அமெரிக்கா தலைமையிலான விமானப்படை 11.04.2017ல் சிரிய ஜனநாயக படை போராளிகள் மீது நடத்திய குண்டுவீச்சில் 18 போராளிகள் உயிரிழந்துள்ளனர். சிரியாவின் தப்கா பகுதியில் இடம்பெற்ற இந்த தாக்குதல் தவறுதலாக நடந்துவிட்டதாக அமெரிக்கா இன்று (13.04.2017) கவலை வெளியிட்டுள்ளது.
சிரியாவின் அதிபர் ஆசாத்தை பதவியிலிருந்து கவிழ்த்து ஆட்சியை கைப்பற்ற சிரிய ஜனநாயக படை போராளிகள் அரச படையினருக்கு எதிராக போரிட்டு வருகிறார்கள். அமெரிக்கா இந்த போராளிக்குழுவை உருவாக்கி ஆயுதம் கொடுத்து பயிற்சியளித்து உதவி வழங்கி வருகிறது.
சவூதி அரேபியா, துருக்கி போன்ற நாடுகளும் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுகின்றன.
ரஷ்யாவும் ஈரானும் ஆசாத்தின் அரச படைக்கு உதவி வழங்கி வருகின்றன. லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகளும் இவர்களுடன் இணைந்து செயல்படுகிறார்கள்.
சிரியாவின் இத்லிப் மாகாணத்திலுள்ள கான் ஷேக்குன் நகரில் 04.04.2017ல் நடத்தப்பட்ட இரசாயன ஆயுத தாக்குதலுக்கு சிரிய அரசாங்கத்தையும் அதிபர் ஆசாத்தையும் குற்றம் சாட்டி அமெரிக்கா ஏவுகணை தாக்குதல் நடத்தியிருந்தது.
அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலை ரஷ்யாவும் ஈரானும் வன்மையாக கண்டித்திருந்தன. இந்த தாக்குதலை பார்க்கும்போது ஏற்கனவே திட்டமிட்டதை போன்று தோன்றுவதாக ரஷ்யா சந்தேகம் தெரிவித்திருந்தது.
மேலும் சிரியா மீதான மேற்குலகின் குற்றச்சாட்டுகளை ரஷ்யா மறுத்ததுடன் ஐ.நா. விசேட குழுவை அனுப்பி இரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பில் ஆய்வு செய்ய வேண்டும். அதன் பின்னரே யார் தாக்குதலை செய்தார்கள் என்று முடிவெடுக்க வேண்டும் என்று ரஷ்யா கூறியிருந்தது.
சிரியாவுக்கு தொடர்ந்தும் நாங்கள் ஆதரவளிப்போம் என்று ரஷ்யாவும் ஈரானும் உறுதியாக தெரிவித்துள்ளன.
இதேவேளை அமெரிக்க படையினர் நடத்திய விமானத்தாக்குதலில் நூறுக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக சிரியா கண்டனம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment