அரசியல்

எல் சல்வடோரில் தங்க வேட்டைக்கு தடை - எழப்போகும் மோதல்



அமெரிக்காவுக்கும் எல் சல்வடோருக்கும் இடையே மோதல் தோன்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. காரணம் சிறிய நாடான எல் சல்வடோர் தமது நாட்டில் உலோகங்கள் அகழ்வதும், கனிமப் படிவுகளைக் கண்டறியும் ஆய்வுகளும் முற்றாகத் தடை செய்துள்ளது. இதனால் பன்னாட்டு கம்பெனிகள் எல் சல்வடோரில் தங்கம் எடுப்பது தடை செய்யப்படுகிறது. அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, இந்தத் தடை உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை உலகை திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.

எல் சல்வடோரில் அமெரிக்க, கனேடிய நிறுவனங்கள் கனிம அகழ்வுகளை செய்து வருகிறன. வெளிப்படையாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக அமெரிக்கா எல் சால்வடோரின் மீது தாக்குதலை நடத்தக்கூடும்.

இந்த அறிவிப்பின் மூலம் எல் சல்வடோர் உலகிலேயே கனிம அகழ்வுகளை முற்றாகத் தடை செய்த முதல் நாடாக  பதிவாகியுள்ளது.
நாட்டில் குறைவடைந்து வரும் சுத்தமான குடிநீரைக் காக்க இந்த சட்டம் தேவயானது என ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எல் சல்வடோரின் தங்கத்தை அகழ்ந்தெடுத்து கொள்ளை இலாபம் சம்பாதித்த வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இந்தத் தடை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடுகள் மிக நீண்ட காலமாக உள்நாட்டு குழப்பங்களாலும், வறுமையாலும் நிலையில்லாத ஆட்சியாலும் துன்பப்பட்டு வருகின்றன.
ஆனால் ஏன் இந்த நாடுகளில் இப்படி பிரச்சனைகள் நடக்கின்றன என்று பெரும்பாலானவர்கள் ஆராய்ந்து பார்ப்பதில்லை.

இப்படி இந்த நாடுகளில் பிரச்சனைகளும் அழிவுகளும் ஏற்பட தங்கம் முதல் எண்ணெய் வரையான வளங்களே காரணங்களாக உள்ளன.

தென் அமெரிக்க நாடுகளில் காணப்படும் வளங்களை சூறையாட பன்னாட்டு கம்பெனிகள் அங்கு அபிவிருத்தி பணிகளை செய்யும் நிறுவங்கள் என்ற போர்வையில் செல்கின்றன. இந்த பன்னாட்டு கம்பெனிகளில் மிக பெரும்பாலானவை அமெரிக்க கம்பெனிகளே. இந்த கம்பெனிகளுக்கு அமெரிக்க அரசாங்கமும் சி.ஐ.ஏ. உளவு அமைப்பும் துணையாக இருக்கின்றன. காரணம் இந்த அமைப்புகளில் இருப்பவர்களில் பலர் பன்னாட்டு கம்பெனிகளின் ஆட்கள்தான்.

தென் அமெரிக்க நாடுகளுக்கு செல்லும் இந்த கம்பெனிகள் நீர் மின்சாரம் முதல் சாலைகள் போடுவது வரை பொருளாதார மேம்பாட்டை குறைந்த செலவில் செய்து தருவதாக வாக்களிக்கின்றன.

இந்த கம்பெனிகளின் உள்நோக்கத்தை தெரிந்துகொள்ளும் சில நாடுகளின் தலைவர்கள் அதனை மறுப்பார்கள்.
கம்பெனிகள் அந்த தலைவர்களை பெரும் பணத்தை லஞ்சமாக கொடுத்து விலைக்கு வாங்க முயற்சி செய்வார்கள்.
அதுவும் சரி வராது விட்டால் மிரட்டல் விடுப்பார்கள். அதற்கும் சரி வராதவர்கள் கொல்லப்படுவார்கள்.

இந்த கொலைகள் விமான விபத்தாக இருக்கலாம். அல்லது உள்நாட்டில் கிளர்ச்சி, இராணுவ புரட்சி, ஆட்சி கவிழ்ப்பு போன்றவற்றில்  போராட்டக்காரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக இருக்கலாம், அல்லது விஷம் கொடுக்கப்பட்டதாக இருக்கலாம். எப்படியோ அந்த நேர்மையான தலைவர் அகற்றப்பட்டு பன்னாட்டு கம்பெனிகளுக்கு சாதகமான தலைவர் பதவிக்கு கொண்டுவரப்படுவார்.

இன்னொருவிதமாகவும் முரண்டு பிடிக்கும் நாட்டை வழிக்கு கொண்டுவருவார்கள். ஒரு நாட்டிற்கு கடனை அள்ளிக்  கொடுப்பார்கள். அந்த நாடு திருப்பி தர முடியாத அளவு கடனை அபிவிருத்திக்கு என்று கொடுப்பார்கள். இதனால் காலத்துக்கும் அந்த நாடு கடன்கார நாடாகவே இருக்கும். பின்னர் அந்த நாட்டில் இருந்து வளங்களையும் சலுகைகளையும் எடுத்துக்கொள்வார்கள்.

தென் அமெரிக்காவில் இவ்வாறு அமெரிக்க பன்னாட்டு கம்பெனிகளின் திட்டங்களை செயல்படுத்தி பல அழிவுகளை ஏற்படுத்தியவர்களில் ஜான் பெர்க்கின்ஸ் என்பவரும் ஒருவர். பின்னர் மனந்திருந்தி இந்த அநியாயங்களை உலகுக்கு வெளிப்படையாக சொன்னார். 'ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்' எனும் நூலில் அவர் இந்த சதி திட்டங்களை விவரமாக எழுதியுள்ளார்.

''மற்ற நாடுகளின் வளங்களைக் கொள்ளைக் கொள்வதில் வளர்ந்த நாடுகளின் நிறுவனங்களும் அந்த நாடுகளின் அரசுகளும் ஓரணியில் நின்றே செயல்படுகின்றன. அவற்றிற்கு துணையாக உலக வங்கியும் செயல்படுகின்றது. அதாவது அரசும் வணிக நிறுவனங்களும் தனித் தனியாக இயங்கிய நிலை மாறி இரண்டுமே ஒன்றாக இயங்கும் ஒரு நிலையே இன்றுக் காணப்படுகின்றது. வணிக நிறுவனங்களின் தலைவர்கள் அரசியலில் பதவிகள் வகிப்பதும், அரசில் பதவியில் இருப்பவர் வணிக நிறுவனங்களின் பங்குதாரராக இருப்பதும், அவர்களே உலக வங்கியிலும் இருப்பதும் அவர்களின் இந்த இயக்கத்திற்கு அடிப்படையாக இருக்கின்றது.

இத்தகைய நிறுவனங்கள் வளரும் நாடுகளுக்குச் சென்று தங்களால் மிகைப்படுத்தப்பட்ட புள்ளி விவரங்களைக் கொண்டு "உங்கள் நாட்டினில் நீங்கள் இத்தகைய திட்டங்களை செயல்படுத்தினீர்கள் என்றால் உங்களின் வளர்ச்சி இத்தனை வருடங்களில் இத்தனை சதவீதமாக உயரும்...மேலும் இந்த திட்டங்களுக்கு உங்களுக்கு கடன் கொடுக்க உலக வங்கியும் தயாராக இருக்கின்றது...இத்திட்டங்களை உங்களுக்காக உருவாக்கிக் கொடுக்கவும் எங்களது நாட்டு நிறுவனங்களும் தயாராக இருக்கின்றன" என்ற வாக்கு உறுதிகளைத் தந்து அந்த நாடுகளை கடன் வாங்க வைக்கின்றன. வளரும் அந்த நாடுகளும் அந்த புள்ளிவிவரங்களை நம்பி கடன் வாங்க ஏற்றுக் கொள்கின்றன. ஆனால் கடன் பெற்றுத் தொடங்கிய அந்தத் திட்டங்களால் கணிக்கப்பட்ட அளவு வளர்ச்சி கிட்டாததால், வாங்கிய கடனை திருப்பித் தர இயலாது வெறும் வட்டியினை மட்டுமே கட்டிக் கொண்டு காலத்தைத் தள்ளும் நிலைக்கு அந்த நாடுகள் வருகின்றன என்றும் அந்த நிலையினை பயன்படுத்தி வளர்ந்த நாடுகளும் அவற்றின் நிறுவனங்களும் அந்த நாட்டின் வளங்களை கொள்ளை அடித்துக் கொள்ள தொடங்குகின்றன'' என்றும் ஜான் பெர்கின்ஸ் மேலும் கூறுகின்றார்.

உதாரணமாக 'என்ரான்' என்ற அமெரிக்க மின்னாற்றல் நிறுவனத்தின் பங்குதாரராக அமெரிக்க அதிபரான புஷ் இருந்தார். அதே என்ரான் நிறுவனம் இன்னும் சில அமெரிக்க நிறுவனங்களுடன் சேர்ந்து இந்தியாவிலேயே மிகப் பெரிய தாபோல் மின்சாரத் திட்டத்தினை (Dabhol Power plan)  நிறுவ மகாராஷ்டிராவில் நுழைந்தது.

அந்த திட்டம் மாபெரும் தோல்வியான ஒன்றாக முடிந்தது. மக்களுக்கு எதிரான வன்முறைகள், திரைமறைவு ஒப்பந்த நடவடிக்கைகள், மின்சாரத்துக்கு அதிகமான விலை நிர்ணயித்தல், சுற்றுச் சூழலை மாசு படுத்தியது போன்ற பல்வேறு அந்த திட்டம் தோற்றுப்போனது.

ஆனால் அந்த அமெரிக்க நிறுவனத்திற்காக இந்தியாவில் வாதாடியவர் இந்தியாவின் முன்னாள் நிதி அமைச்சரான ப.சிதம்பரம். அதேபோல வேதாந்தா நிறுவனத்தின் இயக்குனர்கள் குழுவில் ஒருவராக இருந்தவர் ப.சிதம்பரம்.

வேதாந்தா நிறுவனத்துக்கு ஒரிசா அருகில் உள்ள டோங்கிரியா கொண்டா மலையில் கிடைக்கும் பாக்ஸைட் கனிம வளத்தை அகழ்ந்தெடுக்க அனுமதி வழங்கப்பட்டது.

மலையை தமது பூர்வீக வாழ்விடமாகக்கொண்ட பழங்குடி மக்கள் இந்த கொள்ளையை ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஏனென்றால் மலைகள் அவர்களின் வாழிடம் மட்டுமல்ல கடவுளும் கூட. எனினும் இந்த மக்கள் அங்கிருந்து விரட்டப்பட்டால்தான் அந்த மலையிலுள்ள கனிமத்தை எடுக்க முடியும் என்பதால், தமது சொந்த மக்களது நலன் குறித்து சிந்திக்காத இந்திய அரசாங்கம் அம்மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டது.

பச்சை வேட்டை (Operation Green Hunt) எனும் பெயரில் மோசமான மிக மோசமான படுகொலைகள் நடந்தன. இந்த பச்சை வேட்டை கொலைகளுக்கு அனுமதி வழங்கியது முன்னாள் நிதி அமைச்சரான ப. சிதம்பரம்.

ஏற்கனவே சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டில் புதைந்திருக்கும் பல கோடி டன் உயர்தர இரும்புத்தாது, யுரேனியம், சுண்ணாம்புக்கல், டாலமைட், நிலக்கரி, வெள்ளீயம், கிரானைட், மார்பிள், செம்பு, வைரம், தங்கம், க்வார்ட்ஸைட், கோரண்டம், பெரில், அலெக்சாண்டரைட், சிலிக்கா, புளூரைட், கார்னெட் உள்ளிட்ட 28 வகை அரிய கனிமப் பொருட்களை கொள்ளை அடிப்பதற்காக மக்கள் வேட்டையாடப்பட்டனர். பெரும் நிறுவனங்களான மிட்டல், ஜிண்டால், டாடா, எஸ்ஸார், போஸ்கோ, ரியோ டின்டோ, பிஎச்பி பில்லிடன், வேதாந்தா போன்ற நிறுவனங்களுக்கு கனிமங்களை வழங்குவதற்காக பழங்குடி மக்கள் மீது இந்திய அரசாங்கம் நரவேட்டை நடத்தி வருகிறது. இலட்சக்கணக்கான மக்கள் ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

ஆனால் இந்திய அரசாங்கம் செய்துகொண்டு உலகத்திற்கு இது மாவோயிஸ்ட்களுக்கு எதிரான நடவடிக்கை என்று பொய் கூறி வருகிறது. செய்தியாளர்கள் செல்வதற்கு அனுமதியில்லை. பழங்குடி மக்கள் தொடர்பில் ஆதரவாக கருத்து தெரிவித்தால் அவர்கள் மாவோயிஸ்ட்களாக குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்படுகிறார்கள். பின்னர் அவர்களது சடலங்கள் காடுகளில் வீசி எறியப்படுகின்றன. நூற்றுக்கணக்கான கிராமங்கள் தீயிட்டு எரிக்கப்பட்டுவிட்டன.

இந்த நடவடிக்கை எல்லாமே பழங்குடி மக்களது நன்மைக்காகத்தான் அவர்களது முன்னேற்றத்திற்காகத்தான் என மன்மோகன்சிங் கூறியிருந்தார்.

இவ்வாறு பொருளாதார வளர்ச்சி என்ற போர்வையில் பன்னாட்டு, உள்நாட்டு நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணத்தைப்பெற்றுக்கொண்டு நாட்டை கொள்ளையடிப்பதற்கு உலகிலுள்ள பல அரசாங்கங்கள் சட்ட அனுமதி வழங்குகின்றன. ஆப்பிரிக்காவில் பல நாடுகளில் இடம்பெற்று வருகின்ற உள்நாட்டு குழப்பங்களுக்கும் , போர்களுக்கும் இதுவே காரணமாக அமைகிறது. நைஜீரியாவில் பெற்றோலிய எண்ணெய் வளத்திற்காகவும், கொங்கோவில் கொல்டான் (Coltan) கனிமத்திற்காகவும் பல வல்லரசுகளின் ஆசீர்வாதத்துடன் கொள்ளைகள் இடம்பெறுகின்றன.

கொள்ளையுடன் நின்று விட்டால் பரவாயில்லை அதற்கு தடையாக இருக்கின்ற மக்கள் முக்கியமாக பிரதேசவாசிகள் பழங்குடிகள் ஆயிரக்கணக்கில் இலட்சக்கணக்கில் படுகொலை செய்யப்படுகிறார்கள். ஏற்கனவே சியராலியோனில் வைரங்களுக்காக இதே மேற்கு நாடுகள் படுகொலைகளை ஏற்படுத்தின என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இந்த படுகொலைகளை மேற்கு செய்தி ஊடகங்கங்கள் உள்நாட்டு குழப்பங்களாக குறிப்பிட்டு உண்மையை மறைத்து வருகின்றன.

இலங்கையில் கூட விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக இந்த வளங்களை சுரண்டுதல் என்ற விடயம் அமைந்தது. இலங்கையின் மூன்றில் இரண்டு பங்கு கடல் வளம், அதிலுள்ள மீன் வளம் மட்டுமல்லாது எண்ணெய் வளமும் குறிப்பிடத்தக்கதாகும். அதே போல கிழக்கு கரையோரங்களில் காணப்படுகின்ற இல்மனைட் போன்ற தாதுப்பொருட்களை (மற்றும் திருகோணமலை துறைமுகம் போன்றவையும் கூட) இந்தியாவிற்கும் சீனாவிற்கும் வழங்குவதற்காக விடுதலைப்புலிகளை களத்திலிருந்து அகற்றவேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு இருந்தது.

முன்னர் தமிழக அரசாங்கமானது ஒரு இலட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் மதிப்பு கொண்ட கவுந்தி வேடியப்பன் மலையில் இருக்கும் கனிவளங்களை ஜின்டால் நிறுவனத்துக்கு வழங்கியது. இந்த பரிமாற்றத்தில் அரசியல்வாதிகளுக்கு பலகோடிக்கணக்கான பணம் கிடைத்தாலும், விற்பனைத்தொகையில் தமிழக அரசு உரிமை ஊதியம் (ரோயல்டி) 0.02% மட்டுமே என்பது பலரும் அறியாதது.

இப்படி உலகம் எங்கும் கனிம வளங்களுக்காகவும், எரிபொருளுக்காகவும் பன்னாட்டு கம்பெனிகள் கொடுமைகளை செய்து வருகின்றன.

இப்படியான சூழலில் சிறிய நாடான எல் சல்வடோர் துணிந்து பன்னாட்டு கம்பெனிகள் தங்கம் எடுப்பதை தடுத்துள்ளது. உலகத்துக்கே முன்மாதிரியான இந்த செயல் பாராட்டப்படவேண்டியது. அதேவேளை இதனால் எல் சல்வடோர் அமெரிக்கா போன்ற நாடுகளின் மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் உள்ளாக வேண்டி வரலாம்.
ஆனால் அந்த தாக்குதலுக்கு சொல்லப்படப் போகும்  காரணம் வேறாக இருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.

-  என். ஜீவேந்திரன்





0 comments:

Post a Comment

Powered by Blogger.