உலகம்

கடல் கொள்ளையர்களிடமிருந்து தப்பிய கப்டன்



சோமாலிய கடல்கொள்ளையர்களால் Aris - 13 எனும் எரிபொருள் ஏற்றிவந்த கப்பல் கடத்தப்பட்டது. கப்பலில் இருந்தவர்கள் துப்பாக்கி முனையில் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டார்கள். அதில் இலங்கையை சேர்ந்த எட்டுப்பேரும் அடங்கியிருந்தனர். கப்பலின்  தலைமை மாலுமியாக (கப்டனாக) இருந்தவர் ருவன் சம்பத்.

இந்த கடத்தல் சம்பவம் பற்றி கப்பலின் மாலுமி ருவன் சம்பத் தொலைபேசி மூலம் இலங்கையிலுள்ள உறவுகளுக்கும் ஊடகங்களுக்கும் பல தகவல்களை தெரிவித்துள்ளார்.

''கடல்கொள்ளையர்கள் 13ம் திகதி மாலை எமது கப்பலை கைப்பற்றினார்கள். அவர்களுடைய கைகளில் பல ஆயுதங்கள் இருந்தன். அணிந்திருந்த ஆடை, தொலைபேசி தவிர ஏனைய அனைத்தையும் கொள்ளையர்கள் பறித்துக் கொண்டனர். அவர்களின் கட்டுப்பாட்டிலுள்ள நிலப்பகுதிக்கு கப்பலை எடுத்துச் சென்றார்கள். பின்னர் அங்கு வந்த ஒரு புது குழுவிடம் எம்மை ஒப்படைத்தார்கள். பின்பு எம்மை வேறு இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். விளக்குகள் அனைத்தும் உடனடியாக அணைக்கப்பட்டன.

இந்த சம்பவம் நடந்து கொண்டிருந்த போது திடீர்ரென துப்பாக்கி தாக்குதல் ஆரம்பித்தது. எம்மை காப்பாற்ற சோமாலிய பாதுகாப்பு படை கப்பலில் ஏறி தாக்குதல் நடத்துவதை தெரிந்துகொண்டோம்.
பாதுகாப்பு படை தாக்கும் போது எம்மை முன்னே தள்ளிவிட்டார்கள். இதன் மூலம் பாதுகாப்பு படை தம்மை நெருங்காது கடல் கொள்ளையர்கள் பார்த்துக்கொண்டார்கள்.

தாக்குதல் நடக்கும் போது எம்மை கொல்லப்போவதாக மிரட்டினார்கள். நாங்கள் மன ரீதியாக மிகவும் துன்பப்பட்டோம். ஆனால் அவர்கள் எம்மை உடல் ரீதியாக துன்புறுத்தவில்லை. எமக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. உணவு போதுமான அளவு இருக்கவில்லை. எமது உணவை அவர்கள் எடுத்து சாப்பிட்டார்கள்.

இப்படியான கடல் கொள்ளையர்களை பிடிக்க சோமாலியாவில் விசேட  படை இருக்கிறது. அவர்கள் தான் எம்மை காப்பாற்ற தாக்குதல் நடத்தியிருந்தார்கள். இவர்களுடன் பிரான்ஸ் நாட்டு யுத்தக் கப்பலும் இணைந்துள்ளது.

இந்த நிலையில் நடத்தப்பட்ட பேச்சின் பலனாக கடல் கொள்ளையர்கள் எமது கப்பலை விட்டு தப்பி சென்றார்கள். பாதுகாப்பு படைகள் எம்மை மீட்டு சோமாலியாவின் பொஸாஸோ நகரிற்கு கொண்டுவந்துள்ளனர்'' என கப்பலின் பிரதான மாலுமி கூறியுள்ளார்.

இதேவேளை பணய கைதிகளாக இருந்த எட்டு இலங்கையர்களும் இன்று நாடு திரும்பவுள்ளதாக தெரிகிறது.

கடந்த 13ம் திகதி சோமாலிய கடல் கொள்ளையர்களால் Aris 13 எனப்படும் இந்த கப்பல் கடத்தப்பட்டிருந்தது. எண்ணெய் ஏற்றி வந்த 1800 தொன் எடையுள்ள இந்த கப்பலில் 8 இலங்கையர்களின் சிக்கி இருந்தனர். கப்பலையும் பிணை கைதிகளையும் விடுவிப்பதாயின் பணம் தரவேண்டும் என்பது சோமாலிய கடல் கொள்ளையர்களின் கோரிக்கையாக இருந்தது.

இவர்களை மீட்க சோமாலிய பாதுகாப்பு படையினர் கப்பலில் ஏறி கடல் கொள்ளையர்களுடன் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர்.
ஆனால் பணய கைதிகள் தொலைபேசி மூலம் இலங்கை உள்ளவர்களுக்கு தொடர்பு கொண்டு துப்பாக்கி சண்டையை நிறுத்துமாறு கோரி இருந்தனர். இந்த நிலையில் கடல் கொள்ளையர்களுடன் பேச்சு நடத்தப்பட்டது.

சோமாலி படையினர் துப்பாக்கி சூட்டை நடத்தாது கப்பலை விட்டு போனால் தாமும் கப்பலை விட்டு போவதாக கடல் கொள்ளையர்கள் கூறியதையடுத்து சோமாலி படையினர் கப்பலை விட்டு அகன்றனர்.

சொன்னபடி சோமாலி கடல் கொள்ளையர்களும் பணம் எதுவும் வாங்காமலே கப்பலையும் பிணை கைதிகளையும்  விட்டு  விட்டு சென்றுள்ளனர்.

சோமாலி வணிகர் ஒருவரே இந்த கப்பலை வாடகைக்கு எடுத்திருந்தார். அது எங்களுக்கு  பின்னர்தான் தெரிய வந்தது. தகவல் தெரிந்தவுடன் நாங்கள் கப்பலை விடுதலை செய்தோம் என்று பின்னர் சோமாலி கடல் கொள்ளையர்கள் மீடியாவுக்கு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

       




0 comments:

Post a Comment

Powered by Blogger.