அரசியல்

பேச்சு நடத்தியிருந்தால் பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார் - ஆனந்த சங்கரி



பேச்சு நடத்தியிருந்தால் பிரபாகரன் உயிரோடு இருந்திருப்பார் - ஆனந்த சங்கரி

''தம்பி சாபத்துக்கு ஆளாக போகிறாய் உடனடியாக பேச்சுவாரத்தையை நடாத்துங்கள் என தெரிவித்தேன். அன்று நான் கூறியதை கேட்டிருந்தால் பிரபாகரன் இன்று உயிருடன் இருந்திருப்பார். பிரபாகரனுக்கு நான் எதிரி இல்லை, நான் சகல விடயங்களையும் ஆழ்ந்து அறிந்தவன் என்ற ரீதியில் சில நடவடிக்கையில் இருந்து பிரபாகரனை திருந்தி செயற்படச் சொன்னேன்'' என்று தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலை கூட்டணி தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து பேசும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

''அன்றைய ஜனாதிபதிக்கு யுத்தத்தை நிறுத்துமாறு கோரி கடிதம் அனுப்பினேன். ஆனால் நிறுத்தவில்லை. இப்பகுதியில் ஒருவர் கூட யுத்தத்தை நிறுத்துவதற்கு நினைத்திருந்தால் இன்று இந்த நிலை எமக்கு வந்திருக்காது.
எனது அறிவுரையை கேட்டிருந்தால் விடுதலைப் புலிகளின் தலைமை இன்றும் செயற்பாட்டில் இருந்திருக்கும்.

பல தலைவர்கள், பல நாடுகள் யுத்தத்தை நிறுத்துமாறு கேட்டார்கள். கேட்கவில்லை இறுதியில் மக்கள் அழிக்கப்பட்டார்கள்.
தப்பி ஓடிவந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள், அங்கு நடந்த நடந்த பல செயல்கள் எமக்கு அவமானத்தை தந்தன.

யுத்தத்தை நிறுத்துமாறு எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் சொல்லவில்லை. மக்களை காப்பாற்ற வேண்டிய புனிதமான கடமையை யாரும் செய்யவில்லை. நடந்த அநீதிகளுக்கு தற்போது நீதி வேண்டி சர்வதேசத்திடம் போய் நிற்கிறோம்'' என்று ஆனந்த சங்கரி மேலும் தெரிவித்துள்ளார்.

''விடுதலைப்புலிகள் தான் தமிழ் மக்களை அதிகம் கொலை செய்தார்கள் என புதிதாக வந்துள்ள சுமந்திரன் எலிக்குட்டி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தெரிவித்து விட்டு அத்துடன் 2 வருடங்களில் நல்ல வெளிநாட்டு தலையீடு இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். எனவே இது நடக்கப்போகும் விடயம் இல்லை சர்வதேச விசாரணையும் நடக்கப்போவதில்லை.

சம்பந்தன் மாவைக்கு அரசியல் தெரியாது. சுமந்திரனுக்கு அறவே அரசியல் தெரியாது. இவர்கள் எல்லாரும் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். பொய்யர்களின் செயல்களை அம்பலப்படுத்த வேண்டும்'' என்று தனது உரையில் குறிப்பிட்ட தமிழர் விடுதலை கூட்டணி தலைவர் ஆனந்த சங்கரி ''முன்பு மக்களுக்கு சேவை செய்ய பாராளுமன்றத்தில் போதியளவு வசதிகள் காணப்பட்டது. சேவையை நோக்கமாக கொண்டு பாராளுமன்றக்கு வந்தனர். ஆனால் இன்று பாராளுமன்ற தொழில் ஒரு வியாபாரமாக போய்விட்டது. அதிலும் எமது மக்கள் பிரதிநிதிகளால் நாங்கள் அழிக்கப்படுகிறோம். பல கஸ்டங்களை எதிர்நோக்கியுள்ளோம்'' என்று கவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை ''இந்திய படை பிரபாகரனை முல்லைத்தீவு காட்டில் சுற்றி வளைத்திருந்த காலத்தில் அவரை பாதுகாத்தவன் நான். அதே போல பல முறை பிரபாகரனை பாதுகாத்திருக்கிறேன். ஆனால் நான் வெளியேறிய பின்னர் புலிகள் இயக்கம் ஆட்டம் காணத்தொடங்கியது.
நான் புலிகளோடு இருந்த காலத்தில் இலங்கை இராணுவத்தால் புலிகளை தோற்கடிக்கமுடியவில்லை'' என்று முன்னர் விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதி கருணா கூறியிருந்தார்.

அண்மையில் கருணா சிங்கள தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

''இப்போது யுத்த வெற்றிக்கு பலரும் உரிமை கோருகிறார்கள். முன்னாள் இலங்கை இராணுவ தளபதி சரத் பொன்சேக்கா புலிகளை தோற்கடித்ததாக கூறுகிறார். ஆனால் நான் புலிகளோடு இருந்த காலத்தில் அவரால் புலிகளை தோற்கடிக்க முடியவில்லை. புலிகளுக்கு எதிராக வெற்றிகரமான தாக்குதல்களை அவர் நடத்தவில்லை. ஆனால் புலிகள் நடத்தினார்கள்'' என்று மேலும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.





0 comments:

Post a Comment

Powered by Blogger.