இலங்கையில் தமிழர்கள் தமது உரிமைகளை கேட்டு பல இடங்களிலும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
காணாமல் செய்யப்பட்ட தமது உறவுகளை கண்டுபிடித்து தருமாறு இன்று 37வது நாளாக முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பாக மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 08.03.2017ல் ஆரம்பித்த போராட்டம் இன்றுவரை தீர்வின்றி தொடர்ந்து வருகிறது. தீர்வு கிடைக்கும் வரை தமது போராட்டம் தொடரும் என அம்மக்கள் தெரிவித்துள்ளனர்.
யுத்த காலத்தில் இராணுவத்தால் விசாரணைக்கென அழைத்துச்செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பல இடங்களில் போராட்டங்களை நடத்தியிருந்தார்கள். கைது செய்யப்பட்டவர்கள் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக உறவினர்கள் கூறுகிறார்கள். ஆனால் அப்படி எந்த இரகசிய முகாமும் இல்லை என்று அரசாங்கம் கூறுகிறது.
முல்லைத்தீவில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது வாழிடங்களை கேட்டு கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 46வது நாளாக இடம்பெற்று வருகின்றது.
138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மக்களின் வாழிடங்களை இராணுவத்திடமிருந்து மீட்டு வழங்குவதில் சட்ட சிக்கல் இருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதிகுடியிருப்பு மக்கள் நிரந்தர காணி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுத் தருமாறு கோரி, கடந்த 22.03.2017 முதல் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஒரு சில அரசியல்வாதிகள் தங்களை வந்து பார்த்த போதிலும் இதுவரை எந்தவிதமான உதவிகளும் செய்யவில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.
அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வரும் தமக்கு, காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தமது காணிகளுக்கான நியாய விலையை காணி உரிமையாளரிடமிருந்து பெற்றுத்தர அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
யுத்தத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள இந்த மக்களுக்கு சொந்தமாக நிரந்தர வாழிடம் இல்லை. இதனால் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள எந்தவித வீட்டுத் திட்டங்களுக்கும் உதவிகளும் இந்த மக்களுக்கு கிடைக்கவில்லை. எனவே தமக்கு காணி உறுதிப்பத்திரங்களை தருமாறு இந்த பன்னங்கண்டி சரஸ்வதிகுடியிருப்பு மக்கள் கோருகின்றனர்.
இதேவேளை மலையகத்தின் பல பகுதிகளில் 25 நாள் வேலை, அடிப்படை வசதிகள் கேட்டு தமிழ் மக்கள் அடிக்கடி போராட்டம் நடத்துகிறார்கள். சில பிரபலங்கள் மக்களிடம் வாக்குறுதி கொடுத்துவிட்டு தலைமறைவாகி விடுகிறார்கள். ஆனால் அரசாங்கம் இந்த மக்களுக்கு சரியான தீர்வை கொடுக்க இதுவரை முன்வரவில்லை.
கண்டி மாவட்டத்திலுள்ள ஹுன்னஸ்கிரிய எயாபார்க் தோட்ட மக்கள் கொழும்பிலும் போராட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு இலங்கையின் பல இடங்களில் தமிழ் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஆனால் அவை குறித்து ஆராய்ந்து சரியான தீர்வு வழங்க கூடிய தெளிவான திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இருப்பதாக தெரியவில்லை.
மறுபுறம் சிங்கள மக்களும் இந்த அரசாங்கத்திற்கு எதிராக பல போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கொழும்பில் தினமும் ஏதாவது ஒரு அமைப்பு அரசாங்கத்தை கண்டித்து போராட்டம் நடத்துகிறது. இந்த போராட்டங்களின் பின்னணியில் மகிந்த ராஜபக்ச இருப்பதாக அமைச்சர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் மக்கள் போராட அனுமதி இருக்கவில்லை. போராடியவர்கள் கடத்தப்பட்டார்கள், கொல்லப்பட்டார்கள், தாக்கப்பட்டார்கள். போராட்டங்கள் நடத்த அனுமதி இருக்கவில்லை. பயத்தினால் மக்களும் தமது உரிமையை கேட்டு போராட முன்வரவில்லை. ஆனால் எமது ஆட்சியில் மக்களுக்கு போராடும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.உரிமையை கேட்கும் ஜனநாயக சூழல் இருக்கிறது. எனவே மக்கள் பயமில்லாமல் போராடுகிறார்கள். இது ஜனநாயகத்தின் வெற்றி என்று அரசாங்கம் கூறுகிறது.
0 comments:
Post a Comment