அரசியல்

இரட்டை இலை யாருக்கு?



இரட்டை இலை யாருக்கு என்பதில் பெரும் சிக்கல் தோன்றியுள்ளது.
சசிகலா தரப்பும் பன்னீர்செல்வம் தரப்பும் தமக்கே இரட்டை இலை சட்டப்படி சொந்தம் என்கிறார்கள்.

ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் ஒதுக்குவது பற்றி மார்ச் 20-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்தால் சசிகலாவுக்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பன்னீர் செல்வம் தரப்பும்  இரட்டை இலை சின்னத்தைக் கேட்டு தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்திருந்தது.
இதனால் பதில் தரும்படி தேர்தல் ஆணையம் அதிமுக பொதுச் செயலாளர் என்று கூறிக்கொள்ளும் சசிகலாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது சசிகலா தரப்பை சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது.

அதிமுகவின் சசிகலா அணி சார்பில் அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் என்று கூறிக்கொள்ளும் டி.டி.வி.தினகரனும், ஓ.பி.எஸ் தரப்பில் மதுசூதனனும் களம் இறங்கியுள்ளனர்.
இவர்களுக்கு இடையே தீபா அத்தையின் தொகுதியை வென்றே தீருவேன் என்று களத்தில் உள்ளார்.
இது அதிமுகவுக்குள் மும்முனை போட்டியை  ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக வாக்குகள் கடுமையாக சிதற போகிறது. மேலும் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னத்தை அடைவதற்கு பலத்த போட்டி நிலவுவதால் ஆர்.கே.நகர் நிலவரம் கலவரமாகி கிடக்கிறது.

தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கே தனிச் சின்னம் வழங்கப்படும். ஏனைய கட்சிகளுக்கு, சுயேச்சை சின்னங்களே தரப்படும். அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர்களுக்குத் தனிச் சின்னம் வேண்டுமானால் கட்சியின் தலைமையிடம் இருந்து Form B உறுதிப்படுத்தும் படிவத்தை தொகுதியின் தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட நபர் மட்டுமே படிவங்களில் கையெழுத்திட வேண்டும். ஏனையோரின் கையெழுத்து செல்லாது. கையெழுத்துப் போடும் அதிகாரத்தை மற்றவர்களுக்கு மாற்றிக்கொடுக்கவும் தேர்தல் சட்டத்தில் இடமில்லை.

இதுவரை இந்த உறுதிப்படுத்தும் படிவத்தில் ஜெயலலிதாவே கையெழுத்திட்டிருந்தார். ஜெயலலிதா அப்போலோவில் இருந்தபோது அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளின் தேர்தல் வந்தது. அப்போது ஜெயலலிதா கையெழுத்துப் போடாமல் கைரேகை வைத்ததாக சசிகலா தரப்பு சொன்னது.

இப்போது ஜெயலலிதா இல்லாததால் படிவத்தில் கையெழுத்துப் போடும் அதிகாரம் யாரிடம் உள்ளது என்பது கேள்வி.

ஏற்கனவே சசிகலா பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்டதையே முழுதாக தேர்தல் ஆணையம்  ஏற்றுக்கொள்ளவில்லை. அதுகுறித்து சசிகலாவிடம் விளக்கம் கேட்டுள்ளது.

இந்த நிலையில் சசிகலா உறுதிப்படுத்தும் படிவங்களில் கையெழுத்திடுவது செல்லுபடியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

சரி சசிகலாக்கு இல்லாமல் தினகரன் போன்ற யாருக்காவது அந்த அதிகாரம் வழங்கப்பட்டதாக சொல்லலாம்.
ஆனால் செயற்குழுவோ, பொதுக்குழுவோ, நிர்வாகக் குழுவோ கூடிதான் அந்த முடிவை எடுக்க முடியும். அப்படி இந்த முடிவு எப்போது எடுக்கப்பட்டது என்ற  அடுத்த கேள்வி எழும்.

பன்னீர்செல்வம் தரப்பும் நாங்களே உண்மையான அதிகாரமுள்ள தரப்பு என்று கூறலாம்.

அ.தி.மு.க கட்சி யாப்பு விதிப்படி ஐந்தாண்டுகள் கட்சி உறுப்பினர்களாக இருந்தவர்களே பொதுச்செயலாளராக முடியும்.

2011 டிசம்பர் மாதம் சசிகலாவைக் கட்சியில் இருந்து ஜெயலலிதா நீக்கினார்.
2012  மார்ச் 28ம் திகதி, ‘என் உறவினர்கள் அக்காவுக்குத் துரோகம் செய்தது எனக்குத் தெரியாது.  அக்காவுக்கு எதிரான சதித் திட்டங்களும் தீட்டப்பட்டன. துரோகம் செய்தவர்களுடன் தொடர்புகளைத் துண்டித்து விட்டேன். எனக்கு அரசியல் ஆசையும் கிடையாது’ என்று  சசிகலா மன்னிப்பு அறிக்கை விட்டார்.
2012 மார்ச் 31ம் திகதி  ஜெயலலிதா அதை ஏற்றுக்கொண்டார்.
எனவே ஜெயலலிதாவால் மன்னிப்பு வழங்கப்பட்ட பின்னரே சசிகலா கட்சியில் மீண்டும் இணைந்திருக்க முடியும்.

அப்படிப்பார்த்தால் அ.தி.மு.க யாப்பு விதிப்படி வரும் ஏப்ரல் முதலாம் திகதிக்குப் பிறகுதான் சசிகலா கட்சியின் பொதுச்செயலாளராகத் தெரிவு செய்யப்பட வாய்ப்புண்டு. இந்த சட்ட சிக்கலால் சசிகலா அ .தி.மு.கவின் பொது செயலாளர் என்று கூற முடியாது. சசிகலா தரப்பால் நியமனம் மட்டுமே செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில்தான் இப்போது தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

சசிகலாவின் விளக்கத்தை தேர்தல் ஆணையம் நிராகரித்தால் ஏப்ரல் முதலாம் திகதியோ அல்லது பின்னரோதான் பொதுக்குழுவைக் கூட்டி, சசிகலாவை பொதுச்செயலாளராக தெரிவு செய்ய முடியும்.

ஆனால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 12 வருகிறது.  வேட்புமனு தாக்கல் இம்மாதம் 16ம்  திகதி தொடங்கி 23ம் திகதி முடிவடைகிறது

மார்ச் 27ம் திகதிக்குள் உறுதிப்படுத்தும் படிவங்கள் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் மார்ச் 27ம் திகத்திக்குள் சசிகலா பொது செயலாளராகி கையெழுத்திட முடியாது என்பதே இப்போது சசிகலா தரப்புக்கு ஏற்பட்டிருக்கும் பெரும் சிக்கலாக உள்ளது.

இதேவேளை சசிகலா தரப்பின் இந்த சிக்கலை நன்கு புரிந்து வைத்திருக்கின்ற பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையரை சந்தித்து விளக்கமளித்துள்ளது.
''அதிமுக சட்டவிதிக்கு மாறாக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும். ஆர்.கே. நகர் தேர்தலுக்கு முன்பாகவே இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கித் தர வேண்டும். டிடிவி தினகரன் மீது ஃபெரா வழக்குகள் இருப்பதால் அவரது வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தேர்தல் ஆணையரிடம் பன்னீர்செல்வம்  முன்வைத்திருந்தார்.

இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தின் முடிவையே இப்போது எல்லோரும் எதிர்பார்த்துள்ளனர்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.