அரசியல்

விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்கள் திடீர் போராட்டம்



டெல்லியில் 31வது நாளாக போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று (13.04.2017) சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இளைஞர்கள் மாணவர்கள் வீதி மறியல் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

விவசாயிகளுக்கு ஆதரவாக கிண்டி மேம்பாலத்தில் இரும்பு சங்கிலியைப் பிணைத்து பூட்டுப் போட்டு போராட்டம் நடத்தியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இளைஞர்கள் மாணவர்களுடன் இயக்குநர் வ.கவுதமனும் இணைந்து போராடியுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து இழுத்துச் சென்றனர்.

டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் ஹைட்ரோ கார்பன் திட்டம், நியுட்ரினோ திட்டம் ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்த போராட்டத்தை இளைஞர்கள் நடத்தினர். இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தாமல் இருக்க தமிழக உளவுத்துறை மிக கவனமாக கண்காணித்து வரும் சூழலில் இந்த திடீர்ப்போராட்டத்தை இளைஞர்கள் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். எப்படி இளைஞர்கள் திடீர் என எமக்கு தெரியாமல் ஒன்று கூடினார்கள் என்று உளவுத்துறை குழம்பியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

''விவசாயிகளின் போராட்டத்தை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் மாணவர்கள், இளைஞர்கள் இப்படித்தான் தன்னெழுச்சியாக போராடுவார்கள். எனவே, விவசாயிகள் பிரச்சனை உடனடியாக முடிவிற்கு கொண்டு வர வேண்டும்'' என்று சிபிஎம் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.

தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு அரை நிர்வாணப் போராட்டத்தை நடத்தியுள்ளனர். போராடிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தை தொண்டர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தையும் இளைஞர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். தன்னெழுச்சியாக ஒன்றிணைந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் எழும்பூர் ரயில் நிலையம் அருகில் ஒன்று கூடி திடீரென ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக முழுக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தியுள்ளனர்.

விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்க முன்வராத தமிழக அரசாங்கம் விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டங்களை மட்டும் கடுமையாக அடக்கி வருகிறது. மெரினாவில் போராட முற்பட்ட இளைஞர்களை போலீசார் தாக்கி கைது செய்தனர். இளைஞர்கள் ஒன்றுகூடாமல் காவல்துறை கண்காணித்து வருகிறது.

திருச்சி, மதுரை, கோவை போன்ற இடங்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான இளைஞர் போராட்டங்கள் காவல்துறையால் அடக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழக அரசின் அடக்குமுறையையும் மீறி இன்று மாணவர்கள் வெற்றிகரமாக போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

இதேவேளை போராடிய எல்லா இடங்களிலும் இளைஞர்கள் மோடிக்கு எதிராக கோஷமிட்டுள்ளனர். நடிகைகள் கௌதமி, காஜோல் போன்ற திரைத்துறை பிரபலங்களை சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி நேரம் ஒதுக்குகிறார். பாகுபலி படம் தொடர்பான நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். சிவராத்திரியை முன்னிட்டு கோவையில் ஈஷா யோகா மையம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிவன் சிலையை திறந்து வைத்தார்.ஆனால் டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்க மட்டும் அவருக்கு நேரம் இல்லை. நாட்டின் பிரதமராக இருக்க மோடிக்கு தகுதி இல்லை என்று மாணவர்கள் கண்டித்துள்ளனர்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.