இலங்கையின் இரண்டு பெரும் ஊடக நிறுவனங்களுக்கிடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
நீண்டகாலமாக இலங்கையின் அதிக மக்களால் பார்க்கப்படும் தொலைகாட்சியாக மகாராஜா நிறுவனத்திற்கு சொந்தமான சிரச சிங்கள தொலைக்காட்சி உள்ளது.
தற்போது தெரண சிங்கள தொலைக்காட்சியும் சிரசவுடன் முதல் இடத்திற்கு போட்டியயிடும் அளவுக்கு சிங்கள மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ஊடக போட்டி தொடர்ந்து வருகிறது.
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன 12.10.2016ல் இலங்கை மன்ற கல்லூரியில் கூறிய கருத்துக்களை திரிவுபடுத்தி வெளியிட்டதாக
தெரண தொலைக்காட்சி மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் நிமல் போபகே இந்த குற்றச்சாட்டு அடங்கிய கடிதத்தை தெரண ஊடகத்திற்கு 25.10.2016ல் அனுப்பியிருந்தார். இந்த குற்றச்சாட்டை தெரண மறுத்திருந்தது. இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றன.
இதையடுத்து கடந்த ஏப்ரல் ஐந்தாம் திகதி ஊடகத்துறை அமைச்சின் செயலாளரினால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் 'விசாரணைகளின் மூலம் தெரண ஊடக வலையமைப்பு தவறிழைத்துள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெரண நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட இந்த கடித விடயத்தை சிரச தொலைகாட்சி ஒளிபரப்பியுள்ளது.
'ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்து ஒன்றை தவறாக வெளியிட்டமை தொடர்பில் தெரண ஊடகத்திற்கு எதிராக நடத்தப்பட்ட சுயாதீன விசாரணை மூலம் அந்த ஊடகம் மீதான 5 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன' என்று வெளிப்படையாக சிரச செய்தி வெளியிட்டுள்ளது.
இதற்கு பதிலடியாக 'இந்த தனிப்பட்ட கடிதம் ஊடக நெறிமுறைகளை மீறி போட்டி ஊடக நிறுவனமான சிரச தொலைக்காட்சியில் இரவு 10 மணி பிரதான செய்திகளில் முதன்மை செய்தியாக ஒளிபரப்பப்பட்டமை ஆச்சரியத்திற்குரியது.
எல்.எம்.ஆர்.பி தரவுகளின் படி தெரண தொலைக்காட்சி முதலாவது இடத்தை பிடித்துள்ள பின்னணியில், பொதுமக்கள் எம்மீது கொண்டுள்ள நன்மதிப்பை சீர்குலைப்பதற்கு போட்டி ஊடக நிறுவனம் முன்னெடுத்துள்ள முயற்சியாக இது' என்று தெரண தெரிவித்திருந்தது.
மேலும் 'இலங்கை மன்ற கல்லூரியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியவற்றை 12.10.2016ல் ஜனாதிபதி ஊடகப் பிரிவு எமக்கு அறிக்கையாக அனுப்பியிருந்தது. அந்த அறிக்கையில்-
´'எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாதுகாப்பு தரப்பை வலுவிழக்க செய்யவோ அல்லது இராணுவத்தின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்கோ தான் செயற்பட போவதில்லை என தெரிவித்த ஜனாதிபதி, கடந்த சில தினங்களுக்கு முன்னர் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள் கடற்படை தளபதி மூவரை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்ற நடவடிக்கை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் என்ற விதத்தில் தான் இணங்கவில்லை எனவும் கூறினார்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதை அடிப்படையாக வைத்தே நாங்கள் செய்தி ஒளிபரப்பினோம். வேறு திரிவுபடுத்தல் எதையும் செய்யவில்லை' என்று தெரண விளக்கம் கொடுத்துள்ளது.
இதையடுத்து இந்த இரண்டு முன்னணி ஊடகங்களுக்கிடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை இந்த நிறுவனங்களின் மோதலை வெடிக்க வைத்ததன் பின்னணியில் சொத்து விவகாரம் உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.
கொழும்பு கோட்டை Echelon Square ல் உள்ள இந்த சொத்து தங்களுக்கு சொந்தமானதென சிரச தொலைக்காட்சியின் தாய் நிறுவனமான மகாராஜா நிறுவனம் உரிமை கோரியிருந்தது.
ஆனால் இந்த சொத்து மகாராஜா நிறுவனத்திற்கு சொந்தமானதல்ல என்று தெரண தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பியிருந்தது. இந்த சம்பவமே மோதல் முற்ற காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த சொத்து விவகாரம் தொடர்பில் செய்தி சேகரிக்க சிரச செய்தியாளர்கள் முன் அனுமதியில்லாமல் 24.03.2017ல் தெரண நிறுவனத்திற்கும் சென்றுள்ளனர்.
இந்த செய்தியாளர்களை தடுத்து வைத்த தெரண ஊழியர்கள் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த சம்பவத்தை இரண்டு ஊடகங்களும் தமக்கு சாதமாக செய்தி வெளியிட்டதோடு போட்டி ஊடகத்தை குற்றம் சுமத்தியிருந்தன.
''அனுமதிக்கு பலமுறை தொடர்பு கொண்டோம் பதில் கிடைக்கவில்லை. எனவே தெரணவின் கருத்தை பதிவு செய்ய அங்கு நேரடியாக சென்றோம்'' என்று சிரச செய்தி வெளியிட்டிருந்தது.
''அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக எமது நிறுவனத்தில் சிரச செய்தியாளர்கள் புகுந்தனர். எனவே நாம் அவர்களை காவல் துறையிடம் ஒப்பதைத்தோம்'' என்று தெரண செய்தி வெளியிட்டிருந்தது.
தொழில் போட்டி இரு முன்னணி ஊடகங்களுக்கிடையே பெரும் மோதலை தோற்றுவித்திருப்பது கவனிக்கத்தக்கதாக உள்ளது.
0 comments:
Post a Comment