ஜெயலலிதாவின் மர்ம மரணத்தின் பின்னர் அவரது அண்ணன் மகளான தீபா, அத்தையின் இடத்தை பிடிக்க களம் இறங்கியுள்ளார். முதலில் அத்தையின் தொகுதியான ஆர்.கே.நகர் தேர்தலில் நின்று ஜெயிப்பேன்.
பின்னர். அ.தி.மு.க.வை கைப்பற்றுவேன். போயஸ் தோட்டத்தையும் வேதா இல்லத்தையும் மன்னார்குடி கொள்ளை கும்பலிடமிருந்து மீட்பேன் என்று கூறி வருகிறார்.
தீபா ஜெயலலிதா போலவே இருக்கிறார் என்று ஒரு கூட்டம் அவரது வீட்டை தட்டியது. தீபாவும் ஜெயலலிதா போலவே போர்வை ஒன்றை போர்த்தியபடி உப்பரிகையில் நின்று இரண்டு விரலை உயர்த்தினார். தீபா வாழ்க என்ற கோஷம் எழுந்தது.
எல்லாம் சரியாக போய்க்கொண்டிருந்த நேரத்தில் ஓ.பி.எஸ். ஜெயா சமாதியில் அமர்ந்தார். தீபா வீட்டில் இருந்த கூட்டம் அப்படியே யூ டேர்ன் அடித்து பன்னீர்செல்வம் வீட்டுக்கு வந்துவிட்டது.
இருந்தாலும் தீபா இரட்டைவிரலை உயர்த்துவதை விடவில்லை.
எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவையை தொடங்கி பதவிகளை உருவாக்கிய வேகத்திலேயே தொண்டர்கள் அதற்கு எதிராக தீபா வீட்டின் முன்பு போராட்டம் நடத்தினார்கள்.
அப்போதே தீபாவும் கணவர் மாதவனும் வெவேறாக பேட்டியளித்து இருக்கும் கருத்து இடைவெளியை காட்டினார்கள்.
தீபா திடீரென்று பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தது போலவே திடீரென்று அவரை விட்டு பிரிந்தும் வீட்டார்.
ஆர்.கே.நகரில் போட்டியிடும் எனக்கு ஓ.பி.எஸ். ஆதரவு தந்தால் ஏற்றுக்கொள்வேன் என்று சொல்வதோடு ஓ.பி.எஸ். தரப்பை எட்டவே வைத்துக்கொண்டார்.
ஆர்.கே.நகரில் தேர்தல் ஆதரவு கூட்டத்தை அறிவித்து விட்டு 5 மணி நேரம் கால தாமதமாக போகிறார். தொண்டர்கள் வெறுத்துப்போய் கோஷமிடுகிறார்கள். இப்படி தீபாவுடன் குழப்பங்களும் சேர்ந்தே வருகின்றன.
ஆரம்பித்த குறுகிய காலத்துக்குள்ளாகவே அவரது பேரவைக்குள் குழப்பங்களும் சர்ச்சைகளும் சண்டைகளும் ஆரம்பித்து விட்டன.
இதனிடையே, தீபாவுக்கும் அவரது கணவரான மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்தன. இந்த பிளவினால் மாதவன் கட்சிப் பணியைக் கவனிப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த லட்சணத்தில் இப்போது தீபாவின் கணவர் மாதவன் தனிக்கட்சி தொடங்குவதாக அறிவித்திருக்கிறார்.
மாதவன் இன்று வெள்ளியிரவு மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாதவன், ''எனக்கும் தீபாவுக்கு எந்தக் கருத்து வேறுபாடு இல்லை. தீபா நடத்துவது பேரவை. நான் தனிக்கட்சி தொடங்க போகிறேன். தனிக்கட்சியை ஓரிரு நாட்களில் அறிவிக்கவுள்ளேன். தீபாவை சுற்றி தீய சக்திகள் உள்ளன, நான் கட்சி தொடங்குவது பற்றி தீபா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. எனக்குத்தான் தொண்டர்களின் ஆதரவு இருக்கிறது'' என்று கூறியுள்ளார்.
இப்படியே போனால் சசிகலாவுக்கு எதிராக தீபா எடுத்த சபதங்கள் நிறைவேறும் என்று தோன்றவில்லை.
0 comments:
Post a Comment