''உடனடியாக தமிழகத்தில் தேர்தல் நடத்தப்படவேண்டும். இதுவே தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வாக அமையும். தம்மை யார் ஆள வேண்டும் என்று மக்கள் தீர்மானிக்கட்டும். தேர்தலுக்கு செலவு அதிகம் என்று கூறுவதெல்லாம் பொருந்தாது. கட்சிகளின் விளம்பர செலவுகளை விட வாக்குக்கு பணம் கொடுப்பதே அதிக செலவாக உள்ளது. தேர்தல் செலவுதான் என்ற போதும் சிலநேரங்களில் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. சட்டதிட்டங்களை வைத்துக்கொண்டு கட்டாயம் நான்கு வருடம் பொறுத்துக்கொள்ளவேண்டும் என்று சொல்வது, கட்டாய கல்யாணம் போன்றது'' என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அவர் வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
''காசு வாங்கிக்கொண்டு வாக்கு போடுவது ஊழல் அரசாங்கம் அமைவதற்கு அடிப்படையாக உள்ளது. வாக்கை விற்றபின்னர் தட்டி கேட்கும் உரிமையை இழந்துவிடுகிறோம். வாக்கை விற்ற பின்னர் எப்படி கேள்வி கேட்க முடியும். நான் வரி காட்டாமல் விட்டுவிட்டு உங்களை கட்டு என்று கூற முடியாது. அதுபோல தனிப்பட்ட ஒவ்வொருவரும் நேர்மையாக ஊழல் இல்லாமல் இருக்க வேண்டும்'' என்றும் கமல் வேண்டுகோள் விடுத்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து வெற்றி பெற்றது பற்றியும் கமல் இந்த நேர்காணலில் சுட்டிக்காட்டினார்.
''அப்போது ஆட்சி பொறுப்பில் இருந்த அந்த அரசியல்வாதியே விஸ்ரூபம் வெளியாவதில் சிக்கலை ஏற்படுத்தினார். பின்னர் அவர் மீடியாவை கூப்பிட்டு 40 நிமிடங்கள் விளக்கம் கொடுத்தார். ஆனால் நான் அவரை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்று வெற்றி பெற்றேன்.
மற்றவர்களுக்கும் அவரால் பிரச்சனை இருந்திருக்கலாம். ஆனால் அவர்கள் பயத்தினாலோ அல்லது ஏன் வீண் வம்பு என்று ஒதுங்கி போயிருக்கலாம். ஆனால் நான் அப்படி மௌனமாக இருக்கமாட்டேன்.
தணிக்கை குழுவுக்கு சிலர் பணம் கொடுக்கிறார்கள். ஆனால் நான் சத்தியமாக கொடுத்ததில்லை.
எதிர்த்து நின்றால் யாரும் எம்மை அடக்க வர மாட்டார்கள். ஆனால் திரையுலகில் உள்ளவர்கள் பிரச்சனை வேண்டாம் சார் என்று பணத்தை கொடுத்துவிட்டு போகிறார்கள். இது கேவலமான நிலை''.
''நான் மாற்றம் கொண்டுவருவதற்கான கருவியாக மட்டுமே இருக்க விரும்புகிறேன். திரைப்பட விமர்சனம் செய்பவர் திரைப்படம் எடுக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அதுபோல அரசியலை விமர்சனம் செய்யும் நான் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் அவசியமில்லை. ஆனால் நான் விழிப்பாக இருப்பேன். மக்கள் நலன் குறித்து குரல் கொடுத்துக்கொண்டே இருப்பேன்''
'' ஜல்லிக்கட்டு என்பது பல பிரச்சனைகளால் கொதித்து போயிருந்த இளையவர்களும் மக்களும் கொதித்து எழும்பிய ஒரு புள்ளியே. அது வெறும் மாடு பிடிப்பதற்கான போராட்டம் மட்டுமல்ல. என்றும் அந்த நேர்காணலில் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment