இறுதிப்போரில் பொதுமக்களை படுகொலை செய்தமை, சரணடைந்தவர்களை படுகொலை செய்தமை போன்ற பல போர் குற்றங்களுக்காக இலங்கை தண்டிக்கப்பட வேண்டும் என்று தமிழ் தரப்பும் மனித உரிமை அமைப்புகளும் கூறி வருகின்றனர்.
ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை போர்க்குற்றங்கள் மற்றும் பொறுப்பு கூறல் தொடர்பில் விவாதங்கள் நடந்து வருகின்றன. ஐ.நா.சிறுபான்மை விவகார விசேட அறிக்கையாளர் ரீட்டா இசாக் நாடியாவும் நான் கடந்த வருடம் இலங்கை சென்று பார்த்ததற்கும் இப்போதைக்கு எந்த முன்னேற்றமும் இல்லை. இலங்கை அரசாங்கம் பொறுப்பாக செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இதற்கு முன்பு 2015 ஆம் ஆண்டு, ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் போர்க் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, வெளிநாட்டு மற்றும் கொமன்வெல்த் நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள், சட்டத்தரணிகள் ஆகியோரின் பங்களிப்புடன், நம்பகமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அந்த தீர்மானத்தை இலங்கை அரசாங்கமும் ஏற்றுக் கொண்டிருந்தது.
ஆனால் ஜெனிவாவில் சர்வதேசத்திற்கு முன்னர் ஏற்றுக்கொண்ட இலங்கை அவ்வாறு நடக்கவில்லை. மாறாக வெளிநாட்டு நீதிபதிகளை போர் குற்றச்சாட்டு விசாரணையில் இணைக்க இலங்கை சட்டத்தில் இடமேயில்லை என்று இலங்கை அதிபர் வெளிப்படையாக கருத்து தெரிவித்திருந்தார்.
தற்போது ஐ.நா. மனித உரிமைகள் பேரவை கூட்ட தொடர் இடம்பெற்று வருகின்ற நிலையில் கூட இலங்கை அரசாங்கம் மிகவும் உறுதியாகவே உள்ளது. சில தமிழ் தரப்புகள் இலங்கை அரசாங்கத்துக்கு மேலதிக கால அவகாசமே கொடுக்க கூடாது என்று சொல்லிக்கொண்டிருக்கின்றன.
ஆனால் இலங்கையோ கால அவகாசமே கேட்கவில்லை. மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர கடந்த 15 மாத காலத்தில் இதை இதையெல்லாம் செய்துள்ளோம் என்று அலட்சியமாக உரையாற்றிவிட்டு போயிருக்கிறார்.
இந்த கூட்டத்தொடரில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கை தொடர்பில் உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளார். அந்த அறிக்கையில், இலங்கை அரசாங்கம் கலப்பு நீதிமன்றத்தை உருவாக்குவதற்கான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் போர்க்குற்ற விசாரணைகளில் அரசாங்கம் தவறான முறையில் தாமதம் காட்டி வருவதாகவும் சுட்டிக்காட்டப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.
ஆனால் இலங்கை அரசாங்கமோ இதையெல்லாம் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை.
இன்னும் ஒருபடி மேலே போய் ''எத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்படினும் இலங்கையில் எந்த தருணத்திலும் கலப்பு நீதிமன்றம் ஒன்று உருவாக்கப்பட மாட்டாது'' என்று இலங்கை அரசாங்கம் மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
கொழும்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதனன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா இலங்கை அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவாக கூறியுள்ளார்.
''மனித உரிமை விவகாரம் தொடர்பில் கலப்பு நீதிமன்றத்தையோ, சர்வதேச நீதிபதிகளையோ அனுமதிக்கப் போவதில்லை. இலங்கையின் உள்விவகாரங்களை இலங்கை அரசாங்கத்தால் பார்த்துக்கொள்ள முடியும். இது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிலைப்பாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த அரசாங்கமும் இதே கருத்தையே கொண்டுள்ளது. தற்போது இலங்கைக்கு எவ்வித அழுத்தங்களும் கிடையாது. நீதித்துறை சுயாதீனமாக செயற்படுகிறது. எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணை நடத்த மாட்டார்கள். அவ்வாறு விசாரணை நடத்துவதற்கு இடமளிக்கவும் மாட்டோம்” என்றும் அஜித் பீ.பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமல்ல ''இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பக அலுவலகத்தை அமைக்க ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் ''என்றும் அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment