அரசியல்

தமிழ்க்கூட்டமைப்பினர் துரோகிகள் - கஜேந்திரகுமார்



''தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவாவில் நடந்துமுடிந்த ஐ.நாமனித உரிமைகள் பேரவையின் 34 ஆவது கூட்டத் தொடரில் ஸ்ரீலங்காவிற்கு காலஅவகாசம் வழங்கும் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கியது. இதன்மூலம் தமிழ் மக்களின் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா அரசாங்கத்தை காப்பாற்றி, தமிழ் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது'' என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

நேற்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், யாழ். ஊடக அமையத்தில் 'ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் கூட்டத்தொடரும் தமிழ் தலைமைகளின் செயற்பாடும்' என்ற தலைப்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  கூட்டமைப்பின் மீது இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

''கூட்டமைப்பின் இந்த நடவடிக்கைகளால் கடும் விரக்தியடைந்துள்ள  தமிழ் மக்கள் தற்போதைய ரணில் – மைத்ரி அரசாங்கத்தை மாத்திரமன்றி அவர்களுடன் சேர்த்து எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனையும் அரசியல் ரீதியாக தோற்கடிப்பார்கள். பொறுப்புக் கூறும் விடயத்தில் உதாசீனமாக இருந்துவரும் ஸ்ரீலங்காவை ஐ.நா வின் பாதுகாப்பு சபைக்கு கொண்டு செல்வதற்கு இருந்த அரிய சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் தவறவிட்டுள்ளனர்'' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுமந்திரன் போன்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் இலங்கைக்கு கால அவகாசம் கொடுப்பதன் மூலம் இலங்கை செய்வதாக வாக்குறுதி கொடுத்து செய்யாமல் இருக்கும் வேலைகளை செய்ய வைக்க முடியும் என்று கூறுகின்றனர். கால அட்டவணையுடன் கால அவகாசம் கொடுத்து ஐ.நா.வின் கடுமையான கண்காணிப்பில் அவற்றை செய்யவைக்க வேண்டும். கால அவகாசம் கொடுக்காது விட்டால் வாக்குறுதி கொடுத்த விடயங்களை அரசாங்கம் செய்யாது தப்பித்து விடும் என்று சுமந்திரன் போன்றோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

''தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு பின்னர் நிறைவேற்றாமல் இருப்பதைப்போல சர்வதேசத்திடம் செய்ய முடியாது. இது முன்னர் மகிந்த ராஜபக்ஷ கற்றுக்கொண்ட கசப்பான பாடம்.
மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் 2009ல் ஐ.நா.மனித உரிமை பேரவையில் வாக்குறுதியை கொடுத்துவிட்டு, கூட்டறிக்கையில் கையொப்பம் வைத்துவிட்டு பின்னர் நிறைவேற்றாமல் விட்டதால்தான் இந்த சர்வதேச விசாரணை என்ற விடயமும் வந்தது. மகிந்த ராஜபக்ஷ பதவி விலகவும் நேரிட்டது. எனவே மகிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்ட நிலையை கவனத்தில் கொண்டு இன்றைய அரசாங்கம் செயல்படவேண்டும். இல்லாவிட்டால் மகிந்தவுக்கு ஏற்பட்ட நிலையே இன்றைய ஆட்சியாளர்களுக்கும் நேரும்'' என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எச்சரிக்கை முன்னர் விடுத்திருந்தார்.

இதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவாளரான பத்தி எழுத்தாளர் நிலாந்தன் ஜெனிவாவில் தமிழ் தரப்பின் தோல்விக்கு காரணம் தாயகத்தை மையமாக கொண்டு தமிழ் தரப்புகள் செயல்படவில்லை. புலம்பெயர் அமைப்புகள் தலைமை தாங்க முற்படுகின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

''தமிழ்த்தரப்பை ஒருங்கிணைப்பது என்பது தாயகத்தில் இருந்துதான் செய்யப்பட வேண்டும். தாயகம், தமிழகம், புலம்பெயர் தமிழர்கள் ஆகிய மூன்றையும் தாயகம் என்ற மையத்திலிருந்துதான் ஒருங்கிணைக்க வேண்டும். யுத்த காலங்களில் அப்படித்தான் நடந்தது. ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்தபின் எல்லாமே சிதறிப் போய் விட்டது. மையம் புலம்பெயர் தமிழர்களுக்கு நகர்த்தப்பட்டு விட்டதாக ஒரு தோற்றம் உருவாகியது. ஆனால் மையம் தாயகத்தில் தான் இருக்க முடியும். தாயகத்தில் மக்கள் ஆணையைப் பெற்ற ஒரு கட்சி அல்லது வெகுசன அரசியலை வெற்றிகரமாக முன்னெடுக்கும் ஓர் அமைப்பு போன்றவைதான் தாயகம், தமிழகம், டயஸ்பொறா ஆகிய மூன்று தரப்புக்களையும் ஒருங்கிணைக்க முடியும். ஜெனீவாவைக் கையாள வேண்டும் என்ற தரிசனம் தாயகத்தில் இல்லையென்றால் அது வேறெங்கு இருந்தாலும் பொருத்தமான விளைவுகளைத் தராது'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.