''தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு பின்னர் நிறைவேற்றாமல் இருப்பதைப்போல சர்வதேசத்திடம் செய்ய முடியாது. இது முன்னர் மகிந்த ராஜபக்ஷ கற்றுக்கொண்ட கசப்பான பாடம்.
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் 2009ல் ஐ.நா.மனித உரிமை பேரவையில் வாக்குறுதியை கொடுத்துவிட்டு, கூட்டறிக்கையில் கையொப்பம் வைத்துவிட்டு பின்னர் நிறைவேற்றாமல் விட்டதால்தான் இந்த சர்வதேச விசாரணை என்ற விடயமும் வந்தது. மகிந்த ராஜபக்ஷ பதவி விலகவும் நேரிட்டது. எனவே மகிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட நிலையை கவனத்தில் கொண்டு இன்றைய அரசாங்கம் செயல்படவேண்டும். இல்லாவிட்டால் மகிந்தவுக்கு ஏற்பட்ட நிலையே இன்றைய ஆட்சியாளர்களுக்கும் நேரும்'' என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று சனியன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் சுமந்திரன் இந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.
''இறுதிக்கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றங்களை விசாரிப்பதற்கான நீதிமன்ற பொறிமுறையானது உடனடியாக நடைபெறக் கூடிய விடயம் அல்ல.
இந்த நீதிமன்ற பொறிமுறை உருவாக்க முன்பு பல விடயங்கள் செய்யப்பட வேண்டியுள்ளன.
சர்வதேச குற்றங்கள் என்று உலகில் அறிவிக்கப்பட்ட பல குற்றங்கள் இன்னும் இலங்கையில் குற்றங்களாக அறிவிக்கப்படவில்லை. அவை இலங்கை சட்டத்தில் குற்றங்களாக பதியப்படவேண்டும்.
வலிந்து காணாமல் செய்தல் என்பது ஒரு குற்றம் என புதிய சட்டம் வரவுள்ளது. அது போல பல புதிய சட்டங்கள் இலங்கை சட்டத்தில் உருவாக்கப்படவேண்டும். அதன் பின்னரே இந்த நீதிமன்ற பொறிமுறையை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் சுமந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
''2015 ம் ஆண்டு மனித உரிமை பேரவையில் எனக்கும் இலங்கை நீதியமைச்சருக்கும் இடையே நிகழ்ந்த விவாதத்தில் சர்வதேச நீதிபதிகள் இலங்கையில் செயலாற்ற இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் எவ்வித தடையும் இல்லை என்பதை நான் ஐ.நா.மனித உரிமை பேரவை நிபுணர்கள் முன்னிலையில் நான் நிரூபித்தேன். அதை அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள். அதன் பின்னர் தீர்மானத்தில் அது சேர்த்துக்கொள்ளப்பட்டது'' என்று குறிப்பிட்ட சுமந்திரன் மேலும் கூறியதாவது:
''இலங்கை பிரதமர் முன்பு சர்வதேச நீதிபதிகள் இலங்கையில் செயலாற்றுவதை ஏற்றுக்கொண்டு கருத்து வழங்கியிருந்தார்.
ஆனால் இப்போது பிரதமர் கூட சர்வதேச நீதிபதிகள் இலங்கையில் செயலாற்ற முடியாது என்று கூறுகின்றார். இது தவறு. அப்படி இலங்கை அரசியலமைப்பு சட்டத்தில் எங்கும் கூறப்படவில்லை.
அப்படி ஒரு தடை இருப்பதாக சொன்னாலும் கூட அந்த தடையையம் நீக்கி சர்வதேசத்துக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதுதான் இலங்கை அரசாங்கத்தின் கடமை.
சர்வதேச ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுவிட்டு இலங்கை சட்டத்தில் இடமில்லை எனவே செய்ய முடியாது என்று சாக்குபோக்கு கூறுவது தவறு.
தடை இருந்தால் அதை நீக்கும் பொறுப்பும் அரசாங்கத்திடமே உள்ளது. எனவே இந்த விடயத்தில் எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமில்லை'' என்று குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment