தினகரன் தரப்பு வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது பல சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது. வாக்காளர்களுக்கு தினகரன் பணம் கொடுத்தார் என்றால் அவரை தேர்தலில் போட்டியிட முடியாது தடை செய்திருக்க வேண்டும். மாறாக தேர்தலையே ரத்து செய்தது தவறு என்று குரல்கள் எழும்பியுள்ளன.
ஆர்.கே.நகர் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் அநீதி இழைத்து விட்டதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
"வகுப்பில் ஒரு மாணவன் முறைகேடான வகையில் தேர்வு எழுதினால் அந்த மாணவனை வெளியே அனுப்புவதுதான முறை அதை விடுத்து, தேர்வையே மொத்தமாக ரத்து செய்வது என்பது அந்த மாணவனை தப்பிக்க வைக்கின்ற செயல் மட்டுமின்றி, நம்பிக்கையுடன் தேர்வு எழுதும் மற்ற மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி" என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
''ஆர்.கே. நகரில் பணப் பட்டுவாடாவை காரணமாகக் கூறி, தேர்தலை ரத்து செய்திருப்பது ஏற்புடையதல்ல. மீண்டும் சில மாதங்களில் தேர்தல் நடக்கும்போது, பணப் பட்டுவாடா இல்லாமல் தேர்தல் நடத்த முடியும் என்பதற்கு தேர்தல் ஆணையத்தால் எந்த உத்தரவாதமும் தரப்படவில்லை. இந்நிலையில் இடைத்தேர்தலை ரத்து செய்துள்ள தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை ஐனநாயகத்தைச் சீரழிக்கக் கூடியது. பாஜகவின் துணையுடன் ஐனநாயகப் படுகொலையை தேர்தல் ஆணையம் செய்துள்ளது'' இந்திய கம்யூ. மாநில செயலாளர் இரா.முத்தரசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆர்.கே.நகரில் தேர்தல் ஆணையம் முழுமையாக தோற்றுவிட்டது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
''வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தோற்றுவிட்டது.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு மற்றும் உறவினர் வீடுகளில் வருமான வரித்துறை நடத்திய சோதனையில் பணம், ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில்தான் தேர்தல் ரத்து செய்யப்பட்டது எனில், விஜயபாஸ்கர் உட்பட சம்பந்தப்பட்டோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணம் விநியோகித்த வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். பணத்தால் வெற்றி பெற முயற்சித்த கட்சிகளுக்கு இடையே நாங்கள் கொள்கையை எடுத்துக் கூறி பிரச்சாரம் செய்து பல லட்சம் ரூபாய் செலவிட்டுள்ளோம். தேர்தல் ஆணையம் எங்களுக்கு இழப்பீட்டை வழங்க வேண்டும்.
ஆர்.கே.நகரில் ரூ.84 கோடி வரை பணம் வழங்கப்பட்டுள்ளது. எனவே பண மதிப்பு நீக்கத்தால் கறுப்பு பணம் ஒழியவில்லை என்பதற்கு ஆர்.கே.நகரில் நடந்த பணப் பட்டுவாடாவே உதாரணம்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் மேலும் குறிப்பிட்டுள்ளார். .
நாளை புதன்கிழமை (12.04.2017) நடைபெற இருந்த இந்த தேர்தல் வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தால் ரத்து செய்யப்பட்டது.
'ஆர்.கே.நகரில் நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் தற்போது இல்லை. தொகுதியில் அதிகமான பணப்பட்டுவாடா நடந்தது வருமான வரித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. முறைகேடுகளை தடுக்க மேற்கொண்ட முயற்சிகளை தடுத்து நூதன முறையில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பார்க்கும்போது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 21ல் தேர்தலை ரத்து செய்ய அதிகாரம் உள்ளது. எனவே, அரசியல் சட்டம் 324வது பிரிவின் கீழ் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது' என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
முன்னதாக வருமான வரித்துறையினர் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த வெள்ளியன்று (07.04.2017) சோதனை நடத்தினர். இதில் 89 கோடி ரூபாய் வரை ஆர்கே நகர் வாக்காளர்களுக்கு லஞ்சம் வழங்கியதற்கான ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சோதனை அறிக்கையை வருமான வரித்துறை ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவிடம் வழங்கியது. அறிக்கையுடன் டெல்லி சென்ற விக்ரம் பத்ரா அதனை தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை (09.04.2017) இரவு தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்தது.
இதேவேளை வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் வருமான வரித் துறை அறிக்கை அடிப்படையில், அதிமுக அம்மா கட்சியின் வேட்பாளர் டிடிவி தினகனுக்கு ‘ஏன் வேட் பாளர் பதவியில் இருந்து உங்களை தகுதி நீக்கம் செய்யக் கூடாது’ என விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பவுள்ளது. தினகரன் மீதான குற்றச் சாட்டு நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும்.
மேலும் தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பணிகளுக்காக இதுவரை ரூ.1 கோடியே 10 லட்சத்தை செலவழித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
0 comments:
Post a Comment