மகிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித ராஜபசக்சவினால் கொலை செய்யப்பட்டதாக கருதப்படும் ரகர் விளையாட்டு வீரர் வசிம் தாஜூடினின் கொலை வழக்கு மறைக்கப்பட்டுவிடும் அபாயம் தோன்றியுள்ளது.
பிரபல றகர் விளையாட்டு வீரரான தாஜூடீன் கடுமையாக வதை செய்யப்பட்டு ,அந்தரங்க பகுதிகள் வெட்டப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். பின்னர் அவரது வாகனத்தில் உடல் வைக்கப்பட்டு எரிக்கப்பட்டுள்ளது. பின்னர் இது ஒரு விபத்தாக அறிவிக்கப்பட்டது.
மகிந்த ராஜபக்ஸவின் மகன் யோஷித, யசாரா அபேநாயக்க என்ற பெண்ணை காதலித்ததாகவும், ஆனால் யசாரா தாஜுதீனை காதலித்ததாகவும் செய்திகள் வந்திருந்தன. இந்த காதல் போட்டியினால் தான் தாஜுதீனை, மகிந்தவின் மகன் யோஷித கொலை செய்ததாக செய்திகள் மேலும் குறிப்பிட்டிருந்தன.
யசாரா அபேநாயக்க பிரபல சிங்கள நடிகரான காமினி பொன்சேகாவின் பேத்தி. பிரபல சிங்கள தொலைகாட்சி நாடக இயக்குனர் ஆனந்த அபேநாயக்கவின் மகள்.
யசாரா றகர் விளையாட்டு வீரர் தாஜூடீனை காதலித்ததாகவும் இதனால் கர்ப்பமானதாகவும் அப்போது ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தன. இதே சம காலத்தில் மகிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்ஷவும் யாசாராவின் மீது காதல் கொண்டிருந்தார். யாசாரவின் தந்தை அபேநாயக்க தனது மகள், ஒரு முஸ்லிமான தாஜூடீனை விட நாட்டின் அதிபராக இருக்கும் மகிந்த குடும்பத்தில் திருமணம் செய்வதையே விரும்பியுள்ளார்.
இந்த சூழலில் மகிந்தவின் மகன் யோசித நடத்திய சீஎஸ்என் தொலைக்காட்சியில் நிறைவேற்று அதிகாரியாக யசாராவுக்கு பதவியும், மில்லியன் கணக்கான பணமும் வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த சூழலில் யோசித ராஜபக்ஸ றகர் விளையாட்டு அமைப்பில் தனது அதிகாரத்தை செலுத்தியுள்ளார். யோசித விளையாடும் போது யாரும் அவரை தடுக்க கூடாது என்று ஏனைய வீரர்கள் மிரட்டப்பட்டிருக்கின்றனர். போட்டியாளர் இல்லாமலே வெற்றி பெறவேண்டும் என்பதே யோசித ராஜபக்ஸவின் விருப்பமாக இருந்துள்ளது.
திறமையான வீரர்கள் பலர் இருக்க மகிந்தவின் மகன் என்ற காரணத்தால் அவருக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. விளையாட தெரியாத யோசித எப்படி முன்னுரிமை வழங்கலாம் என்று தாஜூடீன் கண்டித்துள்ளார். இதனால் இந்த இருவருக்குள்ளும் அடிக்கடி மோதல்கள் நடந்துள்ளன.
யோசித பல தடவைகள் தாஜூடீனுக்கு கொலை மிரட்டல் விட்டிருந்தாலும் தாஜூடீன் அதனை கண்டுகொள்ளவில்லை.
யோசித்த ராஜபக்ஸவுக்கு றகர் விளையாடவும் தெரியாது, பெண்ணை கையாளவும் தெரியாது என்று நண்பர்களிடம் கேலி செய்திருக்கிறார்.
காதலிலும் விளையாட்டிலும் தாஜூடீனிடம் தோல்வியடைந்த யோசித ராஜபக்ஸ, தனது தந்தையின் அதிபர் பாதுகாப்பு பிரிவின் உதவியுடன் தாஜூடீனை 17.05.2012ல் கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்த தகவல்கள் தாஜூடீன் கொலை குறித்த விசாரணைகளில் வெளிவந்தது.
மகிந்த ராஜபக்ஸ நாட்டின் அதிபராக உச்ச அதிகாரத்தில் இருந்ததால் கொலை விசாரணை, விபத்தாக மாற்றப்பட்டு முடிக்கப்பட்டது. முக்கோண காதலில் சம்பந்தப்பட்ட யசாரா அவுஸ்திரேலியா நாட்டிற்கு இலங்கை தூதரக அதிகாரியாக அனுப்பப்பட்டார்.
இந்த கொலையை மறைத்து விசாரணைகளை நிறுத்தி விபத்து என வழக்கு முடிக்கப்பட்டதில், இலங்கையின் பொலிஸ்மா அதிபராக இருந்த என்.கே.இலங்ககோன், துணை பொலிஸ்மா அதிபராக இருந்த அனுர சேனநாயக்க, நாரஹென்பிட்டிய குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேரா, இராணுவ உயரதிகாரியான கப்டன் திஸ்ஸ, அதிபர் பாதுகாப்பு படையினர் போன்ற பலர் சம்பந்தப்பட்டுள்ளதாக விசாரணையில் வெளிவந்தது.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பிறகு இந்த கொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதன் பின்னரே மேலே கூறப்பட்ட ஏராளமான தகவல்கள் விசாரணையில் வெளிவந்தன.
கொலையை செய்தது மகிந்த ராஜபக்ஸவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்சவே என்ற தகவல்கள் பல சாட்சியங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.
இதன் அடிப்படையில் யோசித கடுமையான தண்டனைக்கு உள்ளாவார் என்றே செய்தி ஊடகங்கள் எதிர்வு கூறின.
ஆனால் தற்போதைய நிலையை பார்க்கும்போது இந்த கொலை மூடி மறைக்கப்பட்டுவிடும் என்றே தெரிகிறது.
தாஜூடின் கொலை செய்யப்பட்ட தினம் மற்றும் அதனை அண்டிய தினங்களில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மஹிந்தவின் பாதுகாப்புப் பிரிவினால் எழுதப்பட்டு வந்த நாட்குறிப்பு ஆவணத்தில் 2012 மே மாதம் 10 முதல் 22ம் திகதி வரையிலான குறிப்புக்கள் அடங்கிய பக்கங்கள் அகற்றப்பட்டுள்ளதாக தற்போது புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வசிம் தாஜூடின் கொலை தொடர்பில் நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் நடைபெற்ற விசாரணைகளின் போது இவ்வாறு புலனாய்வுப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி 16 தாஜூடின் கொலையுடன் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட நாரஹென்பிட்டிய குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி சுமித் பெரேராவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த கொலையில் சி.சி.டீ.வி. காட்சிகள் முக்கிய ஆதாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. கிருலப்பணை சந்தியில் கிடைக்கப்பெற்ற சி.சி.டீ.வி காட்சிகளில் தாஜூடினின் வாகனத்தை சில வாகனங்கள் பின்தொடர்ந்து செல்வது பதிவாகியுள்ளது.
பின்தொடரும் வாகனங்களை விட்டு விலகிச் செல்ல தாஜூடினின் வாகனம் முயற்சிப்பதனையும் அது தடுக்கப்படுவதும் சி.சி.டீ.வி காட்சிகளில் பதிவாகியுள்ளன. அந்த வாகனங்களில் ஒன்று யோசிதவின் அடியாளாக கொலையை செய்தவர்களில் ஒருவரான கப்டன் திஸ்ஸவின் வாகனம் என்று நம்பப்பட்டது.
இந்தக் காட்சிகள் கொழும்பு பல்கலைக்கழக கணனிப் பிரிவினால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இந்த சி.சி.டீ.வி காட்சிகளை ஆராய்வதற்கு கனடாவுக்கு அனுப்பப்பட்டது. ஆனால் சி.சி.டீ.வி காட்சிகள் தெளிவற்ற நிலையில் காணப்படுவதாகவும், எனவே உறுதியாக எதையும் சொல்ல முடியாது என்ற கனேடிய ஆய்வு கூடத்தின் தலைவர் டேவிட் மெக்கீ அறிவித்திருந்தார்.
தாஜூடின் கொலை விசாரணையை நிறுத்தி வாகன விபத்து என்று முடித்து விடுமாறு அப்போது சிரேஷ்ட துணை பொலிஸ்மா அதிபராக இருந்த அனுர சேனநாயக்க எனக்கு உத்தரவிட்டார் என துணை போலீஸ் அத்தியட்சகர் கமராலலாகே தர்மவர்தன விசாரணையின் போது கூறியிருந்தார். இதனை விசாரணை மேற்கொண்ட புலனாய்வு பிரிவினர் 26.05.2016 நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
விசாரணைகள் ஒருபுறம் நடந்தாலும் மறுபுறம் கொலை ஆதாரங்களை அழிப்பதற்கான வேலைகள் நடந்துள்ளன.
மகிந்த ராஜபக்ஸ தற்போது ஆட்சியில் இல்லாவிட்டாலும் கூட அவரது செல்வாக்கு அரச படைகளிடம் உள்ளது. அவரது ஆதரவாளர்கள் அரசாங்கத்தின் சகல பிரிவுகளும் உள்ளனர். எனவே அவர்களை மீறி இந்த கொலை விசாரணை நேர்மையாக நடக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
முன்னர் இந்த கொலைக்கு நீதி கிடைக்கும் என்று கூறிய அரசாங்க அமைச்சர்கள் தற்போது மௌனம் சாதிக்கிறார்கள்.
தாஜூடீன் கொலையில் இருந்து முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோன் நழுவிச்செல்ல முடியாது. குற்றம் பற்றி அறிந்திருந்தும் அதனை மூடி மறைக்க செயல்பட்டதும் குற்றமே என்று துணை அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்தார். கொழும்பில் கடந்த வருடம் மே 29 செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது துணை அமைச்சர் இவ்வாறு கூறியிருந்தார்.
இதேவேளை கடந்த வருடம் மார்ச் மாதம் தாஜுடின் கொலை சம்பந்தமான சாட்சியங்களை அழிக்க முயற்சி நடப்பதாக நீதிமன்றிற்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த கொலைக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று விரும்பும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிலர் நீதிமன்றிற்கு இந்த கடிதத்தை அனுப்பி இருந்தனர்.
'தாஜூடினின் தொலைபேசி அழைப்பு விபரங்களை, வேறு குற்றவாளி ஒருவரின் பீ அறிக்கையின் ஊடாக பெற்றுக்கொண்டு தாஜூடின் கொலை குறித்த சாட்சியங்களை மூடிமறைக்கவும் அழிக்கவும் முயற்சி நடக்கிறது.
கொலை இடம்பெற்ற காலத்தில் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றிய அதிகாரிகளே சாட்சியங்களை அழிக்க முயற்சி செய்கிறார்கள்' என்று அவர்கள் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர்.
ஜனாதிபதி, பிரதமர், பிரதம நீதியரசர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலருக்கும் இந்த கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.
இந்த கடிதத்தை கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ், தாஜூடின் வழக்கின் ஆவணங்களில் ஒன்றாக இந்த கடிதத்தையும் ஆவணப்படுத்தியுள்ளார்.
இதேவேளை ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க, ரகர் வீரர் வசீம் தாஜுதீன் உட்பட சர்ச்சைக்குரிய படுகொலை வழக்குகளை மூடிமறைப்பதற்கு அரசு முயற்சிப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க அண்மையில் குற்றஞ்சாட்டியிருந்தார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இலஞ்சம் அல்லது ஊழல்கள் பற்றிய விசாரணை ஆணைக்குழு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் கூறியிருந்தார்.
எனவே தற்போது நடக்கும் சம்பவங்கள், வழக்கின் போக்கு, மகிந்தவின் செல்வாக்கு, தற்போதைய அரசாங்கத்தின் பலவீனம் போன்றவற்றை வைத்து பார்க்கும் போது தாஜூடீனின் கொலை வழக்கிலிருந்து யோசித ராஜபக்ஸ தப்பிவிடுவார் என்றே தோன்றுகிறது.
- என்.ஜீவேந்திரன்
0 comments:
Post a Comment