மகிந்தவின் ஆட்சிக்காலத்தில் சீனா இலங்கைக்கு ஏராளமாக கடன் கொடுத்தது. அபிவிருத்தி நடவடிக்கை என்ற பெயரில் இந்த கடன்கள் வழங்கப்பட்டன. அதில் பெரும்பகுதியை தமது வாங்கி கணக்கில் பதுக்கிய ராஜபக்ச சகோதரர்கள் மிகுதி பணத்தில் அபிவிருத்தி கட்டுமானங்களை செய்தார்கள். சாலைகள் போடப்பட்டன. பாலங்கள் அமைக்கப்பட்டன. துறைமுகங்கள் நவீனப்படுத்தப்பட்டன.
பணம் கொடுத்த சீனா கட்டுமானங்களை தனது நாட்டு நிறுவனங்களை வைத்தே செய்து முடித்தது. கொடுத்த பணத்தின் பெரும்பகுதியை சீனா இந்த வகையில் மீளவும் எடுத்துக்கொண்டது.
ஆனால் கடன் அப்படியே இருக்கிறது. வட்டியை மட்டும் இலங்கை அரசாங்கம் கட்டி வருகிறது. ஆனால் அதை கூட கட்டும் பொருளாதார வலிமை இலங்கையிடம் இல்லை.
இந்த நிலையில் ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு வாங்கிய கடன் இலங்கை அரசாங்கத்தால் கட்ட முடியாத பெரும் சுமையாக இருந்தது. எனவே புதிய அரசாங்கம் அதனை சீனாவுக்கே குத்தகைக்கு விட முடிவெடுத்து இருக்கிறது.
இந்த முடிவு குறித்து பலத்த கண்டனங்கள் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்த பிரச்னைக்கு மூல காரணமான மகிந்தவே போராட்டங்களை தூண்டி விடுகிறார். துறைமுகத்தை சீனாவுக்கு கொடுப்பதால் நாட்டுக்கு அழிவு வர போகிறது என்று வதந்தியை பரப்புகிறார் என்று அரசாங்க அமைச்சர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
இந்த நிலையில் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ''ஹம்பாந்தோட்டை துறைமுகத் திட்டம் மிகப்பெரிய கடன் சுமையாக மாறியுள்ளது. இதனை நாம் தேசிய சொத்தாக மாற்ற வேண்டியிருக்கிறது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணக்க சீன அபிவிருத்தி வங்கியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடன் பெற்றுள்ளார். ஐந்து வருடங்களில் அந்தத் துறைமுகத்திலிருந்து வருமானம் ஈட்டிக்கொள்ளலாம் என அன்று அதிகாரிகள் கூறியிருந்தனர். இதனடிப்படையில் 2016ஆம் ஆண்டு முதல் கடன்தொகையை மீள செலுத்த முடியுமெனக் கூறியிருந்தனர். 130 கோடி டொலர் கடன் பெறப்பட்டுள்ளது. மிகவும் சிரமத்திற்கு மத்தியில் 20 கோடி டொலர் கடன் மீள் செலுத்தப்பட்டுள்ளது. இந்தத் துறைமுகத்திற்கு எதிர்பார்த்தைப் போல கப்பல்கள் வராது என்பது 2013ல் தெரிய வந்தது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலை மக்கேசர் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் 2017 யோவுன் புரய நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறும்போது ''அம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஒரு பகுதியை அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தம் சீன நிறுவனங்கள் இரண்டிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும், இது எமக்கு நட்டத்தை ஏற்படுத்தும் திட்டமாகும். காரணம் கடனை நாமே செலுத்த வேண்டியிருக்கிறது. இலாபத்தை அவர்கள் ஈட்டிச் செல்கின்றனர். கடனை செலுத்த முடியாமல் இருக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறு இதனை முன்னெடுக்க முடியாதிருந்தது. நாம் ஆட்சிக்கு வந்தபோது மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தோம். 3600 கோடி ரூபா கடன் செலுத்தவேண்டியிருந்தது. இதனை கொழும்பு துறைமுகத்தின் ஊடாக செலுத்துவது மிகப்பெரிய நட்டமாகும். இதனைச் செலுத்துவதற்கு வரியை அதிகரித்தால், எமக்கு வாக்களித்த மக்களே எம்மை அடித்து விரட்டுவர்.
இந்த கிட்டான நிலையில் 2016ஆம் ஆண்டு அமைச்சரவைக் குழுவொன்றுடன் நானும் சீனாவிற்குச் சென்று இந்தக் கடனை மீள செலுத்த முடியாது என அவர்களுக்குக் கூறினோம். எனவே தயவு செய்து இந்தக் கடனை இரத்துச் செய்யுமாறு கோரினோம். இல்லையெனில் நாம் இதனை மீளச் செலுத்த மாட்டோம் எனக் கூறினோம். பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் கலந்தாலோசித்து, கடனை இரத்துச் செய்வது சிக்கலானது, எமக்கு நிவாரணமொன்றைத் தருவதாகக் கூறினர். சீன - இலங்கை நிறுவனமொன்றுக்கு துறைமுகத்தை குத்தகைக்கு வழங்குமாறு ஆலோசனை வழங்கினர். இந்த குத்தகைப் பணத்தின்மூலம் இந்த கடனை ஒரே தடவையில் செலுத்துமாறு கோரினர்.
இது நல்லதொரு தீர்வாக நாம் எண்ணினோம். நல்ல குத்தகைத் தொகை கிடைக்குமாயின் பிரச்சினை இல்லையென்பதைத் தீர்மானித்தோம். எமது தரப்பில் இலங்கை துறைமுக அதிகார சபையை முன்மொழிந்தோம். சீனா சார்பில் இரண்டு நிறுவனங்கள் முன்மொழியப்பட்டன. இதில் சிறந்த திட்டயோசனையை நாம் ஏற்றுக்கொண்டோம். 110 கோடி டொலர் குத்தகைப் பணத்தை அந்த நிறுவனம் தருவதாகக் கூறியது. 110 கோடி டொலர் கடன் தொகையை, குத்தகைப் பணத்தின் மூலம் செலுத்துவது நல்ல திட்டமாக இருந்தது. அத்துடன், 20 சதவீத பங்குகளை எமக்கு இலவசமாக தருவதாகக் கூறினர். எஞ்சிய பங்குகள் குறித்து கலந்தாலோசிப்பதாகக் கூறினர்'' என்று தெரிவித்துள்ளார்.
ஒரு நாட்டை அடிமைப்படுத்த முன்னர் போர் பயன்பட்டது. இப்போது கடன் கொடுத்தல் பயன்படுகிறது.
ஒரு நாட்டுக்கு திருப்பித்தர முடியாத அளவுக்கு பணத்தை கடனாக அள்ளிக்கொடுத்து அடிமையாக்குவதே இன்றைய நவீன முறையாக உள்ளது.
உலகம் முழுவதும் இந்த நடைமுறை பெரும் வெற்றியை கொடுத்துள்ளது.
சீனா இதே தந்திரத்தை இலங்கையில் பயன்படுத்தி வெற்றி கண்டு வருகிறது.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை இலங்கை அரசாங்கமே சீனாவிடம் ஒப்படைக்கும் நிலை தோன்றியுள்ளது. இதுதான் கடன் வழங்கி வெற்றி பெரும் தந்திரம்.
இதேவேளை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு கொடுப்பதை இந்தியா விரும்பவில்லை. தனது எதிர்ப்பை இந்தியா வெளியிட்டுள்ளது.
அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார செயலாளர் எஸ். ஜெய்சங்கர் இந்தியாவின் எதிர்ப்பை இலங்கையிடம் தெரிவித்துள்ளார் என செய்திகள் கசிந்துள்ளன.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்குவதன் மூலம் பிராந்தியத்தில் அரசியல் சமநிலை இல்லாமல் போகும். இதனால் பல பிரச்சனைகள் தோன்றும் என இந்தியா கவலை கொண்டுள்ளதாக தெரிகிறது.
0 comments:
Post a Comment