இந்தியா

சாமியார் ரவிசங்கரை வறுத்தெடுத்த நீதிமன்றம்



“உங்களுக்கு பொறுப்பு என்பதே இல்லை. நீங்கள் விரும்பியதையெல்லாம் பேசுவதற்கு யார் உங்களுக்கு சுதந்திரம் அளித்தது, உங்கள் கருத்து அதிர்ச்சியளிக்கிறது” என்று சாமியார் ரவிசங்கரை கடுமையான வார்த்தைகளால் இன்று கண்டித்துள்ளது தேசியப் பசுமைத் தீர்ப்பாய நீதிமன்றம்.

சாமியார் ரவிசங்கர் யமுனை நதிப்படுகையில் மூன்று நாள் உலகக் கலாச்சார விழாவை நடத்தியிருந்தார். வாழும் கலை அறக்கட்டளைக்காக கடந்த வருடம் நடத்திய இந்த விழா காரணமாக யமுனை நதிப்படுகை முற்றிலும் சேதமடைந்துள்ளது. பாதிக்கப்பட்ட  யமுனை நதிப்படுகையை பழைய நிலைக்கு மீட்டெடுக்க குறைந்தது 10 ஆண்டுகளாகும். அதனைச் சீர் செய்ய கோடிக்கணக்கில் செலவழிக்கவேண்டிவரும் என்று விசாரணைக் குழு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் அறிக்கை சமர்ப்பித்திருந்தது.

ஆனால் ரவிசங்கர் ''அப்படி பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதற்கு பொறுப்பு நான் அல்ல. விழா நடத்த அனுமதி வழங்கிய மத்திய மாநில அரசுகளும் பசுமை தீர்ப்பாயமுமே இதற்கு பொறுப்பு. நன்றாக இருக்கும் யமுனை நதி பாதிப்படையக் கூடாது என்று நினைத்திருந்தால், விழாவை நிறுத்தி இருக்கலாமே'' என்று கூறியிருந்தார்.

இந்த கருத்தால் கோபமான தேசியப் பசுமைத் தீர்ப்பாய அமர்வின் தலைவர் நீதிபதி ஸ்வதந்தர் குமார்  “உங்களுக்கு பொறுப்பு என்பதே இல்லை. நீங்கள் விரும்பியதையெல்லாம் பேசுவதற்கு யார் உங்களுக்கு சுதந்திரம் அளித்தது, உங்கள் கருத்து அதிர்ச்சியளிக்கிறது” என்று ரவிசங்கரை கடுமையாக கண்டித்துள்ளார்.

மத்திய மாநில அரசுகளையும், தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தையும் ரவிசங்கர் குற்றம் சாட்டியிருந்ததை வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் நீதிபதிகளிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.

தேசிய பசுமைத் தீர்ப்பாயம் யமுனை நதிக்கரையில் ரவிசங்கர் விழா நடத்த எதிர்ப்பு தெரிவித்திருந்தது. ஆனால் மோடி அரசின் செல்வாக்கை வைத்து ரவிசங்கர் விழாவை நடத்தியதுடன் யமுனை நதிக்கரையில் பெரும் சீரழிவை ஏற்படுத்தியிருந்தார்.

மேலும் இந்த அழிவுகளை ஆதாரத்துடன் தெரிவித்த நிபுணர்கள் குழு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த ரவிசங்கர் தரப்பு அந்த அறிக்கையை  தள்ளுபடி செய்ய வேண்டும் என்று ரவிசங்கர் கோரியுள்ளனர்.

இதன்போது நீதிபதிகள் நிபுணர்கள் குழு அறிக்கைக்கு எதிரான ஆட்சேபணைகளை 2 வாரங்களில் சமர்ப்பிக்க உத்தரவிட்டு எதிர்வரும் மே 9ம் தேதிக்கு வழக்கை இன்று ஒத்தி வைத்தனர்.

ரவிசங்கரால் சீரழிக்கப்பட்ட யமுனைநதிப்படுகையைச் மீட்டு எடுக்க இரண்டு விதமான வழிகள் உள்ளன. அவற்றிற்கு முறையே ரூ.28.71 கோடியும் ரூ.13.29 கோடியும் செலவாகும் என்று நிபுணர்கள் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Powered by Blogger.