டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் மார்ச் 13 ஆம் தேதி ஆரம்பமான தமிழக விவசாயிகளின் போராட்டம் 23 நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.
இந்த போராட்டத்தை கைவிடும்படி பாஜக நெருக்கடி கொடுத்து வருகின்ற அதேவேளை தமிழக அரசும் பல அழுத்தங்களை கொடுத்து வருகிறது.
தமிழக அரசு மக்களவை துணை சபாநாயகர் எம்.தம்பிதுரை மீண்டும் விவசாயிகளை சந்தித்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு தமிழகம் திரும்புமாறும் கேட்டுக் கொண்டார். இதற்கு மறுத்த விவசாயிகள் தம் கோரிக்கைகள் நிறைவேறும் வரை டெல்லியில் இருந்து திரும்பப் போவதில்லை என உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
போராட்டத்தை முடிக்க சொல்லி அழுத்தங்கள் வரும் அதேவேளை விவசாயிகளுக்கு ஆதரவும் பெருகி வருகிறது. தமிழகத்தில் மாணவர்களும் இளையவர்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
தமிழக மக்கள் மட்டுமல்லாது பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சுமார் 500 விவசாயிகள் ஜந்தர் மந்தர் வந்து தமிழர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியின் தமிழக பொறுப்பாளரும் டெல்லியின் முன்னாள் சட்டத்துறைஅ அமைச்சருமான சோம்நாத் பாரதி கடந்த வாரம் நேரில் சென்று போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளித்திருந்தார்
தமிழகத்திலிருந்து வசீகரன் தலைமையில் ஐம்பது ஆம் ஆத்மி கட்சியினரும் நேரில் சென்று போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், 2.15 கோடி விவசாயிகளின் பயிர்க்கடன் ரூ.36,359 கோடியை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரபிரதேசத்தில் ஆதித்யநாத் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தது போன்று பஞ்சாபிலும் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இதேவேளை அனைத்து விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் முரளிதரன், நாகமுத்து ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.
இதனை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.
''தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுள்ள கடன்களையும் திருப்பிச் செலுத்தி, நாட்டின் முதுகெலும்புகளாக இருக்கும் விவசாயிகளையும், அவர்களது குடும்பங்களையும் வறுமையின் பிடியில் இருந்து மத்திய மாநில அரசுகள் மீட்க வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment