டொரன்டோவில் முதல் கச்சேரியைத் தொடங்கினோம். அதன்பிறகு ரஷ்யா, ஶ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், துபாய் மற்றும் இந்தியா உட்பட பல நாடுகளில் நிகழ்ச்சி நடத்திவருகிறோம். அப்போதெல்லாம் இளையராஜா சார்பில் எந்த நோட்டீஸும் வரவில்லை. ஆனால் அமெரிக்காவில் இசைக்கச்சேரி நடத்தும் போது மட்டும் ஏன் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்பதுதான் தெரியவில்லை. முதலில் சொன்னமாதிரி எனக்கு இந்த சட்டம் குறித்த அறிவு கிடையாது. ஆனாலும் இதுதான் சட்டம் என்றால் எற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்.

இந்த சூழ்நிலையில் நானும், எங்கள் அணியினரும், இன்றிலிருந்து இளையராஜாவின் பாடல்களை மேடையில் பாட மாட்டோம். ஆனாலும் இந்த கச்சேரி நடக்கவேண்டும். கடவுளின் ஆசீர்வாதத்தில் இளையராஜா தவிர, பல இசையமைப்பாளர்களின் இசையில் நான் பாடல்கள் பாடியிருக்கிறேன். அந்த பாடல்களை இனிவரும் கச்சேரிகளில் பாடுவேன். இனிவரவிருக்கும் அனைத்து கச்சேரிகளுக்கும் உங்களின் ஆசீர்வாதம் இருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் அன்புக்கும், ஆதரவிற்கும் நான் எப்பொழுதும் கடமைப்பட்டிருக்கிறேன்.

உங்கள் அனைவரிடமும் நான் கேட்கும் ஒரே கோரிக்கை, இந்த விஷயம் பற்றி எந்தவிதமான விவாதமோ, கருத்தோ சொல்ல வேண்டாம். கடவுளின் எண்ணம் இதுவென்றால் இதுவே நடக்கட்டும்.


0 comments:

Post a Comment

Powered by Blogger.