இந்தியா

தமிழக காவல்துறையின் காட்டுமிராண்டித்தனம்



திருப்பூர் சாமளாபுரத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று போராடிய பொதுமக்கள் மீது நேற்று தமிழக காவல்துறை காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தியிருந்தது. ஏடிஎஸ்பி பாண்டியராஜன் ஈஸ்வரி என்ற பெண்ணை லத்தியால் கடுமையாக தாக்கி  கன்னத்தில் ஓங்கி அறைந்த வீடியோ தொலைக்காட்சிகளில் வெளியாகியிருந்தது. இதையடுத்து தமிழகத்தில் காவல்துறை மீது கடும் எதிர்ப்புணர்வு ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் தொடர்ந்து 7 மணி நேரம் நடத்திய போராட்டத்தில் பெண்கள் அதிக அளவில் கலந்து கொண்டு டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக தமது எதிர்ப்பினை காட்டியிருந்தனர்.

இதையடுத்து போலீசார் போராட்டத்தை ஒடுக்க காட்டுமிராண்டித்தனமாக கடுமையான தாக்குதல்களை பொதுமக்கள் மீது நடத்தினார்கள். ஏடிஎஸ்பி பாண்டியராஜன் பெண் ஒருவரை கன்னத்தில் ஓங்கி அறைந்ததுடன் பலர் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியிருந்தார். போலீஸ் தடியடியில் இளைஞர் ஒருவருக்கு மண்டை உடைந்து ரத்தம் கொட்டியதுடன் பலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன.

பொலிஸாரின் இந்த அடக்குமுறைக்கு எதிராக தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பணிநீக்கம் செய்யக் கோரியும் சாமளாபுரத்தில் இன்று மீண்டும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்றுள்ளனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை நேரில் சென்று கலந்துகொண்டுள்ளார்.

''டாஸ்மாக் மதுக்கடைக்கு எதிராக தமிழ்நாட்டில் பெண்கள் புரட்சி வெடிக்கும். மதுக்கடையை எதிர்த்து போராடிய ஈஸ்வரியை கண்மூடித்தனமாக பாண்டியராஜன் தாக்கியுள்ளார். ஏடிஎஸ்பியை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும். தமிழகத்தில் இனி ஒரு டாஸ்மாக் கடையைக் கூட திறக்க பாஜக அனுமதிக்காது'' போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழிசை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

ஏடிஎஸ்பி பாண்டியராஜனால் கடுமையாக தாக்கப்பட்ட ஈஸ்வரி பாண்டியரான் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், அவர் டிஸ்மிஸ் செய்யப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்துளார்.

ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்த பொதுமக்களுக்கு உரிமை உண்டு. அவர்களை தாக்கும் அதிகாரம் காவல்துறைக்கு இல்லை. அதிலும் பெண்கள் போராட்டம் நடத்தும்போது அவர்களை ஆண் போலீசார் தொட்டுக்கூட விலக்க கூடாது என்பதே விதிமுறை. அதற்கு பெண் போலீசார் இருக்கவேண்டும்.

எனவே இந்திய தண்டனைச் சட்டம் 323 (வேண்டுமென்றே காயம் ஏற்படுத்துவது), பிரிவு 354 (பெண்ணின் மாண்புக்கு களங்கம் விளைவிப்பது) ஆகிய வழக்குகளை பெண்ணை தாக்கிய ஏடிஎஸ்பி பாண்டியராஜன் மீது பதிவு செய்யவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் போலீஸார் தடியடி குறித்து தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், காவல் துறை டிஜிபி ராஜேந்திரன், திருப்பூர் மாவட்ட எஸ்.பி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சர்ச்சைக்குரிய டாஸ்மாக் கடை மூட உத்தரவிட்டுள்ளார். 

0 comments:

Post a Comment

Powered by Blogger.