போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தமது நிறுவனத்தால் கட்டிய 150 வீடுகளை மக்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வில் ரஜினிகாந் கலந்துகொள்வார் என்று லைக்கா நிறுவனம் அறிவித்திருந்தது. ரஜினியும் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 9ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
இதனையடுத்து ரஜினியின் இலங்கை பயணம் குறித்து விவாதங்கள் எழுந்தன.
ரஜினி இலங்கைக்கு செல்ல வேண்டும் என்று சுப்ரமணிய சுவாமி, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை போன்றோர் கருத்து தெரிவித்திருந்தனர்.
லைக்காவின் இலங்கை நிகழ்வில் கலந்துகொள்ள கூடாது என்று காங்கிரஸ் கட்சி நிர்வாகி ஜோதிமணி, பாமக நிறுவனர் ராமதாஸ், ஈபி.ஆர்.எல்.எப்.அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் போன்றோர் கருத்து தெரிவித்திருந்தனர்.
இலங்கை பயணம் சர்ச்சையாகிய நிலையில் தற்போது ரஜினிகாந் இலங்கை பயணத்தை ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார். ரஜினியின் இந்த அறிவிப்பை அவரது மகள் ஐ.நா.புகழ் ஐஸ்வர்யா உட்பட பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
இதுகுறித்து ரஜினிகாந்த் தனது அறிக்கையில் ''தனது இனத்துக்காக, தனது மக்களுக்காக, தங்களது உரிமைக்காக, தங்களது சுய கௌரவத்திற்காக லட்சக்கணக்கில் ரத்தம் சிந்தி மடிந்து விட்டனர். தங்களை தாங்களே சமாதியாக்கிக் கொண்டு பூமியில் புதைந்து கிடக்கும் வீர மண்ணை வணங்கி அந்த மாவீரர்கள் வாழ்ந்த இடத்தையும், நடமாடிய இடத்தையும், புனித போர் நிகழ்ந்த இடத்தையும் பார்க்க ஆவலாக இருந்தேன்.
அத்துடன் அவர்கள் சுவாசித்த காற்றை சுவாசிக்க வேண்டும் என்று வெகுநாள்களாக ஆசை இருந்தது. அதை நிறைவேற்றிக் கொண்டு என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான தமிழ் மக்களை சந்தித்து மனம் திறந்து பேச ஆவலாய் இருந்தேன்.
ஆனால் இவை அனைத்தும் கனவாகி விட்டன. அரசியல் காரணிகள் இதை பெரிதுபடுத்தி விட்டதால் இதை நான் தவிர்த்து விட்டேன். மேலும், இனிவரும் காலங்களில் இவ்வாறானதொரு சந்தர்ப்பம் ஏற்படுமானால் தயவு செய்து அதையும் தடுத்து விடாதீர்கள் என ரஜினிகாந் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ''நடிகர் ரஜினிகாந்தின் இலங்கை பயணத்தை அரசியலாக்கி விட்டனர். திருமாவளவனும் இலங்கைத் தமிழர்களுக்காக ஒரு முறை யாழ்ப்பாணம் சென்றிருந்தார்'' என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
போர் முடிந்த பின்பு மகிந்த ராஜபக்ஸவின் அழைப்பின்பேரில் இலங்கை சென்ற குழுவில் திருமாவளவனும் இருந்திருந்தார். மேலும் அவர் ராஜபக்ஸவுக்கு பொன்னாடை போர்த்தி மரியாதையும் செய்திருந்தமை பலராலும் கண்டிக்கப்பட்டிருந்தது.
அதே சமயம் இலங்கைக்கு பிரபலங்கள் செல்வதை தடுப்பது அடிப்படை உரிமை மீறல் என்று சிலர் குறிப்பிடுகின்றனர். இந்த பாரபட்சத்தால் இலங்கை தமிழர்கள் ஒதுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு உலகின் ஏனைய பகுதியில் உள்ள தமிழர்களுக்கு கிடைக்கின்ற வாய்ப்புகள் கிடைக்காமல் மறுக்கப்படுகிறது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
மேலும் ரஜினிகாந்தை போக கூடாது என்று கூறுவது தனி மனிதனின் நடமாட்ட சுதந்திரத்தை மீறும் செயல். தடை விதிப்பது ஒரு வகையில் வன்முறையே. எனவே யாரும் யாருக்கும் தடை விதிக்க முடியாது என்றும் கருத்துக்கள் எழுந்துள்ளன.
0 comments:
Post a Comment