தமிழக விவசாயிகள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 14ம் தேதி போராட்டம் ஆரம்பமானது. ஆனால் இன்று வரை மத்திய அரசு இந்த போராட்டத்தை கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்கிறது.
தேசிய நதிநீர் இணைப்பு சங்கத்தின் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்திற்கு அந்த சங்கத்தின் தமிழக தலைவர் அய்யாகண்ணு தலைமை வகிக்கிறார். இரண்டு வாரங்களாக தெருவில் சுமார் 100 விவசாயிகள் போராடி வருகிறார்கள்.
காவேரி மேலாண்மை அமைப்பது, வறட்சி நிவாரணம், பயிர்களுக்கான கடன் தள்ளுபடி, நதி நீர் இணைப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.
அ.தி.மு.க.வின் ஏற்பாட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லீ, மத்திய நீர் பாசன துறை அமைச்சர் உமா பாரதி ஆகியோரை விவசாயிகள் சந்த்தித்து பேசியுள்ளனர். ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை. எனவே விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்கள்.
வங்கியில் கடன் வாங்கி விவசாயம் செய்கிறோம். பாசனத்திற்கு தண்ணீர் இல்லை. விவசாய பொருட்களின் விலை மிகவும் உயர்ந்து விட்டது. ஆனால் எமது உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை.
நிலைமை இப்படி இருக்க வங்கிகளோ வட்டி மேல் வட்டிபோட்டு எமக்கு நோட்டீஸ் அனுப்புகிறார்கள். எம்மால் கடனை கட்டி முடிக்க இயலவில்லை. காலம் பூராகவும் கடனாளிகளாகவே இருக்கிறோம். அரசாங்கத்திடமிருந்து எமக்கு எந்த நிவாரணமும் இல்லை என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.
இந்த பிரச்சனைகளால் தமிழகத்தில் இதுவரை 400 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
மத்திய அரசுக்கு விவசாயிகளின் இந்த கோரிக்கைகள் பெரும் சிக்கலானவை அல்ல. மத்திய அரசால் இலகுவாக தீர்க்கக்கூடிய விவசாயிகளின் இந்த கோரிக்கைகள் இரண்டு வாரங்கள் ஆகியும் கண்டு கொள்ளப்படாமல் இருக்கின்றன.
இதற்கிடையே நெடுவாசல் போராட்டத்தில் பொய் வாக்குறுதியை கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றிய பாஜக. அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் இந்த போராட்டத்தையும் கைவிடும்படி ட்விட்டரில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
0 comments:
Post a Comment