எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், “ஜனாதிபதி கூறினால் நாங்கள் காணிகளை விடுவிக்க தயாராக இருக்கின்றோம். அரசாங்கத்தை மீறி எங்களால் செயற்பட முடியாது” என்று இராணுவத்தளபதி கூறியதாக தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் சம்பந்தன் இவ்வாறு கூறியுள்ளார்.
“மக்களின் காணிகள் உரியவர்களிடம் கொடுக்கப்படவேண்டும் என்பதை இன்றைய சந்திப்பின் போது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடமும், இராணுவ தளபதியிடமும் வலியுறுத்தியிருந்தோம். இதற்கு பதிலளித்து பேசிய இராணுவத்தளபதி, படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காணிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என்றனர்.
அத்துடன், பலாத்காரமாக தாங்கள் எந்தக் காணிகளையும் வைத்திருக்கவில்லை என்றும், இது குறித்து முடிவெடுக்க வேண்டியது சிவில் அதிகாரமே என்றும் இராணுவ தளபதி கூறினார்” என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ''இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் படையினருடன் தமிழ் தேசியகூட்டமைப்பு நடத்திய பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய வடகிழக்கு மாகாணங்களில் மக்களின் காணிகளில் அமைந்துள்ள படை முகாம்களுக்கு காணி உரிமையாளர்களுடன் சென்று பேச்சுவார்த்தை நடத்தி ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்'' என நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேயின் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போதே சுமந்திரன் இவ்வாறு கூறியுள்ளார்.
''நாளை முல்லைத்தீவு கேப்பாபிலவு படைமுகாமிற்கு மக்களுடன் செல்லவுள்ளோம். 20ம் திகதி கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள படை முகாம்களுக்கு செல்லவுள்ளோம். காணி விடுவிப்பு மற்றும் அதற்காக நடக்கும் போராட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேச்சு நடத்தியுள்ளோம். அதன் தொடர்ச்சியாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பாதுகாப்பு படைகளின் கட்டளை தளபதிகளை சந்தித்து கலந்துரையாடியிருந்தோம்.
இதனடிப்படையில் படையினர் வசம் உள்ள மக்களுடைய காணிகள் தொடர்பாக அந்தந்த படை முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு சென்று மக்களுடனும் படை அதிகாரிகளுடனும் பேசி ஜனாதிபதிக்கு அறிக்கை சமர்ப்பிப்பதென தீர்மானிக்கப்பட்டது.
முதலில் முல்லைத்தீவு கேப்பாபிலவு படைமுகாம் அமைந்துள்ள பகுதிக்கு சென்று பேசவுள்ளோம்.
தொடர்ச்சியாக நாளை யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களிலும் சந்திப்புக்களை நடத்தி அடுத்த கட்டமாக கிழக்கு மாகாணத்திற்கும் செல்லவுள்ளோம். இறுதியாக எந்தெந்த காணிகள் என்னென்ன அடிப்படையில் எப்போது விடுவிக்கப்படலாம்? என்பது தொடர்பான அறிக்கையினை ஜனாதிபதிக்கு சமர்பிக்க உள்ளோம்'' என்று சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முல்லைத்தீவில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது வாழிடங்களை கேட்டு கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 50வது நாளாக இடம்பெற்று வருகின்றது.
138 குடும்பங்களுக்கு சொந்தமான 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மக்களின் வாழிடங்களை இராணுவத்திடமிருந்து மீட்டு வழங்குவதில் சட்ட சிக்கல் இருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது.
கிளிநொச்சி பன்னங்கண்டி சரஸ்வதிகுடியிருப்பு மக்கள் நிரந்தர காணி அனுமதிப் பத்திரத்தைப் பெற்றுத் தருமாறு கோரி, கடந்த 22.03.2017 முதல் தொடர்ச்சியான கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். ஒரு சில அரசியல்வாதிகள் தங்களை வந்து பார்த்த போதிலும் இதுவரை எந்தவிதமான உதவிகளும் செய்யவில்லை என்று மக்கள் கூறுகின்றனர்.
அடிப்படை வசதிகளின்றி வாழ்ந்து வரும் தமக்கு, காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். தமது காணிகளுக்கான நியாய விலையை காணி உரிமையாளரிடமிருந்து பெற்றுத்தர அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
யுத்தத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீள்குடியேறியுள்ள இந்த மக்களுக்கு சொந்தமாக நிரந்தர வாழிடம் இல்லை. இதனால் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள எந்தவித வீட்டுத் திட்டங்களுக்கும் உதவிகளும் இந்த மக்களுக்கு கிடைக்கவில்லை. எனவே தமக்கு காணி உறுதிப்பத்திரங்களை தருமாறு இந்த பன்னங்கண்டி சரஸ்வதிகுடியிருப்பு மக்கள் கோருகின்றனர்.
இப்படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களில் பலர் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமது பிரச்சனை குறித்து அதிக கரிசனை கொள்ளவேண்டும் என்று கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment