ஈரானிலுள்ள இராணுவ தளங்களை ரஷ்யா பயன்படுத்த ஈரான் அனுமதி வழங்கியுள்ளது.
சிரியாவிலுள்ள ஐ.எஸ்.பயங்கரவாதிகளின் நிலைகள் மீது ரஷ்யா விமான தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த தாக்குதல்களுக்கு ஈரானில் உள்ள இராணுவ தளங்களை ரஷ்யா பயன்படுத்த ஈரான் அனுமதி வழங்கியுள்ளதாக ஈரானிய வெளிநாட்டமைச்சர் மொஹம்மட் ஜவாட் சரீப் ரொய்ட்டர்ஸ் செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவுக்கு ஈரானில் இராணுவ தளங்கள் ஏதும் இல்லை. ஆனால் எங்களுக்கு இடையே புரிந்துணர்வும் ஒத்துழைப்பும் உள்ளது. பயங்கரவாதிகளின் மீது தாக்குதல் நடத்த தேவை ஏற்படின் ரஷ்யா ஈரான் ராணுவ தளங்களை பயன்படுத்த அனுமதியளிக்கும் என்று மேலும் ஈரானிய வெளிநாட்டமைச்சர் மொஹம்மட் ஜவாட் சரீப் கூறியுள்ளார்.
ரஷ்யா 2016ல் சிரியாவிலுள்ள ஐ.எஸ்.பயங்கரவாதிகளின் நிலைகள் மீது விமான தாக்குதல் நடத்த ஈரானின் ஹமடன் விமான தளத்தை பயன்படுத்தி இருந்தது.
ரஷ்யா - ஈரான் ஒத்துழைப்பு சிரியா விவகாரத்திற்கு மட்டுமானதல்ல. இரு நாடுகளுக்கும் பொதுவான சகல பிரச்சனைகளிலும் எமக்குள் ஒத்துழைப்பு உண்டு. சிரியாவிலுள்ள ஐ.எஸ்.பயங்கரவாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தும் ரஷ்ய விமானங்கள், ஈரானில் வரவேற்கப்படுகின்றன என்று ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு பேரவையின் செயலாளர் அலி ஷம்கானி மேர் செய்தி சேவைக்கு கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஏறத்தாழ முழு சிரிய நாட்டையும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடித்துவிட்ட நிலையில் ரஷ்யா தனது நட்பு நாடான சிரியாவை காப்பாற்ற களத்தில் இறங்கியது.
பயங்கரவாதிகளின் நிலைகள் மீது ரஷ்யா கடுமையான விமானத்தாக்குதலை நடத்தியது. ரஷ்யாவின் பக்கபலமான உதவி கிடைத்த பின்னர் சிரிய படைகள் உற்சாகமடைந்தன. மெது மெதுவாக சிரியாவின் பகுதிகள் மீட்கப்பட்டன. தற்போது ராக்காவில் மட்டும் பயங்கரவாதிகள் சிக்கிக்கொண்டு கெரில்லா தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.
ஐ.எஸ். பயங்கரவாதிகள் இப்படி தோற்கடிக்கப்படுவார்கள் என்று அமெரிக்கா சிரியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எதிர்பார்க்கவில்லை. ஐ.எஸ்.பயங்கரவாதிகளை உருவாக்கியதே அமெரிக்காதான் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது. துருக்கி அதிபர் எர்டோகன் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கடத்தல் எண்ணெய்யை வாங்கி கொள்ளை லாபம் சம்பாதித்ததாகவும் இன்னும் சில நாடுகள் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்து இலாபங்களை அடைந்ததாகவும் ஆதாரங்களுடன் குற்றசாட்டுகள் உள்ளன.
இவ்வாறு ரஷ்யா, சிரியாவில் புகுந்து அதிரடியாக கள நிலவரத்தை மாற்றிய பின்னர் ஈராக்கிலும் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டார்கள். அமெரிக்காவின் பிடியில் இருக்கின்ற ஈராக் கூட ரஷ்யாவின் பங்களிப்பை பாராட்டியது. அமெரிக்கா பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒழுங்காக செயல்படவில்லை என்றும் வேண்டுமானால் ரஷ்ய உதவி கோரப்படும் என்றும் ஈராக் கூறியதில் அமெரிக்கா ஆடிப்போனது. கள நிலைமை தமது கைவிட்டு போகப் போகிறது என்பதை உணர்ந்த அமெரிக்கா ஐ.எஸ்.பயங்கரவாதிகளுக்கு எதிரான விமான தாக்குதல்களில் ஓரளவு ஈடுபட்டது.
இந்த நிலையில் சிரியாவில் ரஷ்யா அடைந்த வெற்றிகளில் பங்குபோட துடிக்கும் அமெரிக்காவும் துருக்கியும் சிரியாவின் அனுமதி இல்லாமலே அங்கு சென்றுள்ளன. இதனை கண்டித்து அண்மையில் அதிபர் அசாத் நேரடியாக அவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று குறிப்பிட்டிருந்தார்.
சிரிய அதிபர் அசாத் ''அமெரிக்க நாடானது தமது படைகளை அனுப்பி எந்த போரிலும் வென்றதில்லை. அவர்கள் எல்லா இடத்திலும் மேலும் நிலைமையை மோசமாக்கியே இருக்கிறார்கள். பிரச்சனைகளை ஏற்படுத்துவதிலும் அழிவை ஏற்படுத்துவதிலும் அவர்கள் வல்லவர்கள். ஆனால் பிரச்சனைகளை தீர்க்க அவர்களால் முடியாது'' என்று சாடியிருந்தார்.
தமது படைகள் விரைவில் ஐ.எஸ்.பயங்கரவாதிகளின் பிடியிலிருக்கும் சிரியாவை முற்றாக மீட்டெடுக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.
தற்போது சிரியாவுக்கு ஆதரவாக மீண்டும் ரஷ்யா விமான தாக்குதலை தீவீரப்படுத்தியுள்ளது.
0 comments:
Post a Comment