சவூதி அரேபியாவின் எல்லையில் தெற்கு திசையில் அமைந்திருக்கும் நாடு யேமன்.
யேமன் நாடு மிக நீண்ட காலமாகவே உள்நாட்டு போராட்டங்கள் கிளர்ச்சிகளால் பாதிக்கப்பட்டு வருகிறது. 50 வருடங்களுக்கு மேலாக நிலையில்லாத ஆட்சிகளே அங்கு நடந்திருக்கின்றன.
யேமன் நாட்டில் பல்வேறு இனக்குழுக்கள் உள்ளன. இஸ்லாம் மதத்தில் உள்ள இரு பெரும் பிரிவுகளை சேர்ந்த சுன்னி முஸ்லிம்களும் ஷியா முஸ்லிம்களும் இங்கு வாழ்கிறார்கள்.
உலகில் சுன்னி முஸ்லிம்களுக்கு சவூதி அரேபியாவும் ஷியா முஸ்லிம்களுக்கு ஈரானும் ஆதரவளித்து வருவது போலவே இங்கும் நடக்கிறது. சவூதி - ஈரான் அதிகார போட்டியில் பாதிக்கப்பட்டுள்ள பல நாடுகளில் யேமனும் ஒன்று. ஆனால் யேமனில் மிக பெரிய அழிவு நடந்து கொண்டிருக்கிறது.
உலக மீடியாக்கள் சிரியா, ஈராக், லிபியாவில் நடக்கும் போர்களையும், ஐ.எஸ், அல் கைடா கொடூரங்களையும் முனைப்புடன் காட்டி வருகின்றன. மக்களும் இந்த பகுதிகளில் நடக்கும் போர்களையும் மக்கள் பாதிப்புகளையும் தெரிந்து கொள்கிறார்கள்.
ஆனால் உலகம் கவனிக்காத சவூதி அரேபியாவின் எல்லையில் உள்ள ஒரு மூலையில் மிக பெரும் படுகொலைகள் நடந்து வருகின்றன. யேமனில் நடக்கும் கொடுமைகளை சவுதி -அமெரிக்க செல்வாக்கு உலக கண்களுக்கு மறைத்து வருகிறது.
அரபு வசந்தம் 2011 ல் வட ஆப்பிரிக்காவில் பற்றிக்கொண்டது. ஜனநாயகத்தை, ஊழலற்ற அரசாங்கத்தை வேண்டி வட ஆப்பிரிக்க நாடுகளில் அரபு வசந்த புரட்சி நடந்தது. இதனை தூண்டி விட்டது அமெரிக்காவின் சி.ஐ.ஏ என்ற குற்றசாட்டுகள் உள்ளது. எவ்வாறெனினும் இந்த போராட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள். நல்ல நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட அரபு வசந்தம் எந்த ஒரு நாட்டிலும் நன்மையை தரவில்லை. பெரும் அழிவையும் கொடுமைகளையும் அரபு வசந்தம் பரிசாக வழங்கியது.
அதே நிலைதான் யேமனிலும் ஏற்பட்டது. அப்போது யேமன் அதிபராக இருந்தவர் அலி அப்துல்லா சலே.
இராணுவ தளபதியாக இருந்தவர் அலி மோசென் அல் அஹ்மார். இவர்கள் இருவருக்குமிடையே மோதல் இருந்துவந்தது. அதிபர் அலி அப்துல்லா சலே தனது மகன் முஹமட் அலி சலேவை அதிகாரம் மிக்க இராணுவ தலைவராக நியமிக்க முனைந்ததால் இந்த மோதல் ஏற்பட்டது.
இந்த நிலையில் 2011 அரபு வசந்த மக்கள் எழுச்சியை இருவரும் பயன்படுத்த தொடங்கினர்.
பிரச்சனைகளுக்கு காரணம் 'அவர்தான்' என மக்களிடம் இருவருமே கூறினார்கள். இதனால் யேமன் அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டது. இராணுவமும் இரு பிரிவாக பிரிந்தது. இதனால் யேமன் இராணுவ வலிமை குறைந்தது.
ஏற்கனவே வடக்கு யேமனில் ஷியா முஸ்லிம்களான ஹவுத்தி இனத்தவர் உரிமை கேட்டு போராடி வந்தனர்.
இந்த போராட்டத்தை அப்துல் மலிக் தலைமை தாங்கி முன்னெடுத்து வந்தார். இராணுவம் வலிமை குறைந்த சமயம் பார்த்து ஹவுத்தி இனத்தவர் தமது போராட்டத்தை முழு நாட்டிற்கும் விஸ்தரித்தனர். குறிப்பாக ஷியா முஸ்லிம்கள் அதிகமாக இருந்த வடக்கு பகுதியில் வலிமையாக காலூன்றினர்.
ஹவுத்தி போராட்ட இயக்கம், ஷியா பிரிவு என்பதால் அவர்களுக்கு ஈரானின் ஆதரவு கிடைத்தது.
சவூதி அரேபியா 1980 களில் ஈராக்கை பயன்படுத்தி ஈரான் மீது போரை நடத்தி இருந்தது.
இதனால் இரு நாடுகளுக்கு இடையிலும் மறைமுகமாக மோதல் இன்றுவரை நடந்து வருகிறது. இரு நாடுகளும் நேரடி போரில் ஈடுபடாமல் பிற ஆயுத குழுக்களையும் பிற நாடுகளையும் பயன்படுத்தி போர் நடத்தி வருகின்றன.
சுன்னி இஸ்லாம், ஷியா இஸ்லாம் என்ற இஸ்லாமிய மத பிளவே இவர்களது பிரச்சனையின் அடி நாதமாக உள்ளது.
சுன்னி முஸ்லிம்கள் முகமது நபிக்கு பெண்கொடுத்த மாமனார் அபூபக்கரே முகம்மதுவின் வாரிசு என்று நம்புகிறார்கள். ஷியா முஸ்லிம்கள் முகமது நபியின் மருமகன்களில் ஒருவரான அலியே அவரின் உண்மையான வாரிசு என்று நம்புகிறார்கள்.பெரும்பாலும் இந்த மாமனார் - மருமகன் பிரச்சனையே இஸ்லாமிய நாடுகளில் ஏலவே நடந்த, மற்றும் தற்போது நடக்கும் கொடுமைகளுக்கு காரணமாக உள்ளது.
சவூதி அரேபியாவின் தெற்கு எல்லையில் ஷியா சார்பு ஹவுத்தி போராட்ட இயக்கம் இருப்பது தனது நலனுக்கு நல்லது என்பதால் ஈரான் ஹவுத்தி போராளிகளுக்கு உதவி செய்தது.
இந்த நிலையில் சவூதி அரேபியா தலையிட்டு யேமன் அதிபருக்கும் இராணுவ தளபதிக்கும் இடையே சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தியது. அதன்படி யேமன் அதிபர் அப்துல்லா சலே பதவி விலகுவதாக ஏற்றுக்கொண்டார். யேமனில் நிலையான அரசு இருந்தால்தான் ஈரான் சார்பு ஷியா போராளிகளை அடக்க முடியும் என்பதால்தான் சவூதி அரேபியா இந்த உடன்படிக்கையை ஏற்படுத்தியது.
ஆனால் சொன்னபடி அதிபர் பதவி விலகவில்லை. இதனால் அதிபர் எதிர்ப்பு போராட்டம் உக்கிரமானது.
தொழுகையில் ஈடுபட்டிருந்த அதிபரை குறிவைத்து குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலில் அவர் உயிர்தப்பினாலும் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளானார். எனவே துணை அதிபர் ருப்புல் மன்சூர் பதில் அதிபராக பதவியேற்றார். ஆனால் அவராலும் நிலையான ஆட்சியை கொடுக்க முடியவில்லை. குழப்பம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
இந்த சூழலை பாவித்து ஷியா பிரிவினரான ஹவுத்தி போராளிகள் தமது அதிகார பரப்பை அதிகரித்தார்கள்.
அதே சமயம் தெற்கு பகுதியில் அல் கைடா பயங்கரவாதிகளும் தமது அதிகார பரப்பை அதிகரித்தார்கள். குறுகிய காலத்திற்குள்ளாகவே தெற்கில் பெரும் பகுதிகளை அல் கைடா பயங்கரவாதிகள் ஆக்கிரமித்தார்கள்.
பதில் அதிபர் அதிகாரங்களை எல்லா இனப்பிரிவினருக்கும் சமமாக பகிர்ந்து பிரச்னையை தீர்க்க முயற்சி செய்தார். அதற்கு நாட்டை 6 மாநிலங்களாக பிரித்து சமஷ்டி ஆட்சிமுறை மூலம் ஆளலாம் என்று யோசனை கூறினார். ஆனால் சனத்தொகையில் 40 வீதமான ஹவுத்தி பிரிவினர் தமக்கு போதிய அதிகாரம் இல்லை ஆறில் ஒரு மாநிலமாக தம்மை குறுக்க முயல்வதாக குற்றம் சாட்டினர்.
பேச்சின் மூலம் தீர்வு கிடைக்காததால் 2014 ல் ஹவுத்தி போராளிகள் ஆயுதபோராட்டத்தை தீவிரப்படுத்தி தலைநகரை கைப்பற்றினார்கள். இதையடுத்து அல் கைடாவுடன் போரிட்டுக்கொண்டிருந்த அரச படைகள் தலைநகரை பாதுகாக்க திரும்பின. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அல் கைடா தெற்கில் பெரும் பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டது.
இதேவேளை தலைநகரை கைப்பற்றினாலும் முழு நாட்டையும் ஆளும் எண்ணம் ஹவுத்தி போராளிகளின் தலைவர் அப்துல் மலிக்கிடம் இருக்கவில்லை. அப்படி ஆளப்போனால் தமது உறுப்பினர்களும் வளமும் சிதறிப்போகும். அதனால் தாம் பலமிழந்து விடுவோம் என்பதை உணர்ந்து ஐ.நா. உதவியுடன் சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அந்த உடன்படிக்கை மூலம் தேவையான அதிகாரங்களை பெற்றுக்கொண்டார்.
எனினும் 2015ம் ஆண்டு வரவிருந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முபாரக்கை அரசாங்க தரப்பு முன் நிறுத்தியது. ஆனால் ஹவுத்தி போராளிகள் அவரை எதிர்த்தனர். தாம் சொல்கின்றவரே பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அழுத்தம் கொடுத்தனர். திடீர் என்று முபாரக் கடத்தப்பட்டார்.
இந்த நிலையில் அதிபரும் அரசாங்க உறுப்பினர்களும் பதவி விலகினர். அதிபர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து எப்படியோ தப்பி சவூதி அரேபியா போய் சேர்ந்தார்.
இந்த நிலையில் சவூதி அரேபியா விமான தாக்குதலை ஆரம்பித்தது. தமது எல்லையோரம் ஷியா போராளிகள் பலத்தோடு இருந்தால் தனக்கு பாதிப்பு வரும் என்பது சவூதியின் கணிப்பாக இருக்கிறது. சுன்னி முஸ்லீம்களின் உலக தலைவனாக இருக்கும் சவூதி தனக்கு அருகிலேயே ஷியாக்கள் பலமடைவதை விரும்பவில்லை.
எனவே யேமன் மீது மிக கொடூரமான விமான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அல் கைடாவை அழிப்பதாக கூறி அமெரிக்காவும் தாக்குதல் நடத்துகிறது. துருக்கியும் பங்கெடுக்கிறது.
இதன் விளைவாக 28 மில்லியன் மக்கள் உணவும் தண்ணீரும் இல்லாமல் தவிக்கிறார்கள். 1.5 மில்லியன் குழந்தைகள் பசியில் வாடுகிறார்கள்.
தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு நாளுக்கு 13 பேர் கொல்லப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர்.
வைத்தியசாலைகள் மீதும் விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதால் மருந்துகள் இன்றி மக்கள் தவிக்கிறார்கள்.
யேமனில் தாக்குதல்களை நடத்த சவூதி அரேபியா அமெரிக்காவிடம் ஆயுதங்களும். வெடிப்பொருட்களும், கருவிகளும் வாங்கி குவிக்கிறது. அமெரிக்காவுக்கு இதனால் கொழுத்த லாபம். எனவே மேலும் மேலும் சவூதி தாக்குதல் நடத்த அமெரிக்கா தூண்டி விடுகிறது. முழு ஆதரவு கொடுக்கிறது.
உலகின் சமாதான தூதுவராக சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்ட ஒபாமாதான் இதற்கெல்லாம் மூல காரணம் என்பதை உலக செய்திகள் சொல்வதில்லை.
எப்படியோ ஷியாக்களை அழித்துவிட வேண்டும் என்பதற்காக மனிதர்களை கொன்று குவித்துக்கொண்டிருக்கிறது சவூதி அரேபியா.
-என்.ஜீவேந்திரன்
0 comments:
Post a Comment