நெதர்லாந்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்த குற்றத்துக்காக ஹேக் நீதிமன்றம் ஐந்து தமிழருக்கு விதித்த தண்டனையை நெதர்லாந்து உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.
நாட்டுக்கு வெளியே ஆயுதம் தாங்கி போரிட்டவர்களாக இருந்தாலும் நெதர்லாந்து குற்றவியல் சட்டப்படி அவர்களை தண்டிக்க முடியும் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள் என்ற காரணத்தால் நெதர்லாந்தில் தண்டனை பெற்றவர்கள் விடயத்தில் அந்த நாட்டின் உச்சநீதிமன்றம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக நெதர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2003-2010க்கு இடைப்பட்ட காலங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்காக நிதி சேகரித்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
பல தமிழர்களை அச்சுறுத்தி இந்த ஐவரும் நிதி சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.
மேலும், சட்டத்துக்குப் புறம்பான முறையில் அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்களையும் இவர்கள் வினியோகித்ததாகவும் கூறப்பட்டது. இவை மூலம் பெறப்பட்ட பணத்தை சட்ட விரோதமாக இலங்கைக்கு அனுப்பியதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. இக்குற்றச்சாட்டுக்களின் பேரில் குறித்த ஐவரும் கைது செய்யப்பட்டனர்.
நெதர்லாந்துப் பிரஜை ஒருவர், ராத்தர்டாம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். ஒரு நபர், தம்மை மிரட்டி பண வசூல் செய்கிறார் என்பதே புகார். அடுத்த சில தினங்களில், இதேபோல வேறு சில புகார்களும் நெதர்லாந்தில் வெவ்வேறு நகர போலீஸ் நிலையங்களில் பதிவாகின.
ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது நெதர்லாந்து காவல்துறை சம்பந்தப்பட்டவர்களை கண்காணிக்கத்தொடங்கினர்.
காவல்துறை பல மாதங்கள் சேகரித்த தகவல்களை நெதர்லாந்து தேசிய பாதுகாப்புக்குப் பொறுப்பான உளவுப் பிரிவான Algemene Inlichtingen- en Veiligheidsdienst (AIVD) என்ற அமைப்பிடம் கையளித்தனர்.
2011 ஏப்ரல் மாதம் இலங்கை தமிழரின் 16 இடங்கள் ஒரே நேரத்தில் நெதர்லாந்து உளவுத்துறை சுற்றிவளைத்தது. இதில் 7 பேர் கைதாகினர். கம்யூட்டர் ஹார்ட் டிஸ்க்குகள், டி.வி.டிக்கள், போட்டோக்கள் உட்பட பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. பணமாக 40,000 யூரோ எடுக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில், விடுதலைப்புலிகளின் சர்வதேச பிரதான கணக்காளரும், நெதர்லாந்து தலைவரும் அடக்கம் என்று கூறப்பட்டது. தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழ் இளையோர் அமைப்பு, தமிழ் மகளிர் அமைப்பு, தமிழ் கலை பண்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் நெதர்லாந்துத் தலைவர்களும் கைது செய்யப்பட்டதாக பி.பி.சி. செய்தி வெளியிட்டது.
பின்னர் இந்த விடயம் நெதர்லாந்து நீதிமன்றத்துக்குச் சென்றது. பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு நிதி சேகரித்தல் தொடர்பான வழக்கு பதிவாகியது. விடுதலை புலிகளுக்காக மிரட்டி பணம் சேகரித்ததாக Extortion, Material support to terrorism, Money laundering ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment