அரசியல்

நெடுவாசல் போராட்டத்தைக் கைவிடுங்கள் - முதல்வர் பழனிசாமி



விவசாயிகளுக்கு எப்போதெல்லாம் இயற்கை இடர்பாடுகள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா பல்வேறு நலத் திட்டங்களை வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்டார். இந்த அரசு, அவரது அரசு என்பதால் விவசாயிகளை கனிவுடன் பாதுகாப்பதில் அக்கறை கொண்டுள்ளது என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே முதல்வர் பழனிசாமி இதனை தெரிவித்தார்.

ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட தமிழக விவசாயிகளைப் பாதிக்கும் எந்தத் திட்டத்துக்கும் தமிழக அரசு அனுமதி வழங்காது என்ற உறுதியை ஏற்று, நெடுவாசல் மக்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்
தமிழகத்தில் மானாவாரி சாகுபடியை விவசாயிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளும் நோக்கில் மானாவாரி வேளாண்மை இயக்கம் என்ற மிகப்பெரும் திட்டம் ரூ.803 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் தெரிவிப்பதால் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் உற்பத்தித் திட்டத்துக்கு மாநில அரசு அனுமதி வழங்காது. எனவே, நெடுவாசல் மக்களும், விவசாயிகளும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.


தமிழகத்தில் விவசாயிகள் பாதிப்படையக் கூடிய எந்தத் திட்டமானாலும் இந்த அரசு செயல்படுத்தாது. விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையிலான எந்தத் திட்டத்தையும் அனுமதிக்க மாட்டோம் என்று மீண்டும் உறுதி கூறுகிறேன். எனவே, மாநில அரசின் இந்த உறுதியை ஏற்று, நெடுவாசலில் நடைபெற்று வரும் போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று நெடுவாசல் கிராம பிரதிநிதிகளைக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.