அரசியல்

புலிகளின் பகுதியில் மக்கள் கொல்லப்பட்டதற்கு புலிகளே பொறுப்பு



''மனிதாபிமான சட்டத்தில் தத்தமது கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் மக்களின் பாதுகாப்பை அந்தப் பிரிவினரே உறுதிப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. எனவே தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தால் அதற்கு அந்த இயக்கமே பொறுப்பேற்க வேண்டும். அந்த மக்களை பாதுகாப்பது அவர்களின் பொறுப்பாகும். ஆகவே மனிதாபிமான சட்டத்தின் கீழ் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலிருந்த பொதுமக்களை கொலை செய்த குற்றச்சாட்டை அரச படை மீது சுமத்தமுடியாது. அதேபோன்று வைத்தியசாலை என்றால் அதில் நோயாளர்கள் இருக்க வேண்டும். நோயாளர்கள் இல்லாத வைத்தியசாலைகளுக்கு குண்டுத்தாக்குதல் நடத்தமுடியும். வைத்தியசாலையிலுள்ள நோயாளர்களை அகற்றிவிட்டு அங்கிருந்து படையினர் மீது தாக்குதல் நடத்தும்போது பதில்தாக்குதல் நடத்துவதில் தவறில்லை'' என்று முன்னாள் இலங்கை கடற்படைத் தளபதி ரியர்அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

''சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றத்தில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த அரச படையினரை கொண்டு நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதை தடுக்க மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்கி போராட வேண்டும்'' என்றும் முன்னாள் கடற்படைத் தளபதி நேற்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜெனீவாவில் நடந்து முடிந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதி சரத் வீரசேகர கலந்துகொண்டிருந்தார். அங்கு இலங்கை அரச படைத்தரப்பு வாதங்களை முன் வைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவாவிலிருந்து திரும்பிய அவருக்கு நேற்று மகிந்த தரப்பு எதிர்க்கட்சியினர் பெரும் வரவேற்பைக் கொடுத்தனர்.

அதன் பின்னர் முன்னாள் தளபதி செய்தியாளர்களை சந்தித்தார். ''ஸ்ரீலங்கா இராணுவம் உலகின் மிகவும் மோசமான பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடித்தது. அரச படையினர் மீது சுமத்தப்பட்டுள்ள போர் குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை என்பதை நான் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சரியாக தெளிவுபடுத்தினேன்.
தற்போதைய மைத்ரி – ரணில் அரசாங்கம் ஐ.நா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளது. இந்த அரசாங்கம் இரண்டுவருட கால அவகாசத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் அரச படையினரை சர்வதேச போர் குற்ற நீதிமன்றில் நிறுத்த முயற்சி நடக்கிறது. இதனை மக்களால் மாத்திரமே தடுக்க முடியும்'' என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அரச படையினரை போர்க் குற்றச்சாட்டுக்களிலிருந்து பாதுகாப்பதாகக் கூறி சரத் வீரசேகர போன்றவர்கள் அரச படையினரை போர் குற்றவாளிகளாக அறிமுகப்படுத்தி வருவதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன குற்றம்சாட்டியுள்ளார்.

''முன்னாள் இலங்கை கடற்படைத் தளபதி சரத் வீரசேகர குற்றவாளிகளின் வாக்குமூலங்கள் அடங்கிய அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்து, அரச படையினரை போர்க் குற்றவாளிகளாக மாற்றி விட்டுள்ளார். உண்மையில்  மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை நடத்தி அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை என்பதை நிரூபிப்பதன் ஊடாகவே அரச படையினர் மீதான குற்றச்சாட்டுக்களை அகற்ற முடியும்'' என மைத்ரிபால சிறிசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

2015 ஆம் ஆண்டு, ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில், போர்க் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள், சட்டத்தரணிகள் ஆகியோரின் பங்களிப்புடன், நம்பகமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனை இலங்கை அரசாங்கமும் ஏற்றுக் கொண்டிருந்தது.  

ஆனால் இந்த 15 மாதங்களில் முக்கியமான இந்த தீர்மானங்களை செயல்படுத்த இலங்கை தீவிரம் காட்டவில்லை.
மாறாக இலங்கை அரசாங்கம் போர் குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடம் இல்லை. அதற்கு இலங்கை சட்டத்தில் இடமில்லை என வெளிப்படையாக தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தமிழர் தரப்பும், மனித உரிமை அமைப்புகளும் இலங்கை அரசாங்கத்தை வெகுவாக கண்டித்திருந்தனர். பலரும் கால அவகாசம் வழங்கக் கூடாது என்று கூறியிருந்தனர்.

ஆனால் எதிர்பார்த்தபடியே சர்வதேச நாடுகள் இலங்கை மீது கடுமையான நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.

இம்மாதம் நடந்து முடிந்த ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடரில் வாக்குறுதிகளை நிறைவேற்ற  இலங்கைக்கு மேலும் 2 வருட கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.