தற்போதைய தமிழக அரசாங்கம் குறித்து இளைஞர்கள் பெரும் கோபத்துடன் உள்ளனர்.
தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தரில் கடந்த மாதம் 14ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதி ரூ.40,000 கோடி வழங்க வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டுமெனபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 90 விவசாயிகள் டெல்லி ஜந்தர்மந்தரில் இன்று இருபதாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக இளைஞர்கள் இருக்கிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவாக பல இடங்களில் இளைஞர்களால் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டாலும் அவை தமிழக காவல் துறையால் கடுமையாக அடக்கப்பட்டு வருகிறது.
அதேபோல நெடுவாசல் போன்ற தமிழகத்தின் விவசாய நிலங்களில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் மத்திய அரசின் திட்டத்தை எதிர்த்தும் இளைஞர்கள் ஆங்காங்கே போராட்ட முயற்சிகளை மேற்கொண்டார்கள். அவற்றையும் தமிழக காவல் துறை கடுமையாக அடக்கி வருகிறது.
மெரினாவில் கூடிய இளைஞர்கள் மீதும் போலீசார் கடுமையாக நடந்து கொண்டனர்.
இவ்வாறு விவசாயிகளுக்கு ஆதரவாக போராடும் இளையவர்களை தமிழக காவல் துறை அடக்குவது கடும் எதிர்ப்பை தோற்றுவித்துள்ளது.
விவசாயிகள் போராட்டம் முதல் ஹைட்ரோ கார்பன் வரை ஏராளமான பிரச்சனைகளால் தமிழகம் தத்தளித்து கொண்டிருக்கிறது. ஆனால் சசிகலா அரசாங்கம் இதுபற்றியெல்லாம் கண்டுகொள்ளாது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரனின் வெற்றிக்காக முழு பலத்தையும்ப யன்படுத்திக்கொண்டிருக்கிறது.
உண்மையில் தமிழக விவசாயிகளின் நலனுக்காக பாடுபடவேண்டியது தமிழக அரசாங்கமே. ஆனால் தமிழக அரசாங்கம் செயலிழந்துள்ளது. அதிகார போட்டிகளும், உள்ளடிவேலைகளும், தேர்தல் போட்டிகளும், கோஷ்டி மோதல்களும், கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆட்டையை போடுவது, ஊழலும் என்று தமிழக அரசாங்கத்தின் கவனம் சிதறியுள்ளது.
இப்படியான சூழலில் விவசாயிகளை காப்பதற்கு போராடும் இளையவர்களை காவல்துறை தடுப்பது கண்டிக்கப்பட வேண்டியது என்று பலரும் கூறுகின்றன.
அனுமதி பெற்று அமைதியாக போராட கூட தமிழக காவல்துறை இடமளிக்காமல் அதிகாரத்தை காட்டுகிறது.
சென்னை துணை ஆணையர் பாலகிருஷ்ணன் “மெரினாவில் இளைஞர்கள் கூடப் போவதாக சமூக வலை தளங்கள் மூலம் வதந்தி பரப்புபவர்கள் கைது செய்யப்படுவார்கள்'' என்று மிரட்டியுள்ளார்.
இந்த நிலையில் தமிழக பொலிஸாரின் இந்த ஜனநாயக விரோத செயல்பாட்டை முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ கண்டித்துள்ளார்.
இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கட்ஜூ பதிவிட்டுள்ளார். ''இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, எந்த ஆயுதமும் இல்லாமல், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் ஒய்.எம்.சி,ஏ மைதானத்தில், நிர்வாகத்தின் அனுமதியுடன் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு இக்கூட்டம் நடைபெற இருந்தது. விவசாயிகளுக்காக இளைஞர்கள் தமிழகம் முழுவதிலிருந்தும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பங்கு பெற இருந்த நிலையில், ஒய்.எம்.சி.ஏ நிர்வாகத்திடம் அனுமதியை ரத்து செய்ய காவல்துறை கட்டாயப்படுத்தியுள்ளது. அதைத் தொடர்ந்து ஒய்.எம்.சி.ஏ நிர்வாகம் ஏற்கனவே இளைஞர்களுக்கு வழங்கியிருந்த அனுமதியை ரத்து செய்துள்ளனர். வேறு இடம் கிடைக்காத நிலையில் இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்கள்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் விதி 19(1)(b)ன் படி அனைத்து இந்தியக் குடிமக்களுக்கும் அமைதியாக கூட்டம் கூடுவதற்கு உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. விதி 19(3)ன் படி பொது மக்களின் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்களுக்கு தடைவிதிக்க வழி இருக்கிறது. ஆனாலும் விவசாயிகளுக்காக கோரிக்கை வைக்கும் இளைஞர்கள், பொது மக்களின் அமைதிக்கு எந்த விதத்திலும் பங்கம் விளைவிக்கவில்லை.
அவர்களிடம் ஆயுதம் இல்லை, சாலை மறியல் செய்ய வில்லை, எந்த அசம்பாவிதத்திற்கும் இடமளிக்கவில்லை. அமைதி வழியில் அனுமதிக்கப்பட்ட இடத்தில் விவசாயிகளுக்காக இளைஞர்கள் கூட்டம் நடத்துவதை, தடுத்து நிறுத்திய காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது'' என்று மார்க்கண்டேய கட்ஜு குறிப்பிட்டுள்ளார்.
''இளைஞர்களுக்கு அரசியலமைப்புச் சட்டம் விதி 19(1)(b)ன் படி இளைஞர்களுக்கு உள்ள உரிமைகளை தமிழக காவல்துறை எப்படி தடுத்து நிறுத்தலாம் என்று எனக்கு புரியவில்லை. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. சர்வாதிகார நாடு அல்ல. குடிமக்களின் அடிப்படை உரிமைகள், அரசியலமைப்புச் சட்டம் பகுதி 3 ல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்திய குடிமக்களாகிய இந்த இளைஞர்களின் அடிப்படை உரிமைகளை தமிழக காவல்துறை பறித்துள்ளதாக அறிகிறேன். இது சட்டத்திற்கு புறம்பானது, தமிழக இளஞர்களின் உரிமைகளை பறிக்கும் இத்தகைய நடவடிக்கைகளை தமிழகக் காவல் துறை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கிறேன். மீறினால் சட்டபூர்வமான நடவடிக்கைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று அவர் மேலும் அந்த பதிவில் கூறியுள்ளார்.
இந்த நிலையில் பொது பிரச்சனைக்காக அதுவும் சோறு போடும் விவசாயிகளுக்காக போராடும் மாணவர்களை அடக்கி போலீசார் அடாவடித்தனம் செய்வது மோசமான விளைவுகளையே ஏற்படுத்தும் என்று சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.
0 comments:
Post a Comment