மகிந்த ராஜபக்ஸவின் தம்பியும் யுத்தத்தை நடத்தியவருமான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸவே சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தார் என்பதே இன்று இலங்கையில் முக்கிய பேச்சாக உள்ளது. இந்த செய்தி உலகம் முழுவதும் பரவியுள்ளது. 'கொலைப்படையின் தலைவனாக கோட்டபாய ராஜபக்ஸ செயல்பட்டார்' என்று பிரான்ஸ் நாட்டின் ஏ.எவ்.பி. வெளிட்ட செய்தியை வாபஸ் பெறுமாறு கோரி அந்த நிறுவனத்திற்கு கோட்டபாய வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருந்தார்.
செய்தியாளர் லசந்த உட்பட எதிரிகள் என கருதிய ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை கோட்டபாய ராஜபக்ஸ இராணுவ அடியாட்களை வைத்து கொலை செய்துள்ளதாக பலரும் சாட்சியம் வழங்கத் தொடங்கியுள்ளனர்.
கோட்டாபய ராஜபக்ச தலைவனாக இருந்து கொலைப்படையை இயக்கியதாகவும், மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவின் கீழ் அது செயற்பட்டதாகவும் சரத் பொன்சேகா நீதிமன்றத்தில் சாட்சியம் வழங்கியிருந்தார். பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்தே, மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹெந்தவிதாரன தலைமையில் இந்தக் குற்றச் செயல்களை மேற்கொண்ட 18 பாதுகாப்பு அதிகாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
ரிவிர பத்திரிகையின் முன்னாள் முதன்மை ஆசிரியர் உபாலி தென்னக்கோன், தி நேசன் பத்திரிகையின் முன்னாள் பாதுகாப்பு செய்தியாளர் கீத் நொயார் போன்றோர் தாக்கப்பட்ட சம்பவங்களுடனும் இந்தக் குழுவிற்கு தொடர்பு உண்டு எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் கொழும்பு நகரிலும், அதன் புறநகரங்களிலும் தமிழ் இளைஞர்கள் உட்பட 551 பேர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவினால் கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும், கொல்லப்பட்டவர்களின் பெயர் பட்டியல் தன்னிடம் உள்ளதாகவும் அமைச்சர் மனோகணேசன் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
கோட்டபாய ராஜபக்ஸவின் அடியாட்களாக இருந்து அவர் சுட்டிக்காட்டும் நபர்களை கொலை செய்கின்றவர்களாக போலீஸ், ராணுவ அதிகாரிகள் இருந்துள்ளனர். இந்த கொலைகளை செய்வதற்கு அவர்களுக்கு பெரும் பணமும் ஏனைய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் லசந்தவின் படுகொலையில் இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர சம்பந்தப்பட்டுள்ளதாக நீதிமன்றில் சாட்சியங்கள் மூலம் வெளிவந்துள்ளது.
லசந்தவை கொலை செய்தமை மட்டுமல்லாது பலரை கடத்தியமை, காணாமல் போக செய்தமை, கொலை தாக்குதல்களில் ஈடுபட்டமை , செல்வந்தர்களையும் ஏனையவர்களையும் கடத்தி பணம் பறித்தமை போன்ற குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
இதேவேளை லசந்த துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டதாக போஸ்ட்மாட்டம் ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த ரிப்போர்ட்டை வழங்கியவர் வைத்திய அதிகாரி சுனில் குமார. ஆனால் தற்போது, லசந்த கூரிய ஆயுதத்தால் தலையில் குத்தியதால் ஏற்பட்ட கடுமையான காயத்தினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். எனவே சுனில் குமார யாருக்காக பொய்யான அறிக்கையை கொடுத்தார் என விசாரணைகள் நடக்கவுள்ளன.
இவ்வாறு தற்போது இடம்பெறுகின்ற விசாரணையில் வெளிவந்த எல்லாமே கோட்டபாய ராஜபக்ஸவுக்கு எதிராகவே உள்ளன.
இந்த அடிப்படையில் உடனடியாக கோட்டபாய ராஜபக்ஸ கைது செய்யப்பட முடியும்.
ஆனால் அதை செய்ய தற்போதைய அரசாங்கம் பயப்படுகிறது.
கோட்டபாய மீது கைவைத்தால் மக்கள் போராட்டம் ஏற்படலாம், ஆட்சி கவிழ்க்கப்படலாம் என தற்போதைய ஆட்சியாளர்கள் அஞ்சுகிறார்கள்.
0 comments:
Post a Comment