அரசியல்

தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்



விவசாயிகள் பிரச்சனையில் தமிழக அரசு அக்கறை காட்டவில்லை, தமிழக விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதை தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததுள்ளது.

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனக் கோரி தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஷ்ரா அமர்வு முன்பு இன்று (13.04.2017) இந்த வழக்கின் மீதான விசாரணை வந்தபோதே தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

''விவசாயிகள் தற்கொலை செய்வது வேதனை அளிக்கிறது. விவசாயிகள் பிரச்னையில் தமிழக அரசு மெத்தன போக்கை கடைபிடிக்கிறது. மாநில அரசு அமைதி காப்பது சரியான அணுகுமுறை அல்ல. விவசாயிகளின் பிரச்னையை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும். ஆனால், தமிழக அரசு இதில் அக்கறை காட்டவில்லை. விவசாயிகளுக்கான திட்டங்கள், சலுகைகள் குறித்தும், அவர்களின் நலனுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும்'' என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக அரசியல் கட்சிகள் அமைப்புகள் என பலரும் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆனால் விவசாயிகளை சந்திக்கும் பொன்.ராதாகிருஷ்னன் போன்ற மத்திய அமைச்சர்கள் விவசாயிகளின் போராட்டத்தை எப்படியாவது வாபஸ் பெற செய்ய வேண்டும் என்பதில் தான் குறியாக உள்ளனர். பிரதமர் மோடி விவசாயிகளை இதுவரை சந்திக்கவில்லை. அவர்களின் பிரச்சனைகளை கேட்கக்கூட விரும்பவில்லை. நடிகைகளை சந்திக்கவும், திரைப்பட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும், கார்ப்பரேட் சாமியார்களின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவும், பிரபலங்களுடன் செல்பி எடுக்கவும் பிரதமருக்கு நேரம் இருக்கிறது. விவசாயிகளை சந்திக்க அவருக்கு கடும் நேர பற்றாக்குறை உள்ளது.

மத்திய அரசு ஒருபுறமிருக்க தமிழக அரசுக்கு அதைவிட பிரச்சனை தமிழக அரசுக்கு உள்ளது. ஊழல் செய்து கர்நாடக சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க செல்லவேண்டும். அவரது கட்டளைகளை சரியாக நிறைவேற்ற வேண்டும். எம்.எல்.ஏ.கள் பன்னீர்செல்வத்தின் பக்கம் பாய்ந்துவிடாமல் பாதுகாக்க வேண்டும், தினகரன் திவாகரன் கோஷ்டி சண்டைகளை பார்க்கவேண்டும், தினகரனை முதல்வராக்க வேண்டும், எடப்பாடி முதல்வராக தொடர்வதை உறுதிசெய்யவேண்டும், வருமானவரி சோதனைகளில் இருந்து தப்பி சொத்துக்களை பாதுகாக்கவேண்டும், பினாமிகளை கண்காணிக்க வேண்டும், மாணவர்கள் போராடிவிடாமல் கண்காணிக்க வேண்டும், சாராய கடைகளுக்கு எதிராக போராடும் மக்களை அடக்கவேண்டும் என ஏராளமான வேலைகள் தமிழக அரசுக்கு உண்டு.

தமிழக முதல்வர் இதுவரை டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்கவில்லை. அவர்களின் பிரச்னைக்கு தீர்வு தரும் முயற்சிகளை எடுக்கவில்லை.

தமிழக அரசு உட்கட்சி பிரச்சனைகளால் பலவீனப்பட்டு முடங்கிப்போயுள்ளது. உட்கட்சி பிரச்சனைகளை புறம் ஒதுக்கிவிட்டு உடனடியாக விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு தர பாடுபடவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பலவும் வேண்டுகோள் விடுத்துள்ளன.

விவசாயிகளின் பிரச்சினையை தீர்க்க பிரதமர் மோடியோ, முதல்வர் பழனிச்சாமியோ தயாராக இல்லை என்பதால் எதிர்கட்சியான திமுக சார்பில் வரும் ஞாயிறன்று (16.04.2017) அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக திமுக செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் இந்த அலட்சியம் பற்றி விவசாயிகள் பிரச்சனையில் நேரடியாக தமிழக முதல்வர் தலையிட வேண்டும். ஓராண்டு விவசாயம் பாதித்தால் 2 ஆண்டுகள் வரை மற்ற தொழில்களும் பாதிக்கப்படும் என்பதை உணர வேண்டும். ஆளும் கட்சி இந்தப் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளாமல் நடனம் ஆடிக் கொண்டிருக்கிறது என்று சிபிஎம் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் கண்டித்துள்ளார்.

தமிழக மத்திய அரசுகளின் இந்த பாராமுகத்தை கண்டித்து இன்று இளைஞர்கள் மாணவர்கள் வீதியில் இறங்கி போராடியுள்ளனர். கத்திப்பாரா மேம்பாலத்தில் இளைஞர்கள் மாணவர்கள் வீதி மறியல் போராட்டத்தை நடத்தினர்.
விவசாயிகளுக்கு ஆதரவாக இளைஞர்கள் கிண்டி மேம்பாலத்தில் இரும்பு சங்கிலியைப் பிணைத்து பூட்டுப் போட்டு போராட்டம் நடத்தினர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தையும் இளைஞர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். தன்னெழுச்சியாக ஒன்றிணைந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் எழும்பூர் ரயில் நிலையம் அருகில் ஒன்று கூடி திடீரென ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக முழுக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தியுள்ளனர்.

இதேவேளை இளைஞர்களின் போராட்டத்திற்கு டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

''விவசாயிகள் அனாதைகள், இரண்டாம் தர குடிமக்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த மோடி அரசுக்கு இளைஞர்கள் நடத்திய போராட்டத்தின் மூலம் நாங்கள் அனாதைகள் அல்ல என்று நிரூபித்து விட்டனர். எங்களுக்கு மாணவர்கள், இளைஞர்கள் உரிமைக் குரல், போர் குரல் கொடுத்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. இன்னும் தீவிரமாக போராட வேண்டும் என்ற உத்வேகத்தை அளித்துள்ளது. அவர்களின் போராட்டம் ஆறுதலை தருகிறது. எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை விவசாயிகள் போராட்டம் தொடரும். நாங்கள் அடிமைகள் அல்ல, நாங்களும் இந்நாட்டு மன்னர்கள்தான் என்பதை நிரூபிப்போம்'' என்று டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு தலைமை தாங்கும் அய்யாக்கண்ணு கூறியுள்ளார். 

0 comments:

Post a Comment

Powered by Blogger.