அரசியல்

ஆர்கே நகர் இடைத்தேர்தல் ரத்து - தேர்தல் ஆணையம்



ஆர்கே நகர் இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் புதன்கிழமை (12.04.2017) நடைபெற இருந்த இந்த தேர்தல் வாக்காளர்களுக்கு பணம் வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

'ஆர்.கே.நகரில் நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் தற்போது இல்லை. தொகுதியில் அதிகமான பணப்பட்டுவாடா நடந்தது வருமான வரித்துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. முறைகேடுகளை தடுக்க மேற்கொண்ட முயற்சிகளை தடுத்து நூதன முறையில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் அடிப்படையில் பார்க்கும்போது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 21ல் தேர்தலை ரத்து செய்ய அதிகாரம் உள்ளது. எனவே, அரசியல் சட்டம் 324வது பிரிவின் கீழ் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது' என்று தேர்தல் ஆணையம் விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

'தமிழகத்தில் இதற்குமுன் அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளில் இதே நிலை ஏற்பட்டிருந்தது. தேர்தல் நடத்த உகந்த சூழல் உருவாகும் போது தேர்தல் நடத்தப்படும். இந்த பணப்பட்டுவாடாவில், அமைச்சர் விஜய பாஸ்கருக்கு பெரும் பங்கு உள்ளது தெரியவந்துள்ளது. விஜயபாஸ்கர் வீட்டில் ரூ.89 கோடிக்கு ஆவணங்கள் சிக்கின. விஜயபாஸ்கரின் நெருக்கமானவர்களின் வீடுகளில் ரூ.5 கோடி ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எம்.எல்.ஏ. விடுதியில் வார்டு வாரியாக பணம் விநியோகிக்கப்பட்ட பட்டியல் பறிமுதல் செய்யப்பட்டது. யார் யாருக்கெல்லாம் எவ்வளவு பணம் வழங்க வேண்டும் என்ற பட்டியலும் பறிமுதல் செய்யப்பட்டது. தொகுதியில், கடந்த 7 ம் தேதி வரை 18 லட்சத்து 80 ஆயிரத்து 700 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு வினியோகிக்க வைத்திருந்த மொபைல், டிசர்ட், வெள்ளி தட்டு, புடவைகள் பறிமுதல் செய்யப்பட்டன' என்று மேலும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.



வருமான வரித்துறையினர் அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு உட்பட 50க்கும் மேற்பட்ட  இடங்களில் கடந்த வெள்ளியன்று (07.04.2017)  சோதனை நடத்தினர். இதில் 89 கோடி ரூபாய் வரை ஆர்கே நகர் வாக்காளர்களுக்கு லஞ்சம் வழங்கியதற்கான ஆவணம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சோதனை அறிக்கையை வருமான வரித்துறை ஞாயிற்றுக்கிழமை சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ராவிடம் வழங்கியது. இதையடுத்து அறிக்கையுடன் டெல்லி சென்ற விக்ரம் பத்ரா அதனை தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை (09.04.2017) இரவு தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மீண்டும் தேர்தல் நடைபெறும் தினம் பற்றி தேர்தல் ஆணையம் எதுவும் குறிப்பிடவில்லை.

தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு ஜனநாயக படுகொலை என்று தினகரன் கண்டனம் வெளியிட்டுள்ளார். ''ஏப்ரல் 12 அன்று நடைபெற இருந்த ஆர் கே நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது மாபெரும் தவறு. இது ஒரு ஜனநாயக படுகொலை'' என்று தினகரன் டிவிட்டரில் தெரிவித்துள்ளார்.




ஆனால் ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றுள்ளார். பணத்துக்கு வாக்கு எனும் பார்முலாவுக்கு ஆர்கே நகரில் முடிவு கட்டப்பட்டுள்ளது எனவும் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். 

0 comments:

Post a Comment

Powered by Blogger.