உத்தர பிரதேசத்தின் முதல்வராக சர்ச்சைக்குரிய யோகி ஆதித்யநாத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
200 மில்லியன் மக்கள் தொகையுள்ள உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில், 403 தொகுதிகளில் பாஜக 312 தொகுதிகளில் பெரும் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் பா.ஜ.க.வின் இந்த முதல்வர் தெரிவு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத சார்பற்றவர்கள், மென்போக்காளர்கள், இடதுசாரிகள் என பலரும் ஏன் யோகி ஆதித்யநாத் முதல்வராக தெரிவுசெய்யப்பட்டார் என்று கேட்கிறார்கள்? இந்துத்துவா வலதுசாரிகள் ஏன் அவர் தெரிவுசெய்யப்படக்கூடாது என்று பதிலுக்கு கேட்கிறார்கள்.
யோகி ஆதித்யநாத் மீது கொலை முயற்சி, வன்முறையை தூண்டியமை, பயங்கர ஆயுதங்களுடன் நடமாடியமை, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, மற்றவர்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்தமை என பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.
யோகி ஆதித்யநாத் முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மிக கடுமையான பிரசாரங்களை செய்துள்ளார்.
2005ல் தாய் மதத்துக்கு திரும்புதல் என்ற நடவடிக்கையை செயல்படுத்தி கிறிஸ்தவர்கள் பலரை இந்து மதத்தில் இணைத்தார்.
நடிகர் ஷாரூக்கானை லஷ்கர் தீவிரவாத குழு தலைவன் ஹபீஸ் சையதுவுடன் ஒப்பிட்டு பேசிஇருந்தார்.
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை கடுமையாக எதிர்த்து வாக்களித்திருந்தார். இப்படி பல சர்ச்சைகளுக்கு சொந்தக்காரராக ஆதித்யநாத் இருக்கிறார்.
''காஷ்மீர் பிரச்சினைக்கு காங்கிரஸ் கட்சியே பொறுப்பு. நேருவுக்குப் பதிலாக சர்தார் படேல் பிரதமராகியிருந்தால் காஷ்மீர் பிரச்சினையே எழுந்திருக்காது. விரைவில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் விடுதலையடைந்து இந்தியாவின் அங்கமாக மாறும்'' என்று யோகி ஆதித்யநாத் தெரிவித்திருந்தார்.
''நாட்டில் ராம ராஜ்ஜியம் ஏற்படும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம்'' என தொடர்ந்தும் ஆதித்யநாத் கூறிவருகிறார்.
''யோகா எதிர்ப்பவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். பசுவை பாரத மாதாவாக அறிவிக்க வேண்டும். இந்துத்துவத்தின் அடையாளமான பசுவை கொல்லக் கூடாது. நாடு முழுவதும் மாட்டு இறைச்சிக்கு தடை விதிக்க வேண்டும்'' என்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளிட்டு வந்த ஆதித்யநாத் உ.பி.யின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது மேலும் நிலைமையை சிக்கலாகும் என்றே பலரும் கருதுகிறார்கள்.
உத்தர பிரதேசத்தில் 20 வீதமான முஸ்லீம் வாக்காளர்கள் இருந்த போதும் பா.ஜ.க. 312 ஆசனங்களை பெற்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முஸ்லீம் வாக்குகள் பிரிந்தமை, பா.ஜ.க.வுக்கு எதிரான பொது எதிர்க்கட்சி இல்லாமல் போனமை, தந்திரமாக சாதி வாக்குகளை பா.ஜ.க. பெற்றமை போன்ற பல காரணங்கள் இந்த வெற்றிக்கு கூறப்படுகின்றன.
குஜராத் கலவரங்களுக்கு காரணமானவர் என்று கூறப்படும் மோடி இந்தியாவின் பிரதமராக இருக்கிறார்.
தற்போது உ.பி.யில் வன்முறையில் ஈடுபட்ட, குற்ற வழக்குகள் உள்ள ஒருவர் முதல்வராக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். தீவீர வலதுசாரிகளும் மதவாதிகளும் வெற்றி பெற்றுவரும் இந்த அரசியல் சூழல் ஆபத்தானதாகவே உள்ளது.
0 comments:
Post a Comment