'நகைக்கடன் பெற்று நீண்ட நாட்களாகியும், தவணை தவறியும், பலமுறை நோட்டீசு அனுப்பியும், தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தும், நேரில் தெரிவித்தும் கடன் தொகையை முழுவதும் திருப்பி செலுத்தாததால் கீழ்க்கண்ட கணக்கில் உள்ள தங்க நகைகள் வரும் புதன்கிழமை பகல் 10 மணி அளவில் எங்களது வங்கிக் கிளையில் வைத்து கிளை மேலாளர் முன்னிலையில் பகிரங்கமாக ஏலம் விடப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்”
பத்திரிகைகளில் இப்படி அடிக்கடி வெளிவரும் விளம்பரங்களை பார்த்திருப்பீர்கள்.
'வாங்கிய கடனுக்கான தவணையைச் செலுத்தாத குற்றத்துக்காக வங்கியின் அடியாட்களாலும் போலீசாராலும் தாக்கப்பட்ட விவசாயி அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்' என்று நாளிதழ்களில் செய்தியும் படித்திருப்பீர்கள்.
வழமைபோல இப்படியான ஒரு நாளில்தான் விஜய் மல்லையா 9000 கோடி வங்கிக் கடனை கட்டாமல் நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டார் என்று செய்தியும் இந்திய நாளிதழ்களில் வந்திருந்தன.
விஜய் மல்லையாவின் கிங்பிஷர் விமான சேவை நிறுவன நிதிநிலை அறிக்கையின்படி 2005ம் ஆண்டு முதல் அது சரிவைத்தான் சந்தித்து வந்துள்ளது.
2005 முதல் 2011 வரையிலான காலத்தில் மொத்தம் ரூ 5,960 கோடி நட்டமடைந்துள்ளது. 2012ம் ஆண்டு அக்டோபர் மாதம் அது தனது செயல்பாடுகளை முழுவதுமாக நிறுத்திக் கொண்டது.
அப்படி இருந்தும் அவருக்கு கடன் கொடுக்கப்பட்டுள்ளது. வங்கி மேலதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுத்தே இந்த கடன்களை மல்லையா பெற்றுள்ளார் என்று குற்றம் சாட்டப்படுகிறது.
2012ல் இருந்தே அவர் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாமல் இழுத்தடித்து வந்துள்ளார். வாங்கிய பெருந்தொகை கடனை கட்டவில்லை என்ற நிலையில் நாட்டை விட்டு மல்லையா வெளியேற தடை கேட்டு 17 பொதுத்துறை வங்கிகள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டன. ஆனால் கைதுக்கு முன்பே விஜய் மல்லையா நாட்டைவிட்டுத் தப்பியோடி இங்கிலாந்து சென்றுவிட்டார்.
இந்த நிலையில் இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று இங்கிலாந்தில் நேற்று (18.04.2017) விஜய் மல்லையாவை ஸ்கொட்லான்ட் யார்ட் போலீஸ் கைது செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.
ஆனால் கைது செய்யப்பட்ட சில நிமிடங்களிலேயே லண்டன் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தரப்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. கைது செய்யப்பட்ட மூன்றே மணி நேரத்தில் விஜய் மல்லையா ஜாமீன் பெற்றுவிட்டதால் அவரை இந்தியாவிற்கு அழைத்து வருவதில் மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.
அப்படியே விஜய் மல்லையா போன்ற கார்ப்பரேட் முதலாளிகள் நாடுகடத்தப்பட்டாலும் இந்தியாவின் 'முதலாளித்துவ - ஊழல் ஜனநாயகம்' அவர்களை கனிவாகவே நடத்தும்.
விவசாயிகளையும் கல்விக் கடன் பெற்ற மாணவர்களையும் அவமானப்படுத்தி, மிரட்டி வங்கிகள் கடன் வசூலிக்கின்றன.
ஒரு விவசாயி டிராக்டர் வாங்கும் கடனுக்கு வங்கிகள் 14% வட்டி வசூலிக்கின்றன. ஆனால் கடனை கட்டாமல் இருக்கும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 5% வட்டிக்குத் தாராளமாகக் கடன் கொடுக்கின்றன.
விஜய் மல்லையா ரூ. 9,000 கோடி கடனை கட்டாமல் ஏமாற்றியது போலவே மேலும் பல நூற்றுக்கணக்கான தரகு முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளிடம் பல்லாயிரம் கோடிகளைக் கடனாக வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தவில்லை. கடந்த வருட அறிவிப்பின்படி வராக்கடன்கள்
3 லட்சத்து 61 ஆயிரம் கோடியாக உள்ளது.
இந்த முதலாளிகள், மக்கள் சிறுக சிறுக வங்கிகளில் சேர்த்த பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். அது மட்டுமல்லாது இவர்களால் பொதுத்துறை வங்கிகள் வாராக்கடனால் திவாலாகும் நிலை தோன்றுகிறது. எனவே பொதுத்துறை வங்கிகளை தனியார்மயப்படுத்த வேண்டும் என்ற கோஷம் எழும்பவும் வாய்ப்பும் கிடைக்கிறது.
கடனை கட்டாத கார்ப்பரேட் முதலாளிகளும் அவர்களுக்கு ஆதரவான எம்பிஏ படித்த எடுபிடிகளும் பொருளாதார நெருக்கடி, சந்தையில் மந்தம், தொழிலில் நட்டம் என்று பொருளாதார காரணம் கூறுவார்கள். ஆனால் அப்படி நட்டம் வந்ததாக கூறும் எந்த முதலாளியும் தற்கொலை செய்துகொண்டதில்லை, பிச்சை எடுத்ததில்லை. அந்த முதலாளிகள் மேலும் மேலும் உல்லாச வாழ்க்கையையே அனுபவிக்கிறார்கள்.
இந்த கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அரசு வங்கிகள் கோடிக்கணக்கில் கடனையும் கொடுத்து, சந்தை வசதியையும் ஏற்படுத்திக்கொடுத்து,
இலாபமீட்டும் உத்திரவாதத்தையும் செய்து கொடுக்கின்றன.
அரசாங்கமே எல்லாம் செய்து கொடுத்த பின்னனர் லாபம் வந்தால் அந்த நிறுவனம் சாதனை படைத்ததாக பத்திரிகைகளில் செய்தி வெளியிடுவார்கள். மணிரத்தினம் போன்ற அரைவேக்காடுகள் சினிமாவும் எடுப்பார்கள். ஆனால் நட்டம் வந்தால் அதை அரசாங்கம்தான் ஏற்க வேண்டுமென்று முதலாளிகள் நழுவி விடுவார்கள்.
அரசாங்க துணையுடன் பல வழிகளில் கார்ப்பரேட் முதலாளிகள் மக்களையும் வங்கிகளையும் ஏமாற்றி வருகிறார்கள். அதற்கு ஊழல் கறை படிந்த மீடியாக்கள் துணை நிற்கின்றன. கார்ப்பரேட் முதலாளிகளிடம் பணத்தை வாங்கிக்கொண்டு இந்த கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டை முன்னேற்றுவதாக எழுதுகின்றன.
விஜய் மல்லையா தொண்ணூறுகளின் இறுதியில் மெக்டவல் க்ரெஸ்ட் பைனான்ஸ் எனும் கம்பெனியைத் துவங்கினார். நிரந்தர வைப்பு நிதிகளுக்கு பொதுத்துறை வங்கிகளை விட அதிக வட்டியைத் தருவதாக வாக்களித்தார். இதை நம்பி இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள் இந்நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.
பின்னர் விஜய் மல்லையா மக்களின் பணத்தை தனது தாய் நிறுவனமான யுனைட்டெட் ப்ரூவரீஸுக்கு மாற்றிக் கொண்டு, மெக்டவல் க்ரெஸ்ட் நிறுவனத்தின் பெயரை மெக்டவல் ஃபின்லீஸ் என்று மாற்றி விட்டு மஞ்சக் கடுதாசி கொடுத்துவிட்டு போய்விட்டார். சிறுக சிறுக கஷ்டப்பட்டு சேர்த்து பணம் போட்ட மக்கள் எதுவுமே இல்லாமல் வீதியில் விடப்பட்டார்கள்.
இந்த அநியாயத்திற்கு அதிகாரவர்க்கம் உடந்தையாக இருந்தது. விதிகளையும் சட்டங்களையும் தளர்த்தி விஜய் மல்லையா மக்களை ஏமாற்ற ஆதரவு கொடுத்தார்கள். இந்த அநியாயத்தை காங்கிரஸ் அரசாங்கம் என்றாலும் சரி பாஜக அரசாங்கம் என்றாலும் சரி கண்டுகொள்ளவே இல்லை. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மக்களுக்கு நீதியும் வழங்கப்படவில்லை.
மக்களை ஏமாற்றிய குற்றத்திற்கு சிறையில் அடைக்கவேண்டிய மல்லையாவை மாநிலங்கள் அவை உறுப்பினராக்கி அழகு பார்த்தது இந்திய அரசாங்கம்.
இப்படி மக்களை ஏமாற்றிய, அரசாங்கத்தை ஏமாற்றிய, வங்கிகளை ஏமாற்றிய, ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றிய விஜய் மல்லையா கர்நாடக மாநிலத்திலுள்ள சுப்ரமணியர் கோவிலுக்கு 80 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்க கதவுகளை நன்கொடையாக வழங்கியி ருந்தார். கடவுளும் நீதி நியாயம் பேசாமல் ஏற்றுக்கொண்டிருந்தார். இப்படி பல ஊழல் முதலாளிகள் மக்களை ஏமாற்றிய பணத்தின் சிறிதளவை திருப்பதி முதல் பல கோவில்களில் தங்கமும் வைரமுமாக உண்டியலில் கொட்டுகிறார்கள். கார்ப்பரேட் முதலாளிகளின் ஊழலில் கடவுளும் பங்காளராக சேர்ந்திருக்கிறார் பாவம்.
- என்.ஜீவேந்திரன்
//கார்ப்பரேட் முதலாளிகளின் ஊழலில் கடவுளும் பங்காளராக சேர்ந்திருக்கிறார் பாவம்.//
ReplyDeleteஇந்திய மக்கள் பாவம்.
கட்டுரையின் முடிவு கலக்கல்.