அரசியல்

ஏழரையை கூட்டும் எச்.ராஜா



இன்றுள்ள அரசியல்வாதிகளில் பொது நாகரீகமோ, அரசியல் நாகரிகமா, மேடை நாகரீகமோ இல்லாமல் பண்பற்று பேசுபவர் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா. மிக நீண்டகாலமாகவே அவர் இப்படித்தான் அநாகரிகமாக பேசி வருகிறார். மீடியாக்களை செய்தியாளர்களை கூட அவர் கேவலமாக திட்டினாலும் கூட மீண்டும் அவரிடம் மைக்கை நீட்டுகிறார்கள்

பா...வை அல்லது மோடியை விமர்சிப்பவர்களை, கேள்வி கேட்பவர்களை தேசத்துரோகிகள் என்கிறார்.
டெல்லியில் போராடும் விவசாயிகளையும் தேசத்துரோகி என்கிறார். சோனியாவை வெள்ளைக்காரி, இத்தாலிக்காரி என்கிறார். தமிழர்களை நாட்டை விட்டு வெளியேற சொல்கிறார். கம்யூனிஸ்ட் டி ராஜா தனது மகளை சுட்டுக் கொல்லச் சொல்ல வேண்டும், யெச்சூரி நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று பேட்டி கொடுக்கிறார்

ஜல்லிக்கட்டுக்கு போராடிய இளைஞர்களை தேச விரோதிகள், இவர்களுக்கு எப்படி பணம் வந்தது என்று கேட்டிருந்தார். பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்தால் வைகோ பாதுகாப்பாக திரும்ப முடியாது என்று அச்சுறுத்தியிருந்தார். நடிகர் கமல்ஹாசனை கொச்சைப்படுத்தி பத்திரிகையில் கடிதம் எழுதியிருந்தார். பெரியாரை ஒருமையில் விழித்து கேவலமாக திட்டி இருந்தார்.

எச்.ராஜாவால் இப்படி சகட்டு மேனிக்கு எல்லோரையும் பண்பற்ற வார்த்தைகளால் திட்டுவதற்கு பொதுவெளியில் பேசுவதற்கும் எப்படி முடிகிறது? இப்படி பேசுபவரை எப்படி பா... தேசிய செயலாளராக வைத்திருக்கிறது? என்ற கேள்விகள் எழுகின்றன.

''தமிழக பா...,விற்குள் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கருதினால், அதற்கு அவர் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடலாமே தவிர, இது போன்று பத்திரிக்கையாளர்களையும், அரசியல் கட்சித் தலைவர்களையும், தேசம் போற்றும் தலைவர்களையும் அநாகரீகமாக விமர்சிப்பது அவர் வகிக்கும் அரசு பதவிக்கும் அழகல்ல. அவர் சார்ந்திருக்கும் ஒரு தேசிய கட்சிக்கும் ஏற்ற இலக்கணம் அல்ல'' என்று எச்.ராஜாவின் பேச்சுக்கு தி.மு.. செயல்தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்

மேலும் ''தேசபக்தி என்பதும் இந்தியன் என்பதும் ஏதோ தனக்கு மட்டுமே நிரந்தர குத்தகைக்கு விடப்பட்டது போல மற்றவர்களை 'தேச விரோதிகள்' என்றும் 'இந்திய விரோதிகள்' என்றும் பேசுவதை அவர் உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும். தமிழர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதையும், தேசபக்தியில் தமிழர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதையும் எச்.ராஜா போன்றவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். என்று  ஸ்டாலின் ராஜாவை கண்டித்துள்ளார்..

பாஜக.வின் தேசிய செயலாளர் எச்.ராஜாவின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

''தமிழகத்தில் பாஜகவை காலூன்ற வைப்பதற்கு எடுக்கப்பட்டு வருகிற பகீரத முயற்சிகளுக்கு பலனில்லாமல் போய்க் கொண்டிருப்பதால் எச்.ராஜாவை போன்றவர்கள் ஆத்திரத்தில், காழ்ப்புணர்ச்சியோடு பேசி வருகின்றனர். நாலாந்திர அரசியல்வாதியைப் போல பேசி வருகிற ராஜாவை 55 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட இந்திய தேசிய காங்கிரசின் சார்பில் எச்சரிக்க விரும்புகிறோம். இத்தகைய பேச்சுக்களை உடனடியாக அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். அத்துமீறிப் பேசி வருகிற இவரை அகில இந்திய பாஜக அடக்கி வைக்க வேண்டும்'' என்று அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

இதேபோல ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் போராடிய மாணவர்களையும் எச்.ராஜா கேவலப்படுத்தி இருந்தார்.  ''போராட்டத்தில் 25 லட்சம் பேர் கலந்து கொண்டனர். ஒரு நபருக்கு தினமும் 150 ரூபாய் உணவு செலவு என எடுத்துக்கொண்டால், உணவுக்கு செலவிடப்பட்ட 225 கோடி ரூபாய். இது எப்படி வந்தது? போராட்டத்தை நடத்துபவர்கள் தீவீரவாதிகள்'' என்று குறிப்பிட்டிருந்தார்.

எச்.ராஜாவின் அந்த கருத்துக்கு பல அரசியல் தலைவர்கள், அமைப்புகளை சார்ந்தோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

''இளைஞர்கள் தன்னெழுச்சி போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறார் ஹெச்.ராஜா. போராட்டக்காரர்களுக்கு கொடுக்கப்பட்ட உணவை வைத்து கொச்சைப்படுத்துவது காட்டுமிராண்டி சிந்தனையின் வெளிப்பாடு," என ஹெச்.ராஜாவுக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி கண்டனம் தெரிவித்திருந்தார்.

"குஜராத்தில் டீ விற்றவர், இன்று ஆயிரக்கணக்கான கோடி செலவு செய்து தேர்தலில் வெற்றி பெற்று இந்திய பிரதமராக முடிந்திருக்கிறது. பத்து லட்ச ரூபாய்க்கு கோட் தைத்து அணிய முடிகிறது. உலகையே வியக்க வைத்த ஒரு மாபெரும் மக்கள் தன்னெழுச்சி இயக்கத்துக்கு உணவு கிடைத்ததில் இத்தனை குதர்க்கம் பாராட்டும் ஹெச்.ராஜா,தமிழகத்தை மற்றுமொரு காஷ்மீராக்க பார்க்கிறார்" என்றும் ஜோதிமணி சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேபோல ''பிரதமர் மோடியையோ, மத்திய அரசையோ அல்லது ராஜ்நாத் சிங் போன்ற தலைவர்களைப் பற்றியோ வைகோ பேசிவிட்டு பாதுகாப்பாக திரும்ப முடியாது. அவர் நாவை அடக்காவிட்டால் அவரை அடக்குவது எப்படி என்று ஒவ்வொரு பாஜக தொண்டனுக்கும் தெரியும்'' என்றும் பாரதிய ஜனதா கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எச்.ராஜா தஞ்சையில் பத்திரிகையாளர்களிடம் கூறியிருந்தார். எச்.ராஜாவின் இந்த மிரட்டல் பேச்சுக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தனர்.

இதற்கு தி.மு.. தலைவர் கருணாநிதி, தமிழக காங்கிரஸ் தலைவர் .வி.கே.எஸ். இளங்கோவன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் நல்லக்கண்ணு, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், தமிழ்த் தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன், எஸ்.டி.பி. கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி, திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மக்கள் உரிமைக் களம் தலைமை ஒருங்கிணைப்பாளர் இனியன்,பா... நிறுவனர் ராமதாஸ், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், மே 17 இயக்கம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர். தனபாலன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் என பலரும் கடுமையான கண்டனங்களை எச்.ராஜாவுக்கு தெரிவித்திருந்தனர்.

கடந்த வருடம் பிப்ரவரியில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா, கோவையில் செய்தியாளர்களிடம் பேசும்போது , “டி. ராஜா உண்மையான தேசபக்தராக இருந்தால் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதற்காக அவர் மகள் அபராஜிதாவை சுட்டுக்கொல்ல வேண்டும். என் மகள் அந்த ஆர்ப்பாட்டத்தில் நின்றிருந்தால் நான் அதைத்தான் செய்திருப்பேன். யெச்சூரி நாட்டை விட்டு வெளியேற வேண்டும்என்று தெரிவித்திருந்தார்.

இந்த பேச்சு ரத்த தாகம் கொண்ட வன்முறை பேச்சு என்று பலரும் வன்மையாக கண்டித்திருந்தனர்.

மேலும் டி ராஜாவின் மகள் மட்டுமல்ல ஜே என் யூ மாணவர் தலைவர் கன்னய்யா குமாரும் அத்தகைய பிரிவினை கோஷங்களை எழுப்பவில்லை, அதைச் செய்தது பா மாணவர் பிரிவுதான் என்று பின்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

அதேபோல 2015 நவம்பரில் நடிகர் கமல்ஹாசன் குறித்து பா...வின் தேசிய செயலாளர் எச்.ராஜா வார இதழில் கடிதம் எழுதியிருந்தார்.

"என் தட்டில் என்ன உணவு உண்ண வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று கமல்ஹாசன் கூறிய கருத்துக்கு எச்.ராஜா கடுமையான வார்த்தைகளை பாவித்து திட்டி இருந்தார்.

இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ''தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என மொழி எல்லைகளைக் கடந்து திரைப்படங்களில் நடித்து தமிழர்களின் பாராட்டை மட்டுமல்ல, உலக மக்களின் பாராட்டையும் பெற்றவர் கமல்ஹாசன். 4 முறை தேசிய விருதும், 19 முறை பிலிம்பேர் விருதும், பத்மஸ்ரீ, பத்மபூஷன் என பல பட்டங்களை, பரிசுகளை குவித்த தமிழ்த்தாயின் மூத்த கலைமகன் கமல்ஹாசன் மீது குறிவைத்து தாக்குகிற பா...வினரின் உள்நோக்கத்தை அனைவரும் அறிந்து வைத்திருக்கிறார்கள். கமல்ஹாசன் தமிழ் மண்ணில் பிறந்தது தமிழருக்கு பெருமை. இந்தியருக்கு பெருமை'' என்று பதிலடி கொடுத்திருந்தார்.

மேலும் பெரியார் குறித்தும் எச்.ராஜா கேவலமாக பேசியிருந்தார். பெரியார் ஒரு தேச துரோகி, பைத்தியக்காரன், பெரும் தலித் விரோதி, பெண்ணடிமை செய்தார், தினந்தோறும் விபசாரிகளிடம் போனார் என்றெல்லாம் மேடையில் பேசியிருந்தார்.

எச்.ராஜாவின் இந்த பேச்சுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மதுரையில் நடைபெற்ற சங்கத்தின் மாநிலச்செயற்குழு கூட்டத்தில்
''தமிழகத்தில் சமூகநீதி, பண்பாட்டுப் போராளியாக இறுதி மூச்சு வரை வாழ்ந்த தந்தை பெரியார் அவர்களை பாஜக மாநிலத் துணைத் தலைவர் எச். ராஜா ஒருமையில் பேசுகிற பேச்சு இணையத்தில் வெளிவந்துள்ளது. இந்தப் பேச்சில் அவர் பயன்படுத்தியுள்ள சொற்கள் சுயமரியாதைக் கருத்துகளையும் பகுத்தறிவுச் சிந்தனைகளையும் பரப்பிய அந்த மகத்தான தலைவரை மிகவும் இழிவுபடுத்துவதாக உள்ளது

இந்தப் பேச்சை எச். ராஜா என்ற தனிமனிதரின் கருத்தாக மட்டும் பார்க்க இயலாது. சமூகத்தில் புரையோடிப்போயிருந்த மூட நம்பிக்கைகளை, அறியாமையை, புராணப்புளுகுகளை அம்பலப்படுத்தி அயராது, சமரசம் செய்து கொள்ளாமல் பரப்புரை செய்தவர் பெரியார். இப்போதும் சாதி வெறிக்கும் மத வெறிக்கும்எதிராக,பெண்ணுரிமைக்கு ஆதரவாக முன்னெடுக்க வேண்டிய கருத்தாயுதங்களைப் பெரியாரிடமிருந்து பெற முடிகிறது

எந்தத் தருணத்திலும் மதவாத பிற்போக்கு சக்திகளால் நெருங்க முடியாத நெருப்பாக பெரியார் திகழ்வதால் காழ்ப்புணர்வு முன்வைக்கப்படுகிறது. புதிய தலைமுறை இளைஞர்களைத் திசை திருப்புவது, சங் பரிவார இந்துத்துவா சக்திகளுக்கு வெறியேற்றுவது, கருத்துக்களத்தில் விவாதத்தை முன்வைப்பதற்கு பதிலாக மூர்க்கத்தை மூலதனமாக்கி ஆதாயம் தேடுவது என்று முயல்கிறார்கள்
எச். ராஜாவின் வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கு தமுஎகச மாநிலச் செயற்குழு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது'' என தெரிவித்து கண்டனம் நிறைவேற்றப்பட்டது.

இவ்வாறு சகட்டு மேனிக்கு மாற்றுக்கருத்துள்ள எல்லோரையும் எச்.ராஜா தனது வன்முறையான பேச்சுக்களால் தாக்கி வருகிறார்

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் எச்.ராஜா மீது கடுமையான விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.

தொலைகாட்சி விவாதங்களில் தான் சொன்ன விடயங்களையே அடுத்த நிமிடம் சொல்லவில்லை என்று மறுக்கிறார். பிற்போக்கான முட்டாள்தனமான கருத்துக்களை கூறுகிறார். வரலாற்றை தப்பும் தவறுமாக திரித்து கூறுகிறார்.

எச்.ராஜாவினால் புத்திசாலித்தனமாக பேச முடியவில்லை. விவாதங்களை ஆரோக்கியமான கருத்துடன் வைக்க முடியவில்லை. ஆதார பூர்வமாக தனது கருத்தை மக்களிடம் சொல்ல முடியவில்லை. எல்லாவற்றையும் விட தமிழகத்தில் பா...வை ஒரு கட்சியாகவே யாரும் மதிப்பதில்லை. அதிலும் எச்.ராஜாவை யாரும் கண்டுகொள்வதில்லை. எனவே தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள அவர் பண்பற்ற வார்த்தைகளையும், வன்முறையான அச்சுறுத்தும் வார்த்தைகளையும் கொட்டுகிறார் என்று பலரும் வலைத்தளங்களில் விமர்சித்து வருகிறார்கள்



0 comments:

Post a Comment

Powered by Blogger.