அரசியல்

இலங்கையில் நிலைமை மோசம் - ஐ.நா அறிக்கையாளர்



''இலங்கையில் நிலைமை மோச­மா­கவே காணப்­ப­டு­கி­றது. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படவில்லை. இதனால் இனங்களுக்கு இடையே நம்பிக்கை இல்லாத நிலை உள்ளது. இன, மத, மொழி ரீதி­யானபிளவுகளும் உள்ளன. அரசியல் சமூக ரீதியாக தமிழ், முஸ்லிம், இந்தியத் தமி­ழர்கள், மற்றும் ஏனைய சிறு­பான்மை மக்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள்''. இவ்வாறு ஐ.நா.சிறுபான்மை விவகாரங்களுக்கான விசேட   அறிக்கையாளர் ரீட்டா இசாக் நாடியா தெரிவித்துள்ளார்.

ஜெனி­வாவில் நடை­பெற்று வரு­கின்ற ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வையின் 34 ஆவது கூட்டத் தொடரில் நேற்று உரையாற்றும் போதே ரீட்டா இசாக் நாடியா இவ்வாறு கூறினார்.

இலங்கை தொடர்­பான அறிக்­கையை சமர்ப்­பித்து உரை­யாற்­றிய ரீட்டா இசாக் நாடியா ''நான் 2016 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் இலங்கைக்கு சென்று நிலைமைகளை பார்த்தேன். புதிய நல்லாட்சி அரசாங்கம் அர­சி­ய­ல­மைப்பு மற்றும் அரச மறு­சீ­ர­மைப்பில் அக்கறை காட்டியது.
யுத்­தத்­திற்குப் பின்­ன­ரான நாட்டில் அமை­தி­யும் ஒற்றுமையும் ஏற்பட உண்­மையை தேடி அறிதல், நல்­லி­ணக்கம், காயங்­களை ஆற்­றுதல், மற்றும் பொறுப்­புக்­கூறல் போன்றவை அவ­சி­ய­மா­கின்­றன. இந்த இலக்­கு­களை ஒரே இரவில் அடை­ய­மு­டி­யாது என்பது உண்மை. ஆனால் நான் கடந்த வருடம் போய் பார்த்த சூழல் இன்றுவரை மாறவில்லை, மேம்படவில்லை'' என்று சுட்டிக்காட்டினார்.

''வடக்­கி­லி­ருந்து இரா­ணு­வத்தை அகற்­றுதல், காணா­மல்­போனோர் பிரச்சனை, நிலங்களை விடுவித்தல், அர­சியல் கைதிகள் பிரச்சனை போன்றவற்றில் இலங்கை அர­சாங்கம் கவனம் செலுத்தி, உடனடியாக தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
சிறு­பான்மை மக்­களை பாது­காப்­ப­தற்­கான உட­ன­டி­யான உறுதியான முக்­கி­ய­மான நடவடிக்கைகளை அர்ப்பணிப்புடன் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் மிகவும் கஷ்டத்திற்கு மத்தியில் தற்போது கிடைத்துள்ள அருமையான வாய்ப்பை இழக்க நேரிடும்.
இப்போது கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு மூலம் இலங்கையின் எல்லா இன மக்களும் இலக்கையர்கள் என்று உணர்த்துவதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதை வீணாக்க கூடாது. சிறுபான்மை மக்கள் பாதுகாப்பில்லை என்று பதட்டப்படும் பயப்படும் நிலை இருக்க கூடாது. யாருக்கும் அநீதி ஏற்படாத நிலையை உருவாக்க வேண்டும். அதை சட்­ட­ரீ­தி­யா­கவும் உறு­திப்­ப­டுத்த வேண்டும்.
எனவே தேசிய நல்லிணக்கத்தை அடைவதற்காக நான் முன்வைத்த பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் தெளிவான குறிக்கோளுடனும் சிறந்த கட்டமைப்புடனும் கால அட்டவணையுடனும் அமுல்படுத்தும் என எதிர்பார்க்கின்றேன். குறிப்பாக சிறுபான்மை மக்களை பாதுகாப்பதற்கான ஆணைக்குழு ஒன்றை இலங்கை அரசாங்கம் உருவாக்கும் என நம்புகின்றேன்'' என்று தனது உரையில் ரீட்டா இசாக் நாடியா மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை நாடியாவின் உரைக்கு பதிலளித்த ஜெனிவா மனித உரிமைகள் பேரவைக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க ''சிறுபான்மையினர் குறித்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார்.

''ரீட்டா இசாக் நாடியா முன்வைத்துள்ள பரிந்துரைகளை, உரிய துறைசார் நிபுணர்களின் ஆலோசனைகளுடன் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை விடயங்கள் தொடர்பில் ஐ.நா. விசேட ஆணையாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளோம்'' என்றும் ரவிநாத ஆரியசிங்க தெரிவித்தார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.