தற்போது ஆர்.கே.நகர் தேர்தல் பிரசாரங்களில் ஜெயலலிதாவின் மர்ம மரணமும் ஒரு முக்கிய பேசு பொருளாகவுள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கபட நாடகமாடுவதாக தீபா குற்றம் சாட்டியுள்ளார்.
அதேபோல ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் விசாரிக்க வேண்டிய காலம் விரைவில் வரும் என முன்னாள் அமைச்சர் க.பொன்முடி எச்சரித்துள்ளார்.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்ந்தும் மர்மமாகவே இருக்கும் நிலையில் இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பலரும் கோரி வருகிறார்கள். இந்த நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலிலும் இது எதிரொலிக்க தொடங்கியுள்ளது.
ஜெயா மரணத்தில் சந்தேகத்துக்கு உரிய நபராக சசிகலா தற்போது இருக்கிறார். ஆனால் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா ஆதரவாளராகவே முன்னர் இருந்தார். ஜெயா மரணம் குறித்து சசிகலா சார்பாகவே கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
எனவே ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானது இல்லையென்றால், அதற்கு காரணம் சசிகலா என்றால், சசிகலாவுக்கு ஆதரவாக ஜெயலலிதாவின் மரணம் குறித்து கருத்து கூறி வந்த பன்னீர்செல்வமும் குற்றவாளிதான் என்ற வாதம் பரவலாக உள்ளது.
காரணம் ஜெயலலிதா அப்பலோ ஆஸ்பத்திரியில் இருந்த சுமார் 70 நாட்களும் பன்னீர்செல்வம் அம்மாவுக்கு நல்ல முறையில் சிகிச்சை நடக்கிறது விரைவில் குணமடைந்து விடுவார் என்றுதான் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறி இருந்தார்.
விசாரணையில் ஜெயலலிதா கொல்லப்பட்டதாக நிரூபிக்க பட்டால் ஜெயாவுக்கு அநியாயம் நடப்பதை தெரிந்து கொண்டே பொய் கூறிய பன்னீர்செல்வமும் சசிகலாவுக்கு நிகரான குற்றவாளியாகவே பார்க்கப்படுவார் என்று பலரும் கருதுகின்றனர்.
மேலும் தனது முதலமைச்சர் பதவி பறிக்கப்படும் வரைக்கும் பன்னீர்செல்வம் சசிகலாவின் காலில் விழுந்து அவரது சொல்படி நடப்பவராகவே இருந்திருந்தார்.
இந்த நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் பிரச்சாரத்திலும் இது குறித்து பேசப்படுகிறது.
இந்நிலையில் ஆர்.கே.நகர் தொகுதி தண்டையார்பேட்டையில் எம்.ஜி.ஆர் - அம்மா, தீபா பேரவை தேர்தல் பணிமனையை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா திறந்து வைத்து பேசுகையில், ''சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் ஆட்சியை கைப்பற்றுவதிலேயே அக்கறை கொண்டுள்ளனர். தமிழகத்தின் வளர்ச்சி குறித்து அவர்கள் அக்கறை கொள்ளவில்லை.
டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை. டிடிவி தினகரனும், மதுசூதனனும் மக்களை ஏமாற்றி வருவகின்றனர். ஜெயலலிதா மரணம் தொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கபட நாடகமாடுகிறார்'' என்று கூறியுள்ளார்.
இதேவேளை ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் விசாரிக்க வேண்டிய காலம் விரைவில் வரும் என முன்னாள் அமைச்சர் க.பொன்முடி எச்சரித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆர்.கே.நகரில் மார்ச் 28-ம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் குறித்து முதல்வராக இருந்தபோது விசாரணை நடத்த உத்தரவிடாதது ஏன்? சேகர் ரெட்டியுடன் உள்ள தொடர்பு என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விக்கணைகளை தொடுத்திருந்தார்.
இதற்கு பதில் சொல்ல முடியாமல் ஸ்டாலினைப் பார்த்து கோடை வெயிலின் உச்சத்தில் பேசுகிறார் என அநாகரிகமாக பேசியுள்ளார். அரசியலில் நாகரிகமாக கருத்துப் பரிமாற்றம் செய்ய திமுக முயற்சித்தாலும் ஓபிஎஸ் போன்றவர்களால் இப்படித்தான் பேசுவார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. விவாதங்களில் அரசியல் நாகரிகத்துக்கும், அவர் வளர்ந்த அரசியலுக்கும் துளியும் தொடர்பில்லை என்பதை ஓபிஎஸ் நிரூபித்துள்ளார்.
ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லாததன் மூலம் அதிமுகவின் டிடிவி தினகரன் அணியும், ஓபிஎஸ் அணியும் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தார்கள் என்பது உண்மையாகியுள்ளது. ஓபிஎஸ்ஸுக்கு தோல்வி பயம் ஏற்பட்டிருக்கலாம். அவரை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு பீதி ஏற்பட்டிருக்கலாம். ஆர்.கே.நகரில் தோற்றால் அரசியல் எதிர்காலம் அஸ்தமனமாகிவிடும் என்ற அச்சம் இருவருக்கும் ஏற்பட்டிருக்கலாம். இதனால்தான் ஸ்டாலினைப் பற்றி அநாகரிமாக பேசியுள்ளார்.
தமிழகம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதற்கு இரு முறை நிதியமைச்சராக இருந்த ஓபிஎஸ்ஸே காரணம். தமிழகத்தின் கடன் சுமையை ரூ. 3 லட்சத்து 14 ஆயிரம் கோடியாக உயர்த்தியதுதான் அவரது சாதனை. மோசமான நிதி மேலாண்மை, நிர்வாகச் சீர்கேடுகள், சேகர் ரெட்டி விவகாரம் ஆகியவற்றுக்கு விசாரணை ஆணையத்தை ஓபிஎஸ் சந்தித்தே தீர வேண்டும். விரைவில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமையப் போகிறது. அப்போது ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து ஓபிஎஸ்ஸையும் விசாரிக்க வேண்டிய நிலை வரும். திமுக ஆட்சியில் அமைக்கப்படவுள்ள விசாரணை ஆணையத்தில் ஆஜராக டிடிவி தினகரன் அணியும், ஓபிஎஸ் அணியும் ஆஜராக தயாராக இருக்க வேண்டும்' என்று அந்த அறிக்கையில் பொன்முடி தெரிவித்துள்ளார்.
எப்படியோ ஜெயலலிதாவின் மர்ம மரணத்தில் பன்னீர்செல்வமும் சிக்கி இருக்கிறார் என்றே தெரிகிறது.
0 comments:
Post a Comment