போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 150 வீடுகளை கட்டியுள்ளதாக லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வீடுகளை நடிகர் ரஜினிகாந்த் மக்களிடம் வழங்கவுள்ளார் என்றும் லைக்கா அறிவித்திருந்தது. ரஜினியும் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 9ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
இதே வேளை தற்போது இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்
சுப்ரமணிய சாமி ரஜினிகாந்தின் இந்த இலங்கை பயணத்திற்கு வரவேற்பு தெரிவித்திருந்தார். எதிர்ப்புகளை மீறி ரஜினி இலங்கை சென்றால் அது பாராட்டப்பட வேண்டியது என்று குறிப்பிட்டுள்ளார். தமிழர்களை பொறுக்கி என்று தொடர்ந்து சு. சாமி எழுதிவருவதும், தமிழர்களை அவரை கடுமையாக திட்டுவதும் வழமையான ஒரு சந்தர்ப்பத்தில் அவர் ரஜினியின் இலங்கை பயணத்தை ஆதரித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதேபோல தமிழர்களுக்கு வீடு வழங்க ரஜினி இலங்கை செல்வதில் தவறில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்ள ரஜினிகாந் இலங்கை செல்வதில் என்ன தவறு உள்ளது என்று அவர் கேட்டுள்ளார்.
''அரசியலில் ஈடுபடாத வேறு எந்த நடிகரும் தேர்தல்நேரத்தில் 'வாய்ஸ்' கொடுப்பதில்லை.மக்கள் போராட்டங்களின்போது மட்டும் அந்த 'வாய்ஸ் எங்கே? தமிழக விவசாயிகள் மண்டை ஓடுகளோடு டெல்லிவீதியில் போராடிக்கொண்டிருக்கிறார்கள் ரஜினியிடமிருந்து ஒரு வார்த்தை வரவில்லை. எது தடுக்கிறது?'' என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கையில் நடைபெறவுள்ள இலவச வீடுகள் வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
''அந்த திரைப்பட தயாரிப்பாளர் ராஜபக்ஸவின் பினாமி என்று கூறப்படுவதால் அவரது விழாவில் ரஜினிகாந் கலந்து கொள்ளக் கூடாது. இலங்கை மீதுள்ள தமிழர்களின் கோபத்தை தணிக்கவே இந்த விழாவுக்கு ரஜினி அழைக்கப்பட்டிருக்கிறார். எனவே இந்த விழாவை அவர் தவிர்க்க வேண்டும் என்பதே தமிழர்களின் வேண்டுகோள்'' என்று மேலும் ராமதாஸ் கூறியுள்ளார்.
''வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக தொடர் போராட்டங்களை பல்வேறு இடங்களில் முன்னெடுத்துள்ள நிலையில், 150 வீடுகளை கையளிப்பதற்காக மட்டும் ரஜினி வர வேண்டிய அவசியம் என்ன?'' என ஈபி.ஆர்.எல்.எப்.அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கு கிழக்கு பகுதிகளில், காணாமல் போனவர்களை மீட்டுத் தருமாறு போராட்டங்கள் தொடர்கின்றன, நில மீட்புப் போராட்டங்களும் தொடர்கின்றன. இந்தப் போராட்டங்கள் மாதக் கணக்காகக் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், சில வீடுகளை மட்டும் கையளிப்பதற்கு ரஜினிகாந்த் யாழ்ப்பாணம் வர வேண்டுமா? என்கிற கேள்வி எழுகின்றது. இந்தியத் தேசிய அரசியலில் ரஜினிகாந்த் முக்கியமான நபர். அவருக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியோடு நெருக்கம் உண்டு. அவ்வாறான நிலையில், அவர், இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான அழுத்தங்களைக் கொடுக்க முடியும். அதனை அவர் செய்வாராக இருந்தால் அது, தமிழ் மக்களுக்கு முக்கியமானதாக இருக்கும். மாறாக, லைகா நிறுவனம் கட்டியுள்ள வீடுகளைக் கையளிப்பதற்காக மட்டும் வருவது அவ்வளவு முக்கியமான ஒன்றல்ல. தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்ததன் பின்னர், அவர் வருகை தருவாரேயானால், அவரை வரவேற்பதில் பிரச்சினையில்லை. இருப்பினும் நாங்கள் அவருக்கு எதிரானவர்கள் அல்ல," என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் மேலும் கூறியுள்ளார்.
அதேபோல விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும் ரஜினியின் இலங்கை பயணத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்த அறிக்கையில் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உலகத்தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாகவேண்டாம் எனக் கூறியுள்ளார்.
''இப்போது நடைபெறுகிற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கு இலங்கைக்கு மேலும் 2 ஆண்டுக்கால அவகாசம் வழங்கித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு ஈழத்தில் உள்ள தமிழர்கள் மட்டுமன்றி உலகெங்கும் உள்ள தமிழர்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஷங்கர் இயக்கத்தில் ’2.0’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் சுபாஷ்கரன், இலங்கை முன்னாள் அதிபரான ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர் என்று கூறப்பட்டு வருகிறது. தமிழ்மக்களை வஞ்சிக்கும் சிங்களத்தின் கொடும்போக்கைக் கண்டித்து எல்லோரும் பேசவேண்டிய நேரத்தில், அதை திசைதிருப்பும் உத்தியாகவே இந்த இலங்கை பயண அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறதோ என்கிற ஐயம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.
சிங்கள அரசுக்குத் துணைபோகும் பா.ஜ.க-வின் அனுமதியோடு இவ்வறிவிப்புச் செய்யப்பட்டிருந்தாலும் வியப்பதற்கில்லை.
ஏனெனில், ரஜினிகாந்த் போன்ற புகழ்பெற்ற நடிகர் ஒருவரை வைத்து ஒருவிழாவை நடத்தி அந்த ஒளி வெள்ளத்தில் மக்களின் உண்மையான குறைகளை இருட்டில் தள்ளிவிடுவது மட்டுமன்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு மிக வேகமாக நடந்துகொண்டிருக்கிறது என்று உலகத்துக்குக் காட்டவும் இந்நிகழ்ச்சி பயன்படும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.
லைகா நிறுவனம், மிகப்பெரும் செலவில் தயாரிக்கப்படுகிற அந்தப்படத்துக்கான உலக அளவிலான விளம்பரமாக அந்நிகழ்ச்சியைப் பயன்படுத்திக்கொள்ள எண்ணுகிறது. சிங்கள அரசாங்கத்துக்கும் தனியார் முதலாளிக்கும் நன்மை பயக்கும் இந்நிகழ்வைச் செயல்படுத்த, எவ்வித நியாயமுமின்றி உறவுகள், உடைமைகள், உரிமைகளையும் இழந்துநிற்கும் அப்பாவி மக்களின் கொடுந்துயரம் பயன்படுகிறது என்பதை நினைக்கும்போது உள்ளம் கொதிக்கிறது. கலைஞர்கள் மக்களை மகிழ்விப்பவர்களாக மட்டுமே இருக்கவேண்டும். எனவே, நடிகர் ரஜினிகாந்த், இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உலகத்தமிழர்களின் வெறுப்புக்கு ஆளாகவேண்டாம்'' என்று தனது அறிக்கையில் தொல்.திருமாவளவன் மேலும் கூறியிருந்தார்.
மேலும் பல புலம்பெயர் தமிழர் அமைப்புகளும் ரஜினியின் இலங்கை விஜயத்தை கண்டித்துள்ளன. போர் குற்றத்தில் ஈடுபட்டு சிக்கலில் உள்ள இலங்கை, ரஜினியின் இலங்கை வரவை வைத்து மக்களுக்கு எல்லாம் சுமூகமாக கிடைக்கிறது, இயல்பு வாழ்வு வந்துவிட்டது என்று காட்ட முயற்சிப்பதாக அந்த அமைப்புகள் கூறுகின்றன.
அதே சமயம் இலங்கைக்கு பிரபலங்கள் செல்வதை தடுப்பது அடிப்படை உரிமை மீறல் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். இந்த பாரபட்சத்தால் இலங்கை தமிழர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உலகின் ஏனைய பகுதியில் உள்ள தமிழர்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகள் கிடைக்காமல் மறுக்கப்படுகிறது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
மேலும் ரஜினிகாந்தை போக கூடாது என்று கூறுவது தனி மனிதனின் நடமாட்ட சுதந்திரத்தை மீறும் செயல். தடை விதிப்பது ஒரு வகையில் வன்முறையே. எனவே யாரும் யாருக்கும் தடை விதிக்க முடியாது என்றும் கருத்துக்கள் எழுந்துள்ளன.
0 comments:
Post a Comment