அ.தி.மு.க. சசிகலா அணியின் துணை பொதுச்செயலாளரான டிடிவி.தினகரன் ஆர்.கே.நகர் வேட்பாளராக தன்னை தானே அறிவித்துக்கொண்டுள்ளார்.
இந்த அறிவிப்புக்கு பல பக்கங்களில் இருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆர்.கே.நகர் மக்கள் மத்தியில் இந்த அறிவிப்புக்கு வரவேற்று இல்லாமல் சலலப்பு ஏற்பட்டுள்ளது.
''ஒழுங்கு நடவடிக்கையால் நீக்கப்பட்ட சசிகலா, 5 ஆண்டுகளுக்கு பிறகுதான் பொதுச்செயலாளர் தேர்தலில் நிற்க முடியும். அதிமுகவில் தற்காலிக பொதுச்செயலாளர் என்பது தேவையற்றது. அதிமுகவில் இரு அணிகள் கிடையாது, ஒரே அணி அது நாங்கள் தான். தொண்டர்கள் எங்களிடத்தில் உள்ளனர், எம்எல்ஏக்களை மட்டுமே வைத்துக்கொண்டு அதிமுக என சசிகலா தரப்பு கூறி வருகிறது'' என ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
டிடிவி தினகரன் மீது வழக்குகள் இருப்பதால் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியிடம் கோரிக்கை வைத்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை டெல்லியில் இன்று புதனன்று ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்துப் பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் கருத்துக்களை அவர் பகிர்ந்துகொண்டார்.
''அதிமுக சட்டவிதிக்கு மாறாக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும். ஆர்.கே. நகர் தேர்தலுக்கு முன்பாகவே இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கித் தர வேண்டும். டிடிவி தினகரன் மீது ஃபெரா வழக்குகள் இருப்பதால் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தேர்தல் ஆணையரிடம் நாம் முன் வைத்தோம்'' என ஓ.பி.எஸ். மேலும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஓ.பி.எஸ் அணியின் மதுசூதனன், ஆர்.கே நகரில் போட்டியிடப் போவதாக தெரிகிறது.
இதேவேளை டிடிவி.தினகரனை அதிமுக தொண்டர்களும் ஆர்.கே.நகர் மக்களும் ஏற்க மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் பாஜக மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்திற்கு வந்திருந்த தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் அதிமுகவையோ, தினகரனையோ ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் ''அதிமுக சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது அந்தந்த கட்சியின் உரிமை. அதிமுக வேட்பாளர் யார் என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அதிமுகவையோ, தினகரனையோ ஆதரிக்கும் பேச்சுக்கே இடமில்லை.
திமுகவுக்கே எங்கள் ஆதரவு. யார் போட்டியிட்டாலும் திமுக வெற்றி பெறுவது உறுதி. தினகரன் மீது வழக்குகள் இருப்பது பற்றி தேர்தல் ஆணையம் சட்டப்படி முடிவெடுக்க வேண்டும்.
பணப்பட்டுவாடா, அதிகார துஷ்பிரயோகம் இல்லாமல் மக்கள் விருப்பப்படி வாக்களிக்கும் வகையில் நேர்மையான, நியாயமான முறையில் தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும்'' என்று மேலும் குறிப்பிட்டார்.
இதற்கிடையே மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் குறித்து எந்த முடிவையும் எடுக்க முடியாமல் குழம்பி போயுள்ளனர்.
பா.ம.க., ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள், சி.பி.ஐ ஆகிய கட்சிகள் போட்டியிடுவதில்லையென முடிவெடுத்துள்ளன.
தே.மு.தி.க.வின் சென்னை மாவட்டச் செயலாளரான மதிவாணன் அக்கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் எனது அத்தையின் நகர் என உரிமையுடனும் நம்பிக்கையுடனும் இருக்கிறார் தீபா.
0 comments:
Post a Comment