அரசியல்

இலங்கைக்கு கால அவகாசம் வழங்க எதிர்ப்பு




இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் ஐ.நா.வின் முடிவுக்கு எதிராக பலரும் குரல் கொடுக்க தொடங்கியுள்ளனர்.

2015 ஆம் ஆண்டு, ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தில், போர்க் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள், சட்டத்தரணிகள் ஆகியோரின் பங்களிப்புடன், நம்பகமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதனை இலங்கை அரசாங்கமும் ஏற்றுக் கொண்டிருந்தது.  

ஆனால் இந்த 15 மாதங்களில் முக்கியமான இந்த தீர்மானங்களை செயல்படுத்த இலங்கை தீவிரம் காட்டவில்லை.
மாறாக இலங்கை அரசாங்கம் போர் குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடம் இல்லை. அதற்கு இலங்கை சட்டத்தில் இடமில்லை என வெளிப்படையாக தெரிவித்திருந்தது.

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய இலங்கை வெளிநாட்டமைச்சர் மங்கள சமர வீர தனது உரையில் போர்க்குற்ற விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து வாய் திறக்கவில்லை. விசாரணையில் கலப்பு பொறிமுறை குறித்தும் அவர் எதுவும் குறிப்பிடவில்லை.

இந்த நிலையில் தமிழர் தரப்பும், உரிமை செயல்பாட்டாளர்களும் இலங்கையை கண்டிக்க ஆரம்பித்துள்ளனர்.

ஐ.நா தீர்மானத்தின் உள்ளடங்களை நிறைவேற்ற மாட்டோம் என வெளிப்படையாக கூறும் அரசாங்கத்திற்கு மேலதிக கால அவகாசம் வழங்குவது தவறு. இவ்வாறு வழங்குவது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்தும் செயற்பாடு என சிவில் சமூக அமையம் குற்றஞ்சாட்டியுள்ளது.

சிவில் சமூக ஊடக அமையத்தின் பேச்சாளரும் யாழ் சட்டத்துறை விரிவுரையாளருமான குமாரவடிவேல் குருபரன் இன்று யாழ் ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இவ்வாறு இலங்கை குறித்து தனது கண்டனத்தை தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த விடயம் தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. இலங்கை அரசாங்கத்திற்கு ஐ.நா.மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை நிறைவேற்ற மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு கருதுகிறது. அதேவேளை அந்த கால அவகாசமானது தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு எதுவாக கால அட்டவணை கொண்டதாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது. தீர்மானம் நிறைவேற்றப்படுவதை கண்காணித்து உறுதிசெய்வதற்காக இலங்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கருதுகிறது.

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கம் வகிக்கும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை தமது கட்சி எதிர்ப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.