மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டியைச் சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் தமது மகன் என்றும் நடிக்க சென்ற மகனை கஸ்தூரிராஜா குடும்பம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்று கூறி வருகிறார்கள். இது தொடர்பில் வழக்கு நடந்து வருகிறது.
தமது மகனின் இயற்பெயர் வெங்கடேஷ்பிரபு என்றும், இதை தனுஷ் என மாற்றியதாகவும் கஸ்தூரிராஜா தரப்பில் தெரிவித்தனர். இவர்கள் அளித்த சான்றிதழில் உள்ள அங்க அடையாளங்கள், தனுஷின் உடலில் இருக்கின்றனவா என்பதைச் சரிபார்க்க நீதிமன்றத்தில் மருத்துவச் சோதனை நடத்தப்பட்டது. தனுஷ் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ், பள்ளிச் சான்றிதழ், பெயர் மாற்றம் செய்ததற்கான கெஸட் நகல்கள் ஆகியவற்றில் உள்ள விவரங்கள் பல கேள்விகளை எழுப்பியதால் ‘சான்றிதழ்களில் சந்தேகம் உள்ளது’ என கதிரேசன் - மீனாட்சி தரப்பின் வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் ''எங்கள் மகன் கலைச்செல்வன்தான் தனுஷ். சினிமாவில் நடிக்க ஆரம்பித்ததும் எங்களைத் தேடி வந்துவிடுவான் என்று காத்திருந்தோம். ஆனால், அவனை கஸ்தூரிராஜா குடும்பம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. அதற்கான எல்லா ஆதாரங்களையும் சமர்ப்பித்துள்ளோம். ஏழையான நாங்கள் நீதிமன்றத்தைதான் நம்பியுள்ளோம்’’ என்று கூறுகின்றனர்.
இந்த தம்பதியினரின் வழக்கறிஞர் டைட்டஸ் கூறும்போது ‘‘தனுஷின் உண்மையான பெயர் வெங்கடேஷ்பிரபு என்றும், தனுஷ் என்று 2003-ல் கெஸட்டில் மாற்றிவிட்டோம் என்றும் சான்றிதழ்களை அவர்கள் சமர்ப்பித்துள்ளனர். அந்தச் சான்றிதழ்களில் பல சந்தேகங்கள் உள்ளன. கலைச்செல்வன் என்ற தனுஷ், வீரகுடி வெள்ளாள இனத்தைச் சேர்ந்தவர். ஆனால், கம்பம் அருகே சங்கரபுரத்தைச் சேர்ந்த கஸ்தூரிராஜாவும், அவர் மனைவியும் பி.சி வகுப்பான நாயக்கர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், தனுஷின் பள்ளி மாற்றுச்சான்றிதழில், எஸ்.சி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எஸ்.சி-யில் என்ன பிரிவு என்று குறிப்பிடப்படவில்லை. பி.சி வகுப்பைச் சேர்ந்த ஒருவர், எதற்காக தன் பிள்ளையின் சான்றிதழில் எஸ்.சி என்று குறிப்பிட வேண்டும்? எனவே, இந்தச் சான்றிதழ்களை ஆய்வு செய்யவேண்டும். இந்தச் சான்றிதழை வழங்கியவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும்'' என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் ''கஸ்தூரிராஜா என்ற பெயரில் நீண்டகாலமாக சினிமா எடுத்து வந்தாலும், தன் ஒரிஜினல் பெயரான கிருஷ்ணமூர்த்தி என்பதை, கஸ்தூரிராஜா என்று அதிகாரபூர்வமாக கெஸட்டில் வெளியிட்டது 2015-ம் ஆண்டில்தான். ஆனால், அதற்கு முன்பாகவே வெங்கடேஷ்பிரபு என்ற பெயரை தனுஷ் என்று கெஸட்டில் மாற்றியதாகக் காட்டும் ஆவணத்தில் தந்தையின் பெயராக கஸ்தூரிராஜா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இது எப்படி சாத்தியம்? அப்படியென்றால், கஸ்தூரிராஜா என்ற பெயரில் ஏற்கெனவே ஆவணங்களை உருவாக்கி வைத்திருந்தார்களா? இந்தப் பெயரில் வங்கிக் கணக்கு, பாஸ்போர்ட் வாங்கியிருக்கிறாரா? இவற்றை வழங்கிய அதிகாரிகள் யார்? அவர் காட்டியிருக்கும் ரேஷன் கார்டில் இருக்கும் முகவரியும், கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவின் முகவரியும் வேறு வேறாக உள்ளன. இப்படி பல கேள்விகள் உள்ளன. ஆவணங்களின் நம்பகத்தன்மை பற்றியும் டி.என்.ஏ டெஸ்ட் வேண்டியும் மனு செய்துள்ளோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு விசாரணை தொடர்கிறது.
0 comments:
Post a Comment