முல்லைத்தீவு கேப்பாப்புலவில் இராணுவத்தினர் வசமுள்ள 486 ஏக்கர் காணிகளும் விடுவிக்கப்படும் வரையில் போராட்டத்தினை கைவிடப் போவதில்லை என போராடிவரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த முதலாம் திகதி முதல் முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் தங்களது காணிகளை விடுவிக்கக்கோரி மக்கள் போராடி வருகிறார்கள்.
இந்த மக்கள் 2009 இல் இடம்பெற்ற இறுதி போரில் தமது வாழிடங்களை விட்டு வெளியேறி வேண்டியேற்பட்டது. இம்மக்களின் நிலங்களை இராணுவம் கைப்பற்றி முகாம்களை அமைத்தது.
இந்த நிலையில் தமது சொந்த வாழிடங்களை தருமாறு கோரி கேப்பாப்புலவு மக்களால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஒரு மாத காலம் இடம்பெற்ற போராட்டத்தை அரசாங்கத்தின் போலி வாக்குறுதியை நம்பி மக்கள் கைவிட்டனர். எனினும் 84 குடும்பங்களின் 42 ஏக்கர் காணிகள் மட்டுமே விடுவிக்கப்பட்டன என்பதை அறிந்த மக்கள் கடந்த முதலாம் திகதி முதல் வற்றாப்பளை கேப்பாப்புலவு வீதியில் மீண்டும் போராட்டத்தை நடத்தி வருகிறார்கள். விடுவிக்கப்படாத 486 ஏக்கர் காணிகளையும் விடுவிக்குமாறு கோரி 145 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அவர்களுக்கு ஆதரவாக ஏனையவர்களும் போராட்டத்தில் பங்கெடுத்து வருகிறார்கள்.
0 comments:
Post a Comment