தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒகேனக்கலில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஒகேனக்கல் பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற விவசாயிகள் தண்ணீரில் இல்லாமல் வற்றிக்கிடக்கும் காவிரியாற்றில் இறங்கி நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவிரியில் கர்நாடக அரசு புதிய அணை கட்டுவதை தடுக்கக்கோரியே ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்குகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தை தமிழக விவசாயிகள் சங்கம் நடத்தியுள்ளது.
கர்நாடக அரசு காவிரியில் மேகேதாட்டு பகுதியில் புதிய அணைகட்டும் வேலையை ஆரம்பித்துள்ளது.
ரூ.5,912 கோடி நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டு வரும் கர்நாடக அரசின் செயல் கண்டனத்துக்கு உரியது. இதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தவறினால், புதிதாக கட்டப்படும் அணையை தமிழக விவசாயிகள் திரண்டு சென்று உடைப்போம் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விசாயிகள் குறிப்பிட்டனர்.
ஏற்கனவே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படவில்லை. கர்நாடக அரசாங்கம் காவிரியாற்றில் நீர் வரத்தை கட்டுப்படுத்தியுள்ளது.
காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகள் எதையும் கர்நாடக அரசு ஏற்காமல் மறுத்து வருகிறது. இதை தமிழக விவசாயிகள் சங்கம் கண்டிக்கிறது. உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி இருபதுக்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் நிலையில் தமிழக மக்களின் குடிநீர் ஆதாரத்தை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment