தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு அளிப்பதில் ஊழல் நடக்கிறது. லஞ்சம் வாங்கிக்கொண்டுதான் வரிவிலக்கு கொடுக்கிறார்கள். இதை நான் வெளிப்படையாக சொல்லுகிறேன் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
புதிய தலைமுறைக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் வழங்கியுள்ள நேர்காணலில் இந்த குற்றச்சாட்டை அவர் தெரிவித்துள்ளார்.
''சின்ன படங்களுக்கு 10 லட்சம் லஞ்சமாக கேட்கிறார்கள். பெரிய படங்களுக்கு 15 இலட்சம் முதல் ஒரு கோடி வரை லஞ்சம் கேட்கிறார்கள்.
இந்த வரிவிலக்கால் உங்களுக்கு லாபம் வருகிறது தானே, அதில் அரைவாசியை எங்களுக்கு தருவதில் உங்களுக்கு என்ன குறையப் போகிறது என்று அதிகாரிகள் வெளிப்படையாகவே கேட்கிறார்கள். இதை செய்து கொடுப்பதற்கு தரகர்கள் இருக்கிறார்கள். இது எல்லாருக்கும் தெரியும். ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை'' என்று நடிகர் பிரகாஷ் ராஜ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
''இது போன்ற ஊழல்கள் திரைத்துறையில் மலிந்து கிடக்கிறன. ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தில் சிலர் திரும்ப திரும்ப பதவியில் இருந்து ஊழல் செய்கிறார்களே தவிர, தயாரிப்பாளர்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை. தயாரிப்பாளர்களது பிரச்சனைகள் தீர்வு இல்லாது அப்படியே இருக்கின்றன. எனவேதான் விஷால், நான், கெளதம் மேனன், மிஸ்கின் எல்லோரும் இணைந்து ஒரு அணியாக தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுகிறோம். எமது அணி பதவிக்கு வந்ததும் நடிகர்களது உண்மையான வசூல் சக்தி என்ன என்பதையு,ம் அவர்களின் உண்மையான வசூல் பலம் என்ன என்பதையும் வெளிப்படையாக அறிவிப்போம். 6 மாதத்தில் கணனி மயப்படுத்துவதால் உண்மையான வசூல் என்ன என்பது தெரிந்துவிடும். இனி அதனை எந்த நடிகரும் மறைக்க முடியாது. வசூலை அதிகரித்து கூற முடியாது'' என்று மேலும் நடிகர் பிரகாஷ் ராஜ் அந்த நேர்காணலில் கூறியுள்ளார்.
ரஜினி முதல் சிவகார்த்திகேயன் வரை பெரும்பாலான நடிகர்கள் தங்கள் படங்கள் பெரும் வசூல் செய்கின்றன என்ற நம்பிக்கையை கொண்டுள்ளனர். விஞ்ஞான பூர்வமான எந்த ஆதாரங்களும் இல்லாமல் இந்த நடிகர்கள் ஒரு பெரும் வசூல் தொகையை நம்புகிறார்கள். அதன் அடிப்படையில் தமது சம்பளத்தை படத்திற்கு படம் ஏற்றுகிறார்கள்.
இதனால் திரைப்படத்தை தரமாக தயாரிக்க தேவையான தொகையில் பாதிக்கும் அதிகமான தொகையை நடிகரின் சம்பளமாக கொடுக்க வேண்டியுள்ளது. வட்டிக்கு வாங்கிய பணத்தில் நடிகரின் சம்பளம் போக மிகுதி பணத்தில் மிகவும் கஷ்டப்பட்டு திரைப்படத்தை எடுத்து வெளியிடுவதற்கு இடையில் தயாரிப்பாளர்களின் பாதி உயிர் போய்விடுகிறது.
இப்படி நடிகர்களது சம்பளமே இன்று பெரும் பிரச்சனையாக மாறி இருக்கிறது. நடிகர்கள் கூறுவது போல அவர்களின் படங்களுக்கு வசூல் வருவதில்லை. இதனால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே இந்த நிலையை தங்கள் அணி பதவிக்கு வந்தவுடன் மாற்றப்போவதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
0 comments:
Post a Comment