அனுமதியில்லாமல் எம் மண்ணில் இருப்போர் ஆக்கிரமிப்பாளர்கள் - அசாத்
நாம் அழைக்காமல் எமது அனுமதியில்லாமல் சிரியாவில் உள்ள அனைத்து படையினரும் ஆக்கிரமிப்பாளர்கள். எமது அனுமதி இல்லாமல்தான் அமெரிக்கா சிரியாவில் உள்ளது என்று சிரிய நாட்டின் அதிபர் பஷார் அசாத் தெரிவித்துள்ளார்.
சீன ஊடகமான போனிக்ஸ் தொலைக்காட்சிக்கு வழங்கிய நீர்காணலில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிரிய அதிபர் அசாத் மேலும் கூறும்போது '' எங்களது அழைப்பில்லாமல், அனுமதியில்லாமல் எம்மண்ணுக்கு வருகின்றவர்கள் ஆக்கிரமிப்பாளர்கள். அவர்கள் அமெரிக்கர்களாக இருக்கலாம், துருக்கியர்களாக இருக்கலாம், அல்லது வேறு யாராகவும் இருக்கலாம். ஆனால் அவர்கள் எல்லோருமே இம்மண்ணை ஆக்கிரமிக்க வந்தவர்களே என்றார்.
சிரியாவின் நாட்டின் அலப்போ மாநிலத்திலுள்ள மன்பிஜ் நகரில் ரஷ்ய, அமெரிக்க, துருக்கி படைகள் நிலைகொண்டுள்ளன. இதில் ரஷ்ய படைகள் மட்டுமே அதிபர் அசாத்தின் அழைப்பின் பேரில் சிரியா வந்துள்ளன. ஏறத்தாழ முழு சிரிய நாட்டையும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிடித்துவிட்ட நிலையில் ரஷ்யா தனது நட்பு நாடான சிரியாவை காப்பாற்ற களத்தில் இறங்கியது.
பயங்கரவாதிகளின் நிலைகள் மீது ரஷ்யா கடுமையான விமானத்தாக்குதலை நடத்தியது. ரஷ்யாவின் பக்கபலமான உதவி கிடைத்த பின்னர் சிரிய படைகள் உற்சாகமடைந்தன. மெது மெதுவாக சிரியாவின் பகுதிகள் மீட்கப்பட்டன. தற்போது ராக்காவில் மட்டும் பயங்கரவாதிகள் சிக்கிக்கொண்டு கெரில்லா தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள்.
ஐ.எஸ். பயங்கரவாதிகள் இப்படி தோற்கடிக்கப்படுவார்கள் என்று அமெரிக்கா சிரியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எதிர்பார்க்கவில்லை. ஐ.எஸ்.பயங்கரவாதிகளை உருவாக்கியதே அமெரிக்காதான் என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்து வருகிறது. துருக்கி அதிபர் எர்டோகன் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் கடத்தல் எண்ணெய்யை வாங்கி கொள்ளை லாபம் சம்பாதித்ததாகவும் இன்னும் சில நாடுகள் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்து இலாபங்களை அடைந்ததாகவும் ஆதாரங்களுடன் குற்றசாட்டுகள் உள்ளன.
இவ்வாறு ரஷ்யா, சிரியாவில் புகுந்து அதிரடியாக கள நிலவரத்தை மாற்றிய பின்னர் ஈராக்கிலும் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்பட்டார்கள். அமெரிக்காவின் பிடியில் இருக்கின்ற ஈராக் கூட ரஷ்யாவின் பங்களிப்பை பாராட்டியது. அமெரிக்கா பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒழுங்காக செயல்படவில்லை என்றும் வேண்டுமானால் ரஷ்ய உதவி கோரப்படும் என்றும் ஈராக் கூறியதில் அமெரிக்கா ஆடிப்போனது. கள நிலைமை தமது கைவிட்டு போகப் போகிறது என்பதை உணர்ந்த அமெரிக்கா ஐ.எஸ்.பயங்கரவாதிகளுக்கு எதிரான விமான தாக்குதல்களில் ஓரளவு ஈடுபட்டது.
இந்த நிலையில் சிரியாவில் ரஷ்யா அடைந்த வெற்றிகளில் பங்குபோட துடிக்கும் அமெரிக்காவும் துருக்கியும் சிரியாவின் அனுமதி இல்லாமலே அங்கு சென்றுள்ளன. இதனை கண்டித்தே அதிபர் அசாத் நேரடியாக அவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது அமெரிக்க நாடானது தமது படைகளை அனுப்பி எந்த போரிலும் வென்றதில்லை. அவர்கள் எல்லா இடத்திலும் மேலும் நிலைமையை மோசமாக்கியே இருக்கிறார்கள். பிரச்சனைகளை ஏற்படுத்துவதிலும் அழிவை ஏற்படுத்துவதிலும் அவர்கள் வல்லவர்கள். ஆனால் பிரச்சனைகளை தீர்க்க அவர்களால் முடியாது என்று சாடியுள்ளார்.
தமது படைகள் ஐ.எஸ்.பயங்கரவாதிகளின் பிடியிலிருக்கும் ராக்கா நகரிலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளதாகவும் விரைவில் சிரியா முற்றாக மீட்கப்படும் என்றும் அசாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment