இந்தியா

விவசாயிகளின் டெல்லி போராட்டம் ஒத்திவைப்பு





தமிழக விவசாயிகள் சுமார் 35 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் நடத்திவந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நேற்று விவசாயிகளின் பிரதிநிதிகள் மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்துப் பேசினர். பொன்.ராதாகிருஷ்ணன் கொடுத்த உறுதிமொழி தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஏனைய விவசாயிகளுடனும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர். ஏப்ரல் 22ம் தேதிக்குள் மத்திய அமைச்சரிடம் இருந்து உறுதிமொழி கடிதம் கிடைத்தால் போராட்டம் முழுமையாக வாபஸ் பெறப்படும் என்றும் விவசாயிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகளுடனான பேச்சினையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணைஅமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ''போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை 6-வது முறையாக சந்திக்கிறேன். விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக அந்தந்த துறை அமைச்சர்களை சந்தித்து வலியுறுத்தி வருகிறேன். மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும். அதேபோல மாநில அரசும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் அய்யாக்கண்ணு, ''எங்களது கோரிக்கைகள் குறித்து மத்திய அமைச்சரிடம் தெளிவாக கூறியுள்ளோம். கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அவர் உறுதி அளித்தார். இதையடுத்து இரண்டு நாட்களுக்கு போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுகிறோம்'' என்று தெரிவித்துள்ளார். 

நெடுவாசல் போராட்டத்தில் பொய் வாக்குறுதியை கொடுத்து தமிழக மக்களை ஏமாற்றிய பாஜக. அமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் டெல்லியில் போராடும் விவசாயிகள் போராட்டத்தை கைவிடும்படி ட்விட்டரில் தொடர்ந்து எழுதி வந்திருந்தார். 

தமிழக விவசாயிகள் கடந்த மார்ச் 14ம் தேதி டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தை ஆரம்பித்தனர்.  

தேசிய நதிநீர் இணைப்பு சங்கத்தின் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்திற்கு அந்த சங்கத்தின் தமிழக தலைவர் அய்யாகண்ணு தலைமை வகிக்கிறார். இரண்டு வாரங்களாக தெருவில் சுமார் 100 விவசாயிகள் போராடி வருகிறார்கள்.

காவேரி மேலாண்மை அமைக்கவேண்டும், வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், பயிர்களுக்கான கடன் தள்ளுபடி செய்யவேண்டும், நதி நீர் இணைப்பு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.

அ.தி.மு.க.வின் ஏற்பாட்டில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லீ, மத்திய நீர் பாசன துறை அமைச்சர் உமா பாரதி ஆகியோரை விவசாயிகள் சந்த்தித்து பேசியுள்ளனர். ஆனால் எந்த பலனும் ஏற்படவில்லை. 

வங்கியில் கடன் வாங்கி விவசாயம் செய்கிறோம். பாசனத்திற்கு தண்ணீர் இல்லை. விவசாய பொருட்களின் விலை மிகவும் உயர்ந்து விட்டது. ஆனால் எமது உற்பத்தி பொருட்களுக்கு நியாயமான விலை கிடைப்பதில்லை.
நிலைமை இப்படி இருக்க வங்கிகளோ வட்டி மேல் வட்டிபோட்டு எமக்கு நோட்டீஸ் அனுப்புகிறார்கள். எம்மால் கடனை கட்டி முடிக்க இயலவில்லை. காலம் பூராகவும் கடனாளிகளாகவே இருக்கிறோம். அரசாங்கத்திடமிருந்து எமக்கு எந்த நிவாரணமும் இல்லை என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.

இந்த பிரச்சனைகளால் தமிழகத்தில் இதுவரை 400 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.

மத்திய அரசுக்கு விவசாயிகளின் இந்த கோரிக்கைகள் பெரும் சிக்கலானவை அல்ல. மத்திய அரசால் இலகுவாக தீர்க்கக்கூடிய விவசாயிகளின் இந்த கோரிக்கைகள் இரண்டு வாரங்கள் ஆகியும் கண்டு கொள்ளப்படாமல் இருக்கின்றன.

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் இளைஞர்கள், மாணவர்கள், பொது மக்கள் பல போராட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள். கடந்த 13.04.2017ல் சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தில் இளைஞர்கள் மாணவர்கள் வீதி மறியல் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

இளைஞர்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தாமல் இருக்க தமிழக உளவுத்துறை மிக கவனமாக கண்காணித்து வரும் சூழலில் அந்த  திடீர்ப்போராட்டத்தை இளைஞர்கள் வெற்றிகரமாக நடத்தியிருந்தனர். 

''விவசாயிகளின் போராட்டத்தை அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை என்றால் மாணவர்கள், இளைஞர்கள் இப்படித்தான் தன்னெழுச்சியாக போராடுவார்கள். எனவே, விவசாயிகள் பிரச்சனை உடனடியாக முடிவிற்கு கொண்டு வர வேண்டும்'' என்று சிபிஎம் மூத்த தலைவர் டி.கே. ரங்கராஜன் தெரிவித்திருந்தார்.

விவசாயிகளுக்கு ஆதரவாக தந்தைப் பெரியார் திராவிடர் கழகம் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட்டு அரை நிர்வாணப் போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தையும் இளைஞர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர். தன்னெழுச்சியாக ஒன்றிணைந்த 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் எழும்பூர் ரயில் நிலையம் அருகில் ஒன்று கூடி திடீரென ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக முழுக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்தியிருந்தனர். 

போராடிய எல்லா இடங்களிலும் இளைஞர்கள் மோடிக்கு எதிராக கோஷமிட்டுள்ளனர். நடிகைகள் கௌதமி, காஜோல் போன்ற திரைத்துறை பிரபலங்களை சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி நேரம் ஒதுக்குகிறார். பாகுபலி படம் தொடர்பான நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார். சிவராத்திரியை முன்னிட்டு கோவையில் ஈஷா யோகா மையம் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிவன் சிலையை திறந்து வைத்தார்.ஆனால் டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்திக்க மட்டும் அவருக்கு நேரம் இல்லை. நாட்டின் பிரதமராக இருக்க மோடிக்கு தகுதி இல்லை என்று மாணவர்கள் கண்டித்திருந்தனர்.

0 comments:

Post a Comment

Powered by Blogger.