உலகம்

சோமாலிய கடல் கொள்ளையர்கள் மீண்டும் அதிரடி



கடத்தப்பட்ட கப்பலை காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டமைச்சு தெரிவித்துள்ளது.
கப்பலில் 8 இலங்கையர்கள் இருப்பதால் எல்லா தகவல்களையும் பகிரங்கமாக வெளிப்படுத்த முடியாது. அவ்வாறு வெளிப்படுத்துவதால் அவர்களின் உயிருக்கு ஆபத்து நேரலாம். கடத்தப்பட்ட கப்பலுடன் தொடர்புகளை ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுகின்றன என்று இலங்கை வெளிநாட்டமைச்சு குறிப்பிட்டுள்ளது.

எண்ணெய் ஏற்றி வந்த 1800 தொன் எடையுள்ள Aris 13 எனும் இந்த கப்பல் சோமாலிய கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளமை கடல் வழி வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.



பனாமா கம்பனி அர்மி ஷிப்பிங் நிறுவனத்திற்கு சொந்தமானது இக்கப்பல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் அவ்ரோரா ஷிப் மேனேஜ்மென்ட் நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது

2012 ம் ஆண்டுக்கு பின்னர் சோமாலிய கடல் கொள்ளையர்கள் வர்த்தக கப்பல்கள் எதையும் கடத்தவில்லை. இதனால் சோமாலியா கடலோரம் சற்று அமைதியாக இருந்தது.



இந்த நிலையில் தான் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் வர்த்தக கப்பல் வெற்றிகரமாக கடத்தப்பட்டுள்ளது.

ஜக்ஃபர் ஷாகித் ஹப்துல்லாஹி எனும் கடல் கொள்ளை தலைவரின் கீழ் இயங்குபவர்களே Aris 13 கப்பலைக் கடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சோமாலியாவுக்கும் சொகோர்ட்டா என்ற தீவுக்கும் இடையில் இக்கப்பல் கடத்தப்பட்டுள்ளது. கடற்கொள்ளையர்களின் அச்சுறுத்தல் அதிகமாக இந்த கடல் பகுதியில் இருக்கின்ற போதும் நேரம் குறைந்த பயண பாதையாக உள்ளதால் பல கப்பல்கள் இந்த வழியை பயன்படுத்துகின்றன. இதனால்தான் Aris 13 இவ்வழியால் சென்றுள்ளது.


அதே நேரம் Aris 13 கப்பல் மிகவும் மெதுவாக மணிக்கு ஐந்து கடல் மைல் வேகத்தில்தான் பயணித்துள்ளது. இந்த வேகம் படகுகளில் வந்து ஏணி மூலம் கப்பலில் ஏறும் கடல்கொள்ளையருக்கு அருமையான வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

சோமாலியா கடல் கொள்ளையர்கள் வர்த்தக கப்பல்களை கடத்தி கப்பம் பெற்று வந்தனர்.
2011 இல் மட்டும் சோமாலியா கடல் கொள்ளையர்களால் 237 தாக்குதல்கள் இடம்பெற்று நூற்றுக்கணக்கானோர் பணய கைதிகளாக பிடிக்கப்பட்டனர். சுமார் 7 பில்லியன் டொலர்கள் கப்ப தொகையாக கொடுக்கப்பட்டது.

இதையடுத்து கப்பல் முதலாளிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை இறுக்கமாக்கினர்.
அமெரிக்கா, சீனா, மற்றும் ஐரோப்பிய முக்கிய நாடுகள் கடல் கொள்ளையர்களை அடக்க தமது கப்பல் படையை அனுப்பின. இதனால் நிலைமை கட்டுபடுத்தப்பட்டது.

இது ஒருபுறமிருக்க வெளிநாடுகளை சேர்ந்த மீனவர்கள் சட்டவிரோதமாக சோமாலியாவின் கடலில் நீண்ட காலமாக மீன்பிடித்து வருகின்றனர். ஆபத்தான இரசாயன கழிவுகளும் சோமாலிய கடலில் கொட்டப்பட்டன.

இதனால் சிறு வள்ளங்களில் மீன்பிடித்து வந்த சோமாலிய மீனவர்கள் மீன்கள் இல்லாமல்  பாதிக்கப்பட்டனர்.  

சோமாலியாவின் கடல் வளத்தை வெளிநாட்டு மீனவர்கள் வாரிச்சென்றதால் மீன்பிடியை நம்பியிருந்த அந்த மக்கள் வறுமையில் வாடினர்.

இதனால் பாதிக்கப்பட்ட சோமாலிய மீவர்களில் சிலர் கடல் கொள்ளையர்களாக மாறினர்.
பெரும் செல்வந்த நிறுவனங்களின் வணிக கப்பல்களை கடத்தி கப்பம் கேட்டனர்.
பெற்ற பணத்தை சில கடல்கொள்ளையர்கள் மக்களுக்கு பகிர்ந்து கொடுத்தனர்.
இதனால் மக்களும் கடல்கொள்ளையர்களை காட்டிக்கொடுக்கவில்லை. ஒருவகையில் அவர்கள் மக்களின் ஆதரவை பெற்றிருந்தனர்.

ஆனால் பேராசை பிடித்த பன்னாட்டு கம்பெனிகள் இந்த உண்மையை மறைத்தன. சோமாலிய கடல் கொள்ளையர்களை பெரும் குற்றவாளிகள் போலவும் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் போலவும் மீடியாக்கள் மூலம் பிரசாரம் செய்தனர்.

இந்த நிலையில் உலக நாடுகள் ஒன்று சேர்ந்து சோமாலிய கடல்கொள்ளையை அடங்கியிருந்தன.
ஐந்து வருடங்களுக்கு பின்னர் தற்போது இந்த Aris 13 எண்ணெய் கப்பல் கடத்தப்பட்டுள்ளது.

  



0 comments:

Post a Comment

Powered by Blogger.