அரசியல்

அடித்தாட வேண்டிய கட்டத்தில் ஸ்டாலின்



கருணாநிதியின் ஓய்வுடன் தலைமைக்கு வந்துள்ள ஸ்டாலின், கட்சிக்கு உள்ளேயும் வெளியே மக்களிடத்திலும் தன்னை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளார்.
ஸ்டாலின் ஆளுமையும் மக்களை கவரும் வசீகரமும் கொண்ட தலைவர் அல்ல என்ற விமர்சனத்தை பரவலாக காணலாம்.
குறிப்பாக கடந்த தேர்தல் தோல்விக்கு பிறகு இந்த விமர்சனம் அதிகமாகவே எழுந்துவருகிறது.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் ஸ்டாலினுக்கு பரீட்சை களம் போலாகியுள்ளது. இந்த இடைத்தேர்தலில் ஸ்டாலின் வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தலில் அ.தி.மு.க. ஒரு பலம் பொருந்திய கட்சியாக இல்லை. ஜெயலலிதாவின் மரணத்தின் பின்னர் அந்த கட்சி மக்களிடம்  செல்வாக்கை இழந்துள்ளது. ஊழல் வழக்கு தீர்ப்பு, சசிகலா-ஓ.பி.எஸ். பிளவு போன்றவற்றால் கட்சியின் தொண்டர்களும் ஆதரவாளர்களும் பிளவுண்டு கிடக்கின்றனர். இன்னொருபுறம் அத்தையின் செல்லம் என்று தீபா வேறு குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருக்கிறார்.

இந்திய தேர்தல் ஆணையமும் தனது பங்கிற்கு தினகரனிடமிருந்து அ.தி.மு.க. கட்சியின் பெயர் சின்னம் எல்லாவற்றையும் பறித்துவிட்டுள்ளது. மாண்புமிகு சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் நிலைக்கு தினகரன் தள்ளப்பட்டுள்ளார்.

எனவே ஸ்டாலினிற்கு இதைவிட அருமையான சந்தர்ப்பம் வாய்க்காது. அ.தி.மு.க. சிதறிக்கிடக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஹெலிகொப்டர் ஷாட் அடித்து ஆர்.கே.நகர். தேர்தலை ஸ்டாலின் முடித்து வைப்பார் என்று தி.மு.க. தொண்டர்கள் எதிர்பார்த்து நிற்கிறார்கள்.

ஆனால் ஆர்.கே.நகர் தேர்தலில் தி.மு.க. தோல்வியுற்றால் நிச்சயமாக ஸ்டாலின் தலைமை குறித்து கேள்விகள் எழும்பத்தொடங்கும்.

ஏற்கனவே அ.தி.மு.க. எம்.எல்.ஏ.கள் கூவத்தூரில் அடைக்கப்பட்டிருந்த போது அவர்களை தமது பக்கம் இழுக்க தெரியவில்லை. ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியவில்லை என்ற விமர்சனங்கள் ஸ்டாலின் மீது உள்ளன.

ஆனால் ஸ்டாலின், தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கையுடன் இருப்பதாகவே காட்டிக்கொள்கிறார்.

இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டதால் ஆர்.கே.நகரில் திமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளதா என்ற நிருபர்களின் கேள்விக்கு, "இரட்டை இலை சின்னத்தை திமுக எதிர்க்க அஞ்சுவதை போல ஊடகங்கள் செய்தி பரப்புவது சரியில்லை. எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் இரட்டை இலை சின்னத்தை உள்ளாட்சி தேர்தல், இடைத்தேர்தல்களில் திமுக தோற்கடித்துள்ளது. அதே இரட்டை இலையை தோற்கடித்துதான் திமுக ஆட்சிக்கே வந்தது. சமீபத்தில் விளவங்கோடு தொகுதியில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டவர் டெபாசிட் இழந்தார். பர்கூரில் 3வது இடத்துக்கு போனது. எனவே இரட்டை இலையை வைத்து நாங்கள் வெற்றி வாய்ப்பை கணிப்பதில்லை"என்று ஸ்டாலின் கூறியிருந்தார்.

எவ்வாறெனினும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மற்ற எல்லாரையும் விட ஸ்டாலினுக்கு, தனது தலைமையை நிரூபித்து காட்ட வேண்டிய கௌரவ பிரச்சனையாக மாறியுள்ளது என்றே கூறலாம்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.